கேள்வி: ஐரோம் சர்மிளா வெறும் 90 வாக்குகள்  பெற்றது குறித்து? ஏ.எஸ். இப்ராஹீம் (பரமக்குடி) – மின்னஞ்சல் வழியாக

 2016 ஆகஸ்ட்  மாதம் 9ம் தேதி  கெஜ்ரிவாலை சந்தித்தபின்  தனது 16 ஆண்டு கால உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக் கொண்டபோது, தனது போராட்டம் தோல்வியடைந்து விட்டதாகவும், போராட்ட முறையை மாற்றி, தேர்தலில் போட்டியிட்டு மணிப்பூர் முதல்வராகி, அதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளப் போவதாகவும் ஐரோம் சர்மிளா பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார். 

அடுத்த காட்சி  11-3-2017 ல் 100  வாக்குகள் கூட பெற முடியாமல் அரசியல் வாழ்வில் அதிர்ச்சி  தோல்வியடைந்தார். ஐந்து மருத்துவர்கள், 12 செவிலியர்கள், 2 சிறைத்துறை மருத்துவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்  அடங்கிய சுமார் 40 பேர் அடங்கிய குழு சர்மிளாவைப் பராமரித்து வந்தது. அவரது மூக்கு வழியாக உட்செலுத்தப்பட்ட ஊட்டச்சத்து உணவுக்காக மட்டும் மணிப்பூர் அரசு மாதம் 10 ஆயிரம் ரூபாய் செலவிட்டிருக்கிறது. இத்துடன் மேற்கூறிய 40 அலுவலர்களின் ஊதியத்தையும் சேர்த்துக் கணக்கிடுவோமேயானால்,

ஐரோம் சர்மிளாவைப் பராமரிக்கும் பொருட்டு அரசு ஆண்டுதோறும் சில கோடிகளைச் செலவிட்டிருக்கிறது.  இவையாவும்  சர்மிளாவுக்காக அல்ல.  அரசின்  அடக்குமுறை போக்கும்  சட்டமும் அம்பலப்பட்டு விடக்கூடாதே  என்பதற்காக. நாசித்துவாரமே உணவுக்குழலாக மாற்றப்பட்ட நிலையில், நாவில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடப் படாமலும் மருத்துவமனையின் நிரந்தரத் தனிமையிலும் 16 ஆண்டு காலம் தாக்குப்பிடித்து நின்ற அந்தப் பெண்ணின் உறுதி மணிப்பூர் மக்களுக்குப் பெருமை சேர்த்தது. சர்மிளாவின் 16 ஆண்டு கால உண்ணாநிலைப் போராட்டம், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தையும், அந்த சட்டத்தை நியாயப்படுத்துகின்ற அதிகார வர்க்கம், அரசியல் கட்சிகள், நீதிமன்றம் உள்ளிட்ட இந்த அரசமைப்பையும் கேள்விக்குள்ளாக்கும் போராட்டமாக அது இருந்தது.  மணிப்பூர்  மக்களின்  உயிர் வாழும் உரிமையை  பறித்து 16 ஆண்டுகள் போராடியும் அவரது  கோரிக்கைகள் வெல்லவில்லை. அவராகவேதான் தனது போராட்ட வடிவத்தை திரும்பப் பெற்றுக்கொண்டார்.  ஒரு புறம் நிறுவனமயமாக்கப்பட்ட  அரசு, மற்றொரு புறம் அரசியல் மயமாக்கப்பட்ட மக்கள்.  இந்த இரண்டின்  பலிக்கடாவாக்கப்பட்ட  அபலைப்  பெண்மணி ஷர்மிளா என்றே சுருக்கமாக விளங்கி கொள்ளவேண்டும். 

ஷர்மிளாவுக்கு முன்பே  எத்தனையோ  பேர் அரசியல்  மயமாக்கப்பட்ட மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படாமல்  வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். பொது வாழ்வில்  மிளிர்ந்தால்  வாழ்த்தும்  அவர்களே  அரசியலில் களத்தில்  வந்தால்  வீழ்த்துவது  என்பதே இக்கால   வழமையாக  மாறிவிட்டது. இதில்  நாம் ஐரோம் ஷர்மிளாவை பார்த்து பரிதாபப்படுவதா?   மணிப்பூர்  மக்களை  பார்த்து  பரிதாப்பபடுவதா? என்பது பட்டி மன்றத்துக்கான  நல்ல தலைப்பு  அல்லவா?


Magazine - Other articles

Who's Online

We have 25 guests and 2 members online

  • ScroogeBus
  • ymegywu