தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மற்றும் தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் இணைந்து இந்த நிகழ்வை நடத்தினர்.  

 கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது

 இதில் கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி திரு. அரிபரந்தாமன் கூறும்போது, “நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்தோடு அமையப் பெற்ற இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது எனவும், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் நீட் மட்டுமே தனியார் சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தும் வழியாகவும் இருக்க முடியாது எனவும் விளக்கினார். மேலும் மிக முக்கியமாக அகில இந்திய அளவில் நடைபெறும் பொதுத்தேர்வு மத்திய பாடத்திட்டத்தின் (சிஙிஷிணி) கீழ் நடைபெறுகிறது எனவும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மிகப் பெரும்பாலான மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தின் (சமச்சீர் கல்வி) கீழ் தான் பயின்று தேர்ச்சி பெறுகிறார்கள் எனவும் கூறினார்.

2016 மார்ச் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் 8 இலட்சத்து 33 ஆயிரத்து 680 மாணவர்களும், மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் வெறும் 13 ஆயிரத்து 625 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர் எனவும் சுட்டிக்காட்டினார். கிட்டத்தட்ட 2 விழுக்காடு அளவு மாணவர்கள் கூட மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு தேர்வை எழுதவில்லை என்று தெரிவித்தார். எனவே இப்படிப்பட்ட சமநிலையற்ற சூழலில் நீட் தேர்வு என்பது மாநில அரசின் உரிமையோடு சேர்த்து தமிழக மாணவர்களின் உரிமையையும் பறிக்கும் செயலாக அமைந்துள்ளது என குற்றம் சாட்டினார்.

 பொது பள்ளிகளே தேவை... பொது தேர்வு அல்ல

 பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் மாநில பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது.“நாட்டில் எல்லோருக்கும் பொதுப் பள்ளியே இல்லாத நிலையில் எல்லோருக்கும் பொதுவாக ஒரு தேர்வு என்பது சாத்தியமற்றது” என குறிப்பிட்டார். தொடர்ந்து தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் உட்பட பல்வேறு கல்வி சிந்தனையாளர்கள் கருத்துகளை வழங்கினர். தமிழகத்தில் செயல்பட்டு வரும் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 24 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். நீட் தேர்வு முறையிலிருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டம் ஆளுநரின் ஒப்புமைக்குப் பிறகு இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 254(2)ன் கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். 

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு எந்த தடையும் ஏற்படுத்தாமல் உரிய பரிந்துரைகளை மத்திய அரசு செய்ய வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு என்ற அடிப்படையில் ஒற்றைத் தேர்வு முறையை புகுத்த நினைப்பவர்களுக்கு சாவு மணியாக இந்த கருத்தரங்கம் ஓங்கி ஒலித்தது.

Magazine - Other articles

Who's Online

We have 81 guests and no members online