நெஞ்சம் நிறைந்த எனது ஆசிரியப் பெருமக்கள்

(சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சமரசம் இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எழுதிய கட்டுரை.)

எனது உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த ஆசிரியர்களை நினைவு கூறும் வாய்ப்பை அளித்த சமரசம் மாதமிருமுறைக்கு எனது நெஞ்சார;ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதலில் எழுதத் தொடங்கியதும் சமரசம் இதழில் தான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கட்டுரையை சமரசம் இதழில் மீண்டும் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


எனது ஆசிரியர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். என்னை கவர;ந்த எனது பள்ளிக்கூட ஆசிரியர்கள், கல்லூரியில் எனக்கு பிடித்த பேராசிரியர்கள் இது தவிர எனது மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளுக்கு உந்துகோலாக இருந்த ஆசிரியர்கள்.


செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில்..


நான் சென்னையில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கூடத்தில் படித்தேன். (ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதலில் தொடங்கப்பட்ட ஐந்து பள்ளிக்கூடங்களில் இதுவும் ஒன்று). நான் அப்பள்ளியில் சேர்ந்த போது அருட்திரு வைட் என்ற ஐயர்லாந்து நாட்டவர் முதல்வராக இருந்தார். அவரை தொடர்ந்து அருட்திரு ஜான் பீட்டர் அவர்கள் முதல்வராக இருந்தார். மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களது திறமைகளை மெருகூட்டுவதில் சிறப்பான பணியை அவர்கள் புதிந்தார்கள். அந்த பள்ளிக்கூடத்தில் எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஒவ்வொருவரும் சிறந்த திறன் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களில் பலரும் இப்போதும் எனது நினைவலையில் வந்து போகின்றார்கள். முதலாவதாக எனக்கு 5ம் வகுப்பு வரை தமிழ் பாடம் நடத்திய மாஸ்டர். முதியவர். அவரது பெயர் கூட எங்களுக்கு தெரியாது. அவரை தமிழ் மாஸ்டர் என்று மட்டுமே நாங்கள் அறிவோம். ஆங்கிலோ இந்திய பள்ளிக் கூடத்தில் தமிழுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. நாங்கள் 11வது வகுப்பு தேர்வு எழுதும் போது எங்களுக்கு பாட நூலாக இருந்தது தமிழக அரசு வெளியிட்ட 9வது வகுப்பு தமிழ் பாட நூல் தான். இருப்பினும் நான் இப்போது தமிழில் எழுதுவதிலும் பேசுவதிலும் ஒரளவு தேர்ச்சி பெற்றதற்கு எனது முதல் தமிழ் ஆசிரியராக இருந்த மாஸ்டரை மறக்க முடியாது.


அடுத்து எனது நினைவில் நிற்பவர் சககலா வல்லவராக திகழ்ந்த சாலைபாதர் என்ற ஆசிரியர். மெய்வழிச்சாலை சாமியாரின் பக்தராக இருந்த போதினும் மிக அன்பாக மாணவர்களுடன் பழக கூடியார். இவரது வகுப்புகள் பல நேரங்களில் விவாத மேடையாக மாற்றப்படும். நாட்டு நடப்புகளை மையமாக வைத்து பட்டி மன்றம் போல் வகுப்புகளை நடத்துவார். இந்த விவாதங்களில் நானும் பங்குக் கொள்வேன். எனக்கு லட்சுமணன் (இப்போது இவர் பெங்களுரில் கனரா வங்கியில் அதிகாரியாக உள்ளார்) என்ற பிராமண வகுப்பைச் சேர்ந்த மாணவருக்கும் தான் காரசாரமாக விவாதம் நடைபெறும். லட்சுமணன் எனது நண்பன் தான். ஆனால் வகுப்பில் பல்வேறு தலைப்புகளில் எதிரும் புதிருமான கருத்துகளை சொல்லி நாங்கள் மோதிக் கொள்வோம். ஒரு நாள் இந்த விவாதம் நடைபெற்று முடிந்த பிறகு ஆசிரியர் சாலைபாதர் இதில் பங்குக் கொண்ட ஒவ்வொரு மாணவரையும் பார்த்து நீ எதிர்காலத்தில் இப்படி ஆவாய் அப்படி ஆவாய் என்று சொல்லிக் கொண்டே வந்தவர் என்னை பார்த்து எதிர்காலத்தில் நீ மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதியாக நீ ஆவாய் என்று அவர் சொன்னது அவ்வப்போது எனது நினைவுகளில் வரும்.


செயின்ட் மேரிஸ் பள்ளியில் எங்களுக்கு அறிவியல் பாடத்தை தனித்தன்மையுடன் நடத்திய பால்ராஜ், கணிதத்தை நடத்திய நவமணி, பூகோள வகுப்பு நடத்திய இம்மேனுவல், எனது ஆங்கிலத்திற்கு கூர்மை தீட்டும் வகையில் வகுப்பு எடுத்த ரோட்ரிக்ஸ் இவர்கள் அனைவரும் என்றும் என்னால் மறக்க முடியாதவர்கள்.


இது தவிர ஆங்கிலே இந்தியன் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலப் பாடம் கல்லூரி தரத்திற்கு இருக்கும். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் எனது வகுப்பு தோழர் ராயன் சாம்ராஜ் அவர்களின் சித்தப்பா ராயன் அமல்ராஜ் அவர்களும் எனது நினைவிற்கு வருகிறார். அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் விளையாட்டு பிரிவு ஆசிரியராக அப்போது இருந்தார். சேக்ஸ்பியர் உட்பட பல ஆங்கில பாடங்களுக்கு அவர் எங்களுக்கு அளித்த விளக்கங்கள் மறக்க இயலாதவை.


புதுக் கல்லூரியில்...


பள்ளி படிப்பை முடித்து விட்டு சென்னை புதுக்கல்லூரியில் புதுமுக வகுப்பு இளங்கலை வணிகவியலும் நான் படித்த போது எங்களுக்கு அக்கௌண்டன்சி என்னும் வாணிப கணக்கு நடத்திய வி.எல். சாஹித் அவர்களை என்னால் மறக்க முடியாது. இப்போது பள்ளிக்கூடத்திலேயே அக்கௌண்டன்சி பாடங்கள் நடத்தப்படுகின்றன. அப்போது கல்லூரியில் தான் முதன்முதலாக அக்கௌன்டன்சி படிக்கும் நிலை. சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே வகுப்பு நடத்த வந்த வி.எல். சாஹித் அவர்கள் அந்த வகுப்பை நடத்திய விதம், மிக எளிமையாக அனைவரும் புரியும் வகையில் சொல்லி தந்த பாணி அந்த பாடத்தை நெஞ்சில் நிறுத்தியது. இவர; நடத்திய பாட முறை எனக்கு பிற்காலத்தில் நான் கல்லூரி ஆசிரியராக சேர்ந்த போதும் பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது. நான் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் சேரும் செய்தி அறிந்த புதுக்கல்லூரியின் பொருளாதாரத் துறையின் தலைவராக பணியாற்றி ஒய்வுப் பெற்ற முனைவர் த. அப்துல் ரஹ்மான், கல்லூரி ஆசிரியராக எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு சில டிப்ஸ்களை கொடுத்தார். அதில் ஒன்று உங்கள் படிப்பு காலத்தில் உங்களை கவர்ந்த ஆசிரியர் ஒருவரின் பாடம் எடுக்கும் முறையை அப்படியே பின்பற்றுங்கள் அது நல்ல தொடக்கமாக இருக்கும் என்றார். அவர் அப்படி சொன்னதும் எனது நினைவுக்கு வந்தது வி.எல்.சாஹித் அவர்களின் வகுப்புகள் தான். அதனையே அப்படியே பின்பற்றி நானும் பாடம் எடுக்க தொடங்கி மாணவர்களை எனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தேன். வி.எல்.சாஹித் அவர்கள் முதுகலைப் பட்டம் படிக்காத பி.காம். படித்த பயிற்றுனர் (Tutor) மட்டுமே. ஆனால் அவரிடம் பெரிய பட்டங்களை பெற்ற பேராசிரியர்கள் கூட சந்தேகங்களை கேட்டு தெளிவுப் பெறுவதை நான் பார்த்துள்ளேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரியில் படிக்கும் அவரது உறவினர் தொடர்பாக என்னை பார்க்க வந்தார்.. அது எனக்கு மிகவும் பரவசமான சந்திப்பாக அமைந்தது. அவரிடம் நான் உங்கள் பாணியில் தான் நானும் வகுப்பு எடுக்கத் தொடங்கினேன் என்று சொன்னப் போது மனம் நெகிழ்ந்தார்.


புதுக் கல்லூரியில் என்னை பெரிதும் கவர்ந்த மற்ற பேராசிரியர்கள் சி.கலிமுல்லாஹ் மற்றும் கணித பேராசிரியர் ஊட்டி அப்துல் ரஷீத். முன்னவர் புள்ளியியலும், பின்னவர் கணிதமும் நடத்திய பாங்கு எம்.பி.ஏ. படிக்கும் போதும் பெரிதும் கை கொடுத்தன. இதன் பிறகு நான் பேராசிரியராக பணியாற்றும் போது Statistics மற்றும் Operation Research பாடம் நடத்துவதற்கு அவர்களது வகுப்பு எடுக்கும் பாணி எனக்கு மிகவும் உதவியது. எனது எம்.பில். ஆய்வு வழிகாட்டி பேராசிரியர் ஜி. சாகுல் ஹமீது மற்றும் முனைவர் ஆய்வு வழிகாட்டி முனைவர் ஏ. அப்துல் ரஹீம் ஆகியோரும் என் நினைவில் நிற்பவர்கள். புதுமுக வகுப்பில் பொருளாதார வகுப்பு நடத்திய பேராசிரியர் குளச்சல் அப்துல் ரஹீம், பேராசிரியர் சந்தானகோபாலன், பேராசிரியர் நூஹ் அப்துல் காதர் ஆகியோர் நினைவில் நிற்பவர்கள்.


சென்னை பல்கலைகழகத்தில்...


சென்னை பல்கலைகழகத்தின் நிர்வாக அறிவியில் துறையில் (Department of Management Studies) எம்பிஏ படித்தேன். அப்போது அதன் இயக்குனராக இருந்நத ஆர்விஆர் சிவஞானம், பேராசிரியர்கள் டி.வி. சுரேஷ் குமார் மற்றும் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் நினைவில் நிற்பவர்கள்.


சமுதாய பணியில்...


எனது சமுதாயப் பணியில் நான் நினைவு கொள்ளும் ஆசிரியர்களில் ஜமீல் சாஹிப் முதன்மையானவர். மண்ணடியில் உள்ள எனது வீட்டிற்கு காலையிலேயே வந்து அவர் என்னிடம் பேசியவை அனைத்தும் வகுப்புகளாகவே அமைந்தன. எனது எழுத்துக்கள் மற்றும் உரைகளின் வித்துகளாக அவை அமைந்தன. இதே போல் கவிஞர் மூசா காக்கா அவர்களையும் எனது ஆசிரியர்களாகவே கருதுகிறேன். அங்கப்பன் நாயக்கன் தெரு பள்ளிவாசலில் அமைந்திருந்த மத்ரசாவில் தஜ்வித் முறையில் குர்ஆன் கற்க எனக்கு கற்பித்த அதிராம்பட்டணம் உமர் லெப்பையும் மறக்க முடியாத எனது ஆசிரியர்களில் ஒருவர்.
ஆசிரியர்கள் இளைய சமுதாயத்தை உருவாக்குவதில் மிக முக்கியமானவர்கள். எனக்கு அமைந்த ஆசிரியர்கள் மிகச் சிறப்பானவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும்.