சமுதாய கண்மணிகளே அக்டோபர் 07ல் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு;

சமுதாய கண்மணிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் பொழியப்பட பிரார்த்தித்துத்தொடங்குகிறேன்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இக்கடிதம் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பேரூவகை அடைகிறேன்.

இடையில் நான் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட வேளையிலும், எனது அருமைதந்தையார் மரணித்த தருணத்திலும் நேரிலும் தொலைப்பேசி, சமூக வலைத்தளங்கள் வழியாகவும் நலன்விசாரித்த, ஆறுதல் சொன்ன, பிரார்த்தித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்தநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் உங்கள் அனைவருக்கும் அருள் செய்யட்டும். நமதுஅமைப்பு, கட்சி, தோழமை கட்சிகள் மற்றும் அமைப்புகளைத் தாண்டியும் பல தரப்பட்ட மக்கள் இத்தருணங்களில் தங்கள் அன்பைப் பொழிந்தார்கள். இது எனக்குத் தனிப்பட்ட முறையில் காட்டிய அன்புஎன்பதை விட நமது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மீதான அன்பையும் பாசத்தையும் தான் வெளிப்படுத்தியது என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.

தற்போது ஓய்விற்கு விடை கொடுத்து விட்டு களத்திற்கு செல்லும் கட்டாயம் வந்து விட்டது. ஆம் தமிழகத்தின் நடுநாயகமாக இருக்கும் திருச்சி மாநகர் நம்மையெல்லாம் அழைக்கிறது. புதிய வரலாறுபடைக்க தமிழகத்தின் பட்டித் தொட்டியெல்லாம் களம் இறங்கி நமது நாட்டின் பன்மை பண்பாட்டின் அடிநாதமாக விளங்கும் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க அக்டோபர் 7 வரை வரும் ஒவ்வொருநொடியையும் நாம் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

1999 ஜீலை 4 அன்று தாய் கழகமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சென்னை கடற்கரை சீரணிஅரங்கில் வரலாறு படைத்த "முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டை" நடத்தியது.

2004 மார்ச் 21ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தருவாயில் அனைத்திந்திய அளவில் முஸ்லிம்களுக்குக்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கோரி "தஞ்சாவூரில் எழுச்சி மிக்க பேரணி"யைநடத்தியது

2007 மார்ச் 7ல் நீதியரசர் சச்சார் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும், நீதியரசர் ரங்கநாத்மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையைத் தாக்கல் செய்யக் கோரியும் தலைநகர் "டெல்லியில்நாடாளுமன்றம் நோக்கி பேரணியும்" அனைத்திந்திய அளவிலான பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்குகொண்ட "சமூக நீதி கருத்தரங்கத்தையும் தமுமுக வீரியத்துடன் நடத்தியது.

2007 நவம்பர் 24ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமுமுகவின் நீண்ட நாள் கோரிக்கையைஏற்றுத் தமிழகத்தில் முஸ்லிம்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கியதமிழக முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் "நன்றி அறிவிப்புமாநாடு" உணர்வு பொங்க நடந்தேறியது.

2009 பிப்ரவரி 7 அன்று "தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்க விழா மாநாடு" திக்கெட்டும்மாற்று அரசியலின் புதிய விடியலை அறிமுகப்படுத்தியது.

இந்த வரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருச்சி மாநகரில் ஒரு உன்னத நோக்கத்திற்காகமனிதநேய மக்கள் கட்சி அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டை அரங்கேற்றவுள்ளது.
நாம் நடத்தும் மாநாடு குறித்து மனிதநேய கண்மணிகள் களத்தில் பல்வேறு வகையில் விழிப்புணர்வைஏற்படுத்தி வருகிறீர்கள்.

மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து சுவரெங்கும் விளம்பரங்கள், தொண்டர்களை மாநாட்டுப் பணிக்குமுடுக்கிவிட மாவட்டந்தோறும் செயல்வீரர் கூட்டங்கள்,தெருமுனைக்கூட்டங்கள்,கண்கவர்
துண்டுப் பிரசுரங்கள்,விளக்கு கம்பத்தில் ஒட்டும் சுவரொட்டிகள், மகிழுந்துகளில் இரண்டு சக்கரவாகனங்களில் ஆட்டோக்களில்,வீட்டுக் கதவுகளில் ஒட்டும் ஸ்டிக்கர்கள் என விதவிதமாக நீங்கள்பொறுப்புனர்ந்து களமாடும் செய்திகளை சமூக வலைத்தளங்கள் உலகிற்கு எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கிறது,

அந்த வரிசையில் நமது சேலம் (மேற்கு) மாவட்ட தலைவர் கவிஞர் இளந்தோழன் என்ற முஹம்மது ரயீஸ்தினமும் மாநாடு குறித்து கவித்துவம் வாய்ந்த செய்தியை முகநூலில் பரப்பி வருகிறார். மாநாடு குறித்தஅவரது சிந்தனைகளில் ஒன்று:

அரசியல் சாசனம்
இந்த நாட்டின் உயிரெழுத்து !
மிரட்டல் அரசியலா
இந்தத் தேசத்தின் தலையெழுத்து??

இவரது வரிகளை மெய்ப்படுத்தும் வகையில் இந்த வாரம் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் நமதுஅரசியலமைப்புச் சட்டத்தை இதே வடிவில் பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 25ம் பிரிவு நமது நாட்டின் குடிமக்கள் தாம் விரும்பும் எந்தவொருமதத்தையும் கடைப்பிடிக்கவும், பிறருக்கு எடுத்துரைக்கவும் உரிமை அளித்துள்ளது. இந்தப் பிரிவின்அடிப்படையில் எந்தவொரு இந்திய குடிமகனும் தான் விரும்பும் மதத்தின் அடிப்படையில் தனது திருமணவாழ்வை அமைத்துக் கொள்ள உரிமை பெற்றுள்ளான். ஆனால் மத்தியில் ஆளும் பாஜகவும் அதன் தாய்அமைப்பான ஆர்எஸ்எஸ்சும் இந்த உரிமையைப் பறிக்கும் வகையில் பொதுச் சிவில் சட்டத்தை அனைவர்மீதும் திணிக்கும் லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். அதற்கான பல்வேறு முயற்சியில்ஈடுபட்டார்கள். மத்தியில் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவரது அரசு அமைத்த புதிய தேசீய சட்டவாரியத்திடம் நாட்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியத்தை ஆய்வு செய்யுமாறுகேட்டுக் கொண்டது. சட்டவாரியம் பல தரப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளிடம் இதுகுறித்து கருத்துகளைக் கேட்டறிந்தது. இதன் பிறகு தனது பரிந்துரையை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. அதில்

“எல்லா மதத்திருக்கும் ஒரே சிவில் சிவில் சட்டம் (Uniform Civil Code) தேவையற்றது" "ஒரே அரசின் கீழ் பலரும்ஒன்றாக வாழ்கிற ஒரு நாடு (A unified country) எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக (uniform) இருக்க வேண்டியஅவசியமில்லை"

அதாவது ஒரே நாட்டில் வசிக்கும் பல நம்பிக்கைகள் கொண்ட மக்களுக்கும் எல்லாவற்றிலும் ஒரேமாதிரியாகச் சட்டம் இருக்க வேண்டும் என்பதல்ல என நீதியரசர் பி.எஸ்.சவ்ஹான் தலைமையிலான சட்டஆணையம் கூறியுள்ளது.

எந்த அம்சத்திலும் தங்களை வித்தியாசமாக வெளிப்படுத்திக் கொள்ளும் உறுதியை மக்களுக்குஅளிக்கும்போதே 'மதச்சார்பின்மை' என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் எனவும் ஆணையம் கூறியுள்ளது.

மதம் மற்றும் பிராந்திய (மாநில) அடிப்படைகளில் நிலவும் பன்மைத் தன்மைகள் என்பன பெரும்பான்மைவாதத்தின் உரத்த குரலால் அமுக்கப்பட்டுவிடும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது எனவும் சட்ட ஆணையம்கூறியுள்ளது.

எல்லாவற்றிலும் ஒரே சீர்மை (Uniformity) இருக்க வேண்டும் என்கிற ரீதியில் கொடுக்கப்படும் அழுத்தம்பண்பாட்டுப் பன்மைத்தன்மைகளுக்கு எதிராகப் போய் அதுவே ஒரே நாடு என்கிற தேச ஒற்றுமையின்(territorial integrity) சிதைவுக்குக் காரணமாகி விடக் கூடாது - என்றும் சட்ட ஆணையம் அறிக்கை முன்வைக்கும்கருத்துக்கள் கவனத்துக்கு உரியன.

சீர்மையை நோக்கிய முன்னோக்கிய பயணத்திற்கான ஒரே வழி எலோருக்கும் ஒரே சிவில் சட்டம்கொண்டு வருவதுதான் என்பதல்ல எனவும் சட்ட ஆணையம் கூறியுள்ளது.

சட்ட ஆணையத்தின் இந்தப் பரிந்துரைக்கு காரணம் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் நமதுஅரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகள் தான். இந்த அரசியலமைப்புச் சட்டம் இருக்கும்வரை பாஜக ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் 'ஒரே நாடு' 'ஒரே மதம்' 'ஒரே சிவில் சட்டம்' என்ற முழக்கம் ஏட்டுசுரைக்காயாக மட்டுமே இருக்கும். எனவே தான் அரசியல் சாசனச் சட்டத்தை தகர்க்க பல்வேறு மறைமுகசதிகளை அரங்கேற்றி வருகிறார்கள். அதனை முறியடிக்கவே மனிதநேய மக்கள் கட்சியில் திருச்சியில்நடத்துகிறது அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு.
இந்த வாரம் நடைபெற்ற மற்றொரு நிகழ்வு பிரதமர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள்என்று குற்றஞ்சாட்டி அவர்களுக்கு நகர்ப்புற நக்ஸ்லைட்கள் என்று பட்டம் சூட்டி தம் வாழ்நாளை மக்கள்உரிமைக்காக அர்ப்பணித்துக் கொண்ட ஐந்து சமூக செயற்பாட்டாளர்கள் புனே காவல்துறையினரால்கைது செய்யப்பட்டார்கள். இவர்களை விடுதலைச் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சமூகஆர்வலர்கள் தாக்கல் செய்த வழக்கில் இவர்களைச் சிறைக்கு அனுப்பக் கூடாது வீட்டுக் காவலில் மட்டும்வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள்சொன்ன கருத்துகள் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படுவதின் அவசியத்தை உணர்த்தியது.

“கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சமூகத்தின் மாற்றத்திற்காகப் போராடுபவர்கள். மாற்றுக்கருத்துதான் இந்தச் சமூகத்தை காக்கும் கருவி. அதனை அடக்க முற்படும் பட்சத்தில் அது தானாகவெடித்துவிடும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்தக் கருத்தின் பின்னணியில் அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது பிரிவு(கருத்துச் சுதந்திரம் தொடர்பானது) உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் இந்த பாதுகாப்பை தரும்இத்தருணத்திலேயே இந்த ஐந்து சமூக செயற்பாட்டாளர்கள் மட்டும் அல்ல நமது தமிழகத்தில் திருமுருகன்காந்தி, தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட சோபியா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படும் போது இந்தபாதுகாப்பு இல்லையெனில் நிலைமை என்னவாகும் என்பதை எண்ணிப் பாருங்கள். தூத்துக்குடி விமானநிலையத்தில் தனக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியாவிற்கு எதிராக பாஜக மாநிலத்தலைவர்மருத்துவர் தமிழிசை ஆடிய ஆட்டமே கருத்துச் சுதந்திர உரிமையைப் பறிக்க சங்பரிவார் கொண்டுள்ளவெறியுணர்வின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

எனவே தான் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் நியாயமான உரிமைகளைத் தரும் அரசியலமைப்புச்சட்டத்திற்கு சங்பரிவார் அமைப்புகளினால் ஏற்பட்டுள்ள ஆபத்துகளிலிருந்து மீட்க மனிதநேய மக்கள்கட்சி அழைக்கிறது திருச்சி மாநகருக்கு.

வீதியில் இங்குவோம் வீரியத்துடன்...!

மக்களைத் திரட்டுவோம் எழுச்சியுடன்....!

காவிரிகரை திருச்சியில் புதிய வரலாறு படைத்திடுவோம்,

பல்லாயிரம் உயிர்தந்து நம் முன்னோர்களான விடுதலைப் போராட்ட வீரர்களின் குருதியால் உருவானநமது அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதியேற்றிட தயாராவீர் ! தயாராவீர் !!

மீண்டும் சந்திப்போம் அடுத்த வாரம் மேலும் பல தகவல்களுடன்.
உங்கள் தொண்டன்
எம் எச் ஜவாஹிருல்லா