சமூக வலைத்தளங்களை பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் ( சமுதாய கண்மணிகள்)

சமுதாய கண்மணிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இறைவனின் பேரருளால் இம்மடல் உங்கள் அனைவரையும் துடிப்பான இறைநம்பிக்கையுடனும் வளமான ஆற்றல்களுடனும் சந்திக்க பிரார்த்தித்து தொடங்குகிறேன்.

தகவல்யுகத்தில் நாம் இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி மனிதகுலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளித்திருக்கிறது என்பதில் மாற்று கருத்து இருக்க இயலாது. சென்னையிலிருந்து ஒரு மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் இருப்பவரிடம் பேசுவதற்கு முன்னொரு காலத்தில் டிரங்கால் எனப்படும் தொலைதூர தொலைபேசி தொடர்புக்கு முன்பதிவுச் செய்து இரு முனையிலும் இருப்பவர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து அதுவும் 3 நிமிடம் மட்டும் பேசிய காலம் மலையேறிவிட்டது. தற்போது தமிழ்நாட்டிற்குள் மட்டுமல்ல உலகின் எந்த பகுதியில் வசிப்பவருடன் நொடி பொழுதில் தகவல்கள் பரிமாறிக் கொள்ளும் வகையில் தொழில் நுட்பம் கையடக்கமாகிவிட்டது.


இன்று முகநூல், கட்செவி (வாட்ஸ்அப்), கூகுள் பிளஸ், இன்ஸ்டாகிராம், ஸ்கைப் என்று வகை வகையான சமூக வலைத்தளங்கள்அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிதாக கிடைக்கின்றது.


இப்படி பெருகியிருக்கும் இந்த சமூக வலைத்தளங்களை பொறுப்புணர்வுடனும், கடமை யுணர்வுடனும், பந்தங்களை நெருக்கமாக்கி கொள்வதற்கும் நிச்சயம் நாம் பயன்படுத்த வேண்டும். பொது ஊடகங்கள் செய்திகளை மறைக்கும் போது அல்லது திரிக்கும் போது சமூக வலைத்தளங்கள்மூலம் உண்மைகளை உலகிற்கு எடுத் துரைக்க அவற்றை நன்றாக பயன்படுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
ஆனால் இன்று சமூக வலைத்தலங்களின் பெருக்கம் சில சந்தர்ப்பங்களில் நன்மையை விட தீமைக்கே அதிகம் வழி வகுக்கின்றன. இது குறித்து விரிவாக நாம் பல எடுத்துக்காட்டுகளை கூறலாம். எவ்வித பொறுப்புணர்வுமின்றி சமூக நல்லிணக்கத்தையும், கட்டுக்கோப்பையும் குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்பும் கூட்டம் பல்கி பெருகி வரும் நிலை சமூக அக்கறையுள்ளவர்களை பெரிதும் கவலைக் கொள்ள வைத்துள்ளது.


எடுத்துக்காட்டாக முசாப்பர் நகரில் நடைபெற்ற கலவரத்தினை தூண்டி விட்டது சமூக வலைத் தளங்களில் பரப்பட்ட ஒரு காணொலி. பாகிஸ்தானில் நடை பெற்ற நிகழ்வை முசாப்பர் நகர் மாவட்டத்தில் நடைபெற்றதாக சித்தரிக்கப்பட்டது. இதே போல் முஸ்லிம்கள் தரப்பிலும் ஒரு மிகச் சிறிய சம்பவத்தை பூதகரமாக சித்தரித்து பதட்டத்தை உருவாக்கும் போக்கையும் ஒரு சில பொறுப்பற்றவர்கள் செய்து வரும் சூழலை பார்க்கிறோம்.


இது ஒரு புறம் என்றால் சமூக வலைத்தளங்களின் வரவு குடும்பத்தில் தொடங்கி ஊர் அமைப்பு முதல் சமூக அமைப்புகள் வரையுள்ள அதன் உறுப்பினர்களிடையே உறவுகளை நெருக்கமாக்குவதற்கு பதிலாக தூரமாக்கி வருகின்றது என்பதும் எதார்த்தமான உண்மையாக இருக்கின்றது. குடும்ப உறுப்பினர்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயும், கணவன் மனைவிக்கு இடையே, சகோதர சகோதரிகளுக்கிடையே பெரும் இடைவெளியை சமூக வலைத்தளங்கள்ஏற்படுத்தியுள்ளன.


இதே போன்று ஒரு சமூக அமைப்பு அல்லது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடையே அது பெரும் பிணக்கை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. மனிதர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயற்கை. ஆனால் ஒரு குடும்ப உறுப்பினர்களிடையே அல்லது ஒரு அமைப்பின் உறுப்பினர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் பேசி தீர்த்துக் கொள்ளாமல் பொது வெளியில் சமூக வலைத்தளங்களில் தங்கள் உள்ளகுமுறல்களை கொட்டும் போது அது பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக அது பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கி விடுகிறது. இதனால் குடும்பத்தின் கட்டமைப்பு அல்லது ஒரு அமைப்பின் கட்டமைப்பு குலையும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.


பிரச்னைகள தொடர் புடையோரிடம் நேரில் பேசும் போது நிச்சயம் நல்ல தீர்வு ஏற்படும். பிரச்னைகளை தீர்க்க விரும்புவோர் இந்த வழிமுறையை தான் கையாள்வார்கள். ஆனால் தாங்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக ஒரு சமூக கட்டமைப்பபை அல்லது குடும்ப கட்டமைப்பை சீர்குலைக்கும் தீய எண்ணம் கொண்டவர்கள் தான் தாங்கள் எண்ணியதையெல்லாம் பொது தளத் தில் பதிவுச் செய்து தங்களை தாழ்த்திக் கொள்வதுடன் கட்டமைப்பை சீர்குலைக்கும் நாசவேலையையும் செய்கிறார்கள். இத்தகையோர் குடும்ப நலன் அல்லது அமைப்பின் நலன் ஆகியவற்றைவிட தன்னலனே தலையாயது என்ற அடிப்படையில் செயல்படுபவர்கள் என் பது வெளிப்படையான உண்மை யாகும்.


நமது கழகத்தில் பல்வேறு தளங்களில் கிளை பொதுக் குழு தொடங்கி தலைமை பொதுக் குழு வரை கருத்துச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பது போல் வேறு கட்சிகளிலோ அல்லது அமைப்புகளிலோ ஒப்பிட்டளவில் கிடையாது என்பது தான் எதார்த்தமான உண்மை. இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் தங்கள் கருத்துகளை முகநூல் அல்லது கட்செவி அல்லது வேறு சமூக வலைத்தளங்களில் பகிர்வது கட்டுக்கோப்பை குலைக்கும் பொறுப்பற்ற செயலாகும்.


இத்தகைய போக்கு ஆரோக்கியமானது அல்ல என்பதை சகோதரர்கள் உணரவேண்டும். எந்த குறையாக இருந்தாலும் அதனை உரிய வகையில் தங்கள் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். அங்கு தீர்வு கிடைக்கவிலையெனில் மேல்மட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கு அதனை எடுத்துச் செல்ல வேண்டும். இது தான் நமது அமைப்பு நிர்ணயச் சட்டம் வகுக்கும் வழிமுறையாகும்.


இந்த வழிமுறையை மீறுவோர் அமைப்பின் கட்டுக்கோப்பையும் ஒழுங்கையும் மீறுவோராக தான் இருப்பார்கள்.அமைப்பு ரீதியான பிரச்னைகள் குறித்து தனது மனதில் பட்டதையெல்லாம் முகநூல் வாட்ஸ்அப் போன்ற பொது வெளியில் பரப்புவோர் அமைப்பின் நலனுக்கு எதிராகவும் சமுதாய கட்டமைப்பை பலவீனப்படுத்தும் வகையிலும் செயல்படுபவர்களாகவே கருதப்படுவர்.


"சமுதாயத்தைக் குறித்து கவலைக் கொள்ளாதவன் என்னைச் சார்ந்தவனல்லன்" என்பது நபிமொழி.
விசுவாசிகளே! நீங்கள் ஒருவரையருவர் பலப் படுத்திக் கொள்ளுங்கள்...."(திருக்குர்ஆன் 3:200)


"ஒருவருக்கொருவர் நீங்கள் வெறுப்பு கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் உறவுகளை துண்டித்து நடக்காதீர்கள். ஒருவருக்கொருவர் நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கட்டளை இட்டிருப்பது போல் அல்லாஹ்வின் அடியார்களாக - சகோதரர்களாக இருங்கள்.."(புகாரி, முஸ்லிம்)


"கருத்து முரண்பாடு கொள்ளாதீர்கள். ஏனெனில் உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் கருத்து முரண்பட்டு கொண்டார்கள். அதனால் அழிந்து போனார்கள்." (புகாரி)


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவர் எனக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந் தவராவார். எவர் எனக்கு மாறு செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். எவர்தலைவருக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். எவர் தலைவருக்கு மாறுசெய்கிறாரோ அவர் எனக்கு மாறுசெய்தவராவார். தலைவர் ஒரு கேடயம். அவருக்குக் கீழிருந்து போரிடப்படும்; அவர் மூலம் பாதுகாப்பு பெறப்படும். அவர் (தன் தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறை(யச்ச) உணர்வைக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்து கொண்டால் அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதுவல்லாத (தீய) வற்றை அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர் மீது(ம்) சாரும்.அறி : அபூஹ§ரைரா (ரலி), நூல் : புகாரி (2957) பொறுப்புணர்வுடனும், சமூக கட்டமைப்பை பலப் படுத்தும் வகையிலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்து வோமாக.