அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு காலத்தின் கட்டாயமாகிறது-சமுதாய கண்மணிகளே

சமுதாய கண்மணிகளே  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
திருச்சி மாநகரில் அக்டோபர் 7 அன்று நமது கட்சியின் சார்பாக நடைபெறவுள்ள அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாட்டிற்கான பணிகளை சுறுசுறுப்பாக நீங்கள் ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் உங்களை இந்த மடல்வழியாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த வேளையில் 35 நாடுகள் விடுதலைப் பெற்று புதிய அரசமைப்புச் சட்டங்களைதங்கள் நாடுகளுக்காக வகுத்துக் கொண்டன. இந்நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று. நமது நாடு விடுதலை அடைந்தவேளையில் நமது நாட்டிற்காக அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அரசியல் சாசன நிர்ணயச் சபை (Constitutional Assembly) உருவாக்கப்பட்டது. 248 உறுப்பினர்கள் அதில் இடம் பெற்றார்கள். (இவர்களில் சென்னை மாகாணத்திலிருந்துகாயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில், கே டி எம் இப்ராஹீம், மகபூப் அலி பேக் மற்றும் போக்கர் சாஹிப் ஆகியமுஸ்லிம் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தார்கள்). 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் கடும் உழைப்பிற்குப் பிறகு 1949ம்ஆண்டு நவம்பர் 26 அன்று நமது அரசமைப்புச் சட்டம் இறுதிச் செய்யப்பட்டது. ஜனவரி 26, 1950ம் ஆண்டு நமது அரசமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.

அரசியல் சாசன நிர்ணயச் சபை அரசியலமைப்புச் சட்டத்தை இறுதிச் செய்யப்பட்ட அந்தத்தருணத்தில் அவைக்கு வெளியே மழை பெய்துக் கொண்டிருந்தது. நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் நனைந்துகொண்டிருந்தது. இந்தியாவை நேசித்த மக்கள் புதிய அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டதை கொண்டாடிக்கொண்டிருந்த அந்த வேளையில் ஒரு ஆதிக்க கூட்டம் மட்டும் பெரும் துக்கத்தில் முழ்கியது. அவர்களது துக்கத்தை“ஆர்கனைசர்” என்ற அவர்களது ஆங்கில வார இதழில் நவம்பர் 30 1949ல் (அதாவது அரசியல் நிர்ணயச் சபை அரசமைப்புச்சட்டத்தை இறுதிச் செய்த 4 நாட்கள் கழித்து) வெளியான தலையங்கம் பிரதிபலித்தது. அந்தத் தலையங்கத்தில் “பாரதத்தின்புதிய அரசமைப்புச் சட்டத்தில் பாரதிய பண்பாடு குறித்து எதுவும் இல்லை. பிரிட்டன் அமெரிக்கா கனடா மற்றும் இன்னும்பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கலவையாகத் தான் அரசமைப்புச் சட்டம் உருவாக்கியுள்ளார்கள். பண்டையகால பாரதீய அரசமைப்புச் சட்டங்கள் அப்போது இருந்த நிறுவனங்கள், சொல்லாக்கங்கள் முதலியவை குறித்து எவ்விதசுவடு கூட இந்த அரசமைப்புச் சட்டத்தில் இல்லை. பண்டைய பாரதத்தில் உருவாகிய அரசமைப்புச் சட்டம் குறித்து எவ்விதகுறிப்பும் அதில் இல்லை. பண்டைய கிரேக்க சட்டங்களுக்கு வெகு காலத்திற்கு முன்பாக மனுஸ்மிருதி எழுதப்பட்டது. இன்றைய நாள் வரை மனுஸ்மிருதி உலகில் போற்றப்படுகிறது. அது மட்டுமல்ல அதற்கு கீழ்ப்படியவும் அதன்படிநடக்கவும் மக்கள் தயாராக உள்ளார்கள். ஆனால் நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு மனுஸ்மிருதிஒன்றுமே இல்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நமது அரசமைப்புச் சட்டத்திற்கு பதிலாக மக்களிடையே பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பித்து பாரபட்சம் காட்டும் மனுஸ்மிருதி நாட்டின் சட்டமாகஅமைய வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் என்ற அந்த ஆதிக்க அமைப்பின் விருப்பம். அது நிறைவேறாத சூழலில்தொடக்கம் முதல் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ்அமைப்பின் விருப்பமாக அமைந்துள்ளது.


ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்தவர் மாதவ் சாதசிவ் கோல்வால்கர். இவர் 1940-1973 வரைஆர்எஸ்எஸ் தலைவராக இருந்தவர். இவர் எழுதிய Bunch of Thoughts (ஞான கங்கை) என்ற நூலில் இந்திய அரசமைப்புச்சட்டம் குறித்துப் பல விமர்சனங்களைச் செய்துள்ளார். அவற்றில் சில:


1. “நமக்கானது என்று சொல்ல எதுவும் இல்லை”
“பல்வேறு மேற்கத்திய நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலிருந்து எடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்ட மாறுபாடுகள் நிறைந்தசிக்கலான ஒரு தயாரிப்பு தான் நமது அரசமைப்புச் சட்டம். நமக்கானது என்று சொல்ல கூடிய எதுவும் அதில் இல்லை. நமதுதேசீய குறிக்கோள் என்ன என்பது குறித்தோ நமது வாழ்வின் முக்கிய நோக்கம் என்ன என்பது குறித்தோ வழிகாட்டக் கூடியஒரு சிறிய வார்த்தை கூட அதில் இல்லை. ஐ.நா. சாசனத்திலிருந்தும் அமெரிக்க மற்றும் பிரிட்டனின் அரசமைப்புச்சட்டங்களிலிருந்து சில அம்சங்கள் எடுக்கப்பட்டு தாறுமாறாக அது தொகுக்கப்பட்டுள்ளது”.

2. கூட்டாட்சி தத்துவத்தை அங்கீகரிக்க முடியாது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையாகக் கூட்டாட்சி தத்துவம்அமைந்துள்ளது. இந்தக் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான கோட்பாடுகளையுடையது ஆர்எஸ்எஸ். தேசீயஒருங்கிணைப்பு குழுமத்தின் (National Integration Council) முதல் கூட்டம் 1961ல் நடைபெற்ற போது அக்கூட்டத்திற்குகோல்வால்கர் பின்வரும் கடிதத்தை அனுப்பினார்: “இன்றைய கூட்டாட்சி முறை அரசு நிர்வாகம் பிரிவினைவாதஉணர்வுகளை வளர்கிறது. ஒரே தேசம் என்ற கோட்பாட்டை அது அங்கீகரிக்க மறுப்பதுடன் அதனை அழிக்கவும் செய்கிறது. கூட்டாட்சி தத்துவம் முற்றிலுமாக துடைத்தெறிந்து அரசமைப்புச் சட்டத்தை தூய்மைப்படுத்தப்பட்டு ஒற்றை நிலை அரசுஉருவாக்கப்பட வேண்டும்.


3. “ஒரே நாடு ஒரே அரசு ஒரே நிர்வாகம் என்ற நிலை வேண்டும்”
கோல்வால்கர் எழுதிய Bunch of Thoughts நூலில் ‘ஒரு முக அரசு வேண்டும்’ என்ற தலைப்பில் கூட்டாட்சி தத்துவத்திற்குஎதிரான கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலிருந்து: “நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் குறிப்பிடும் கூட்டாட்சிதத்துவத்தை ஆழமாகக் குழி தோண்டிப் புதைப்பது தான் நாம் எடுக்க வேண்டிய மிக முக்கியமான வலிமையானநடவடிக்கையாக இருக்க முடியும். பாரதம் என்ற நமது நாட்டிற்குள் சுயாட்சியான அல்லது ஓரளவு சுயாட்சியானமாநிலங்கள் என்ற நிலையை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும். ஒரே நாடு ஒரே அரசு, ஒரே சட்டமியற்றும் அவை, ஒரே நிர்வாகம் என்று பிரகடனம் செய்ய வேண்டும். வட்டார, மொழி, அல்லது வேறு எந்தத் தனி பண்புகளின் சுவடுகள் கூடஇருக்கக் கூடாது. இவையெல்லாம் நமது ஒருங்கிணைந்த அமைதி நிலைக்கு கேடு விளைவிக்கின்றன. ஒற்றை அரசுஉருவாகும் வகையில் அரசமைப்புச் சட்டம் மறு பரிசீலனைக்கு உட்பட்டு மறு வடிவம் பெறட்டும். இதன் மூலம் பல்வேறுஇனக் குழுக்கள், தேசீய குழுக்கள் அனைவரும் ஒருங்கிணைந்த நாடு என பிரிட்டிஷார் செய்து வந்த விஷமத்தனமானபரப்புரையை தற்போதைய தலைவர்களும் சுவீகாரம் செய்து கொண்டார்கள்.”

4. மத்திய ஆட்சி மட்டுமே இருக்க வேண்டும்1954ல் பம்பாயில் கூட்டாட்சி முறையை எதிர்த்து நடைபெற்ற ஒரு மாநாட்டில் உரையாற்றிய கோல்வால்கர் "இந்தியாவில்ஒரே ஆட்சி மத்தியில் மட்டும் இருக்க வேண்டும். மாநிலங்களெல்லாம் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பகுதிகளாகஇருக்க வேண்டும்” இந்தியாவைப் போன்று இரண்டாம் உலகப் போரின் இறுதியில் விடுதலைப் பெற்று தம் நாடுகளுக்குபுதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்திய 35 நாடுகளில் நமது நாட்டைத் தவிர மற்ற நாடுகள்ஜனநாயக பாதையிலிருந்து தடம் புரண்டு தமது அரசமைப்புச் சட்டத்தையும் தலைகீழாக சிதைத்துக் கொண்டார்கள். அந்தநிலை இந்தியாவிற்கு ஏற்பட வேண்டுமென்பது தான் ஆர்எஸ்எஸ் – பாஜக வின் திட்டம் ஆகும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமதர்தம், கூட்டாட்சி தத்துவம் மொத்தத்தில் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்பதற்கு நமதுஅரசமைப்புச் சட்டமே தடையாக உள்ளது எனக் கருதி அதனைத் தூக்கியெறிய சங்கபரிவார் முழு முயற்சியுடன் ஈடுபட்டுவருகின்றது. அதன் பிரதிபலிப்பே நான் மேலே எடுத்துக்காட்டியுள்ள மேற்கோள்கள். கடந்த நான்கரை ஆண்டுகள் மத்தியில்ஆளும் பா.ஜ.க அரசு அரசமைப்புச் சட்டம் தொலைநோக்கு சிந்தனையோடு வகுத்துத் தந்துள்ள உரிமைகளைச் சிதைக்கும்வேலைகளை செவ்வனே செய்து வருகிறது.


இந்தச் சூழலில் நாட்டுப் பற்றுள்ள அனைத்து இந்தியர்களும் ஒன்று சேர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க நமது அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது நமது இன்றியமையா கடமையாகும்.

இந்தக் கடமையை நிறைவேற்றத் தான் நாம் ஒருங்கிணைந்து கரம் கோர்த்து திருச்சியில் திரள இருக்கிறோம்.

அக்டோபர் 7 நெருங்கி வருகிறது
அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு காலத்தின் கட்டாயமாகிறது
ஜனநாயகத்தைச் சிதைக்கவும்
மதச்சார்பின்மையை ஒழிக்கவும்
மாநில உரிமைகளைப் பறிக்கவும்
இந்தி, சமஸ்கிருதம் தவிர ஏனைய இந்திய மொழிகளை அழிக்கவும்
சிறுபான்மையினர் உரிமைகளை நசுக்கவும்
அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்கும் சங்க பரிவாரின் திட்டங்களை
மக்களிடையே அம்பலமாக்குவோம்
திரட்டுவோம் படையை திருச்சியில்

உங்கள் தொண்டன்

எம்.எச். ஜவாஹிருல்லா