ரெட் அலெர்டை தகர்த்தெறிந்த திருச்சி மாநாடு (சமுதாயக் கண்மணிகளே)

சமுதாயக் கண்மணிகளே..! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்கள் அனைவர் மீதும் இறைவனின் பேரருள் பொழியப் பிரார்த்தித்துத் தொடங்குகிறேன்.

எல்லாம் வல்ல இறைவனின் மகாத்தான கருணையினால் ‘ரெட் அலெர்ட்களை’யெல்லாம் தகர்த்தெறிந்து திருச்சியில் திருப்புமுனை மாநாடு நடந்தேறியுள்ளது.

அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாட்டிற்காக மிகக்  கடுமையாகநாம்அனைவரும்உழைத்துக்கொண்டிருந்த அந்த தருணத்தில் தான் ஊடகங்களில் பூதகரமான அந்த அறிவிப்பு வெளியானது. அக்டோபர் 7 அன்று தமிழகத்திற்கு ‘ரெட் அலெர்ட்’. அன்று கன மழை பொழியும். சாலைகள் உடையும். வீட்டை விட்டு யாரும் வெளியில் வரக் கூடாது என்று அனைவரையும் அச்சுறுத்திய அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தோம் என்பது உண்மை. அதே நேரத்தில் இம்மாநாட்டிற்காக நமது கட்சியின் கடைநிலை தொண்டனிலிருந்து மேல்நிலை நிர்வாகிகளின் அபார உழைப்பை பார்த்த பொது மக்கள் இந்த உழைப்பு வீணாகிவிடக்கூடாதே என்று பெரிதும் கவலையுடன் இறைவனிடம் கையேந்தினார்கள். மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த பிறகு உலமாக்கள், தப்லீக் ஜமாஅத் ஊழியர்கள், முதியவர்கள், பெண்கள் என பல தரப்பட்டவர்களும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநாடு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மனமுவந்து தாங்கள் கேட்ட பிராரத்தனையை இறைவன் அங்கீகரித்துக் கொண்டதை நம்மிடம் மகிழ்வுடன் பகிர்ந்துக் கொண்டே வருகிறார்கள்.

அக்டோபர் 7 அன்று திருச்சியில் நடந்தேறியது ஒரு மாநாடு அல்ல. அது 3 இன் 1 மாநாடு. ஆம் காலையில் நமது மாணவர் இயக்கமான சமூக நீதி மாணவர் இயக்கம் நடத்திய மாணவர் சமூகம் எழுகவே என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஒரு மாநாடு போலவே அமைந்தது. தமிழகத்தின் வலுவான மாணவர் இயக்கம் சமூக நீதி மாணவர் இயக்கம் என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.  இதற்காக கடுமையாக உழைத்த மாணவர் இயக்க தம்பிமார்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

மதியம் மாநாட்டின் தொடக்கமாக நடைபெற்ற இளைஞர் அணி பேரணி அனைவரையும் பிரமிக்க வைத்தது. குறுகிய கால பயிற்சியாக இருந்தாலும் மிடுக்கான சீருடையில் இளைஞர் அணியின் கம்பீர அணி வகுப்பு இளைஞர் பட்டாளம் நமது பக்கமே என்பதற்கு சான்று பகர்ந்தது.

மாலையில் மாநாடு திடல் நிரம்பி அதற்கு வெளியிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் சமூக வளைத்தளங்களில் எத்தனை அவதூறுகள் பரப்பட்டாலும் தமிழக மக்கள் நெஞ்சங்களில் அங்கீகாரம்பட்டவர்கள் நாம் தான் என்பதை பாருக்கு எடுத்துரைத்தது.

கடந்த 25 ஆண்டு கால தமிழக வரலாற்றில் எந்தவொரு முஸ்லிம் அமைப்போ கட்சியோ 24 ஏக்கர் நிலப்பரப்பில் பந்தல் அமைத்து மாநாடு நடத்தியது இல்லை. மாநாடு என்பது மாலையில் நடைபெறும் பொதுக் கூட்டம் என்பதை தாண்டி காலையில் மாணவர் அரங்கம், மதியம் இளைஞர் பேரணி மாலையில் மாநாடு என்று 3 இன் 1 பாணியில்  மாநாடு நடத்தியதில்லை. அக்டோபர் 7ல் திருச்சியில் நடைபெற்ற நமது மாநாடு இதனை செய்துக் காட்டியுள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் ஒவ்வொரு நிகழ்வு நடைபெறும் போதும் பெரும் சோதனையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இறுதியில் இறைவன் நமக்கு வெற்றியை அளித்துள்ளான். அதே வரிசையில் அக்டோபர் 7. 2018 லும் மகத்தான வெற்றியை நமக்கு இறைவன் அளித்துள்ளான்.அந்த வல்லவன் இறைவனுக்கே அனைத்துப் புகழும் உரியது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ல் பாபர் பள்ளிவாசல் பிரச்னையில் நீதி கேட்டு நாம் போராட்டம் அறிவிக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பெரும் அளவில் கைது நடவடிக்கைகள் நடைபெறும். ஆனாலும் இறைவன் இந்த இயக்கத்துடன் இருக்கிறான் என்பதற்கு அத்தாட்சியாக தடைகளை மீறி போராட்டங்கள் வெற்றிகரமாக நடைபெறும். இதே போல் 1999ல் நாம் ‘முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு’ என்று அறிவித்து தமிழகம் முழுவதும் கடுமையாக மாநாட்டிற்கான பணிகளை செய்துக் கொண்டிருந்த போது மாநாடு நடைபெறுவதற்கு சில வாரங்கள் முன்பு வெடிக்காத குண்டுகள் தமிழகத்தில் பல்வேறு காவல் ஆணையர் அலுவலகங்கள் அருகில் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லி கைது நடவடிக்கைகள் தொடங்கின. 

தலைவர்கள் அனைவரும் தலைமறைவாக செயல்படும் நிலை ஏற்பட்டது. ஜுலை 4ல் மாநாடு நடைபெறுமா என்பது கேள்வி குறியாக்கப்பட்டது. அப்போதும் இறைவனிடம் கையேந்தினோம். சோதனைகள் விலகின. மாநாடு மாபெரும் வரலாற்றை உருவாக்கியது.

 

1999ல் சென்னையில் நாம் நடத்திய வாழ்வுரிமை மாநாடு ஏற்படுத்திய வரலாறு மீண்டும் 2018ல் திருச்சியில் அரங்கேறியது. ஆம் அம்மாநாடு நடைபெறுவதற்கு முன்பு ஏற்பட்டது போல் சோதனை அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாட்டிற்கும் ஏற்பட்டது. வாழ்வுரிமை மாநாடு நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிப்பு என்ற பெயரில் சோதனை வந்தது. ஆனால் திருச்சி மாநாடு நடைபெறுவதற்கு ஒரு சில தினங்கள் முன்பு ரெட் அலெர்ட் என்ற சோதனை வந்தது. அப்போதும் மக்கள் இறைவனிடம் கையேந்தினார்கள். இப்போதும் மக்கள் இறைவனிடம் கையேந்தினார்கள். தூய்மையான எண்ணத்துடன் கேட்கப்படும் பிரார்த்தனையை இறைவன் மறுப்பதில்லை. ரெட் அலெர்ட் என்று அறிவித்தவர்களே அது விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவிக்க நேர்ந்தது.

சனிக்கிழமை மாலை வரை திருச்சியில் மழை. மாநாடு நடைபெற்ற பொழுது புலர்வதற்கு முந்தைய வேளையில் கூட மழை. ஆனால் அதற்கு பிறகு சுட்டெரிக்கும் வெயில் திருச்சியில் மக்களை வரவேற்றது. மாநாட்டு திடலுக்கு சில கி.மீ. தொலைவில் இருக்கும் ஊர்களில் மழை. ஆனால் திருச்சி மாநகரில் மட்டும் நமது மாநாடு ஒரு துளி மழை கூட இல்லாமல் நடைபெற்றது இறைவன் செய்த மாபெரும் அற்புதம்.

மனிதநேய மக்கள் கட்சியும் அது இந்த மாநாட்டிற்கு வைத்த தலைப்பும் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக ஈர்த்த்து. பாமரனும் அரசமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் நமது சகோதரர்கள் விதவிதமாக மாநாட்டின் கருப்பொருளை பல்வேறு வடிவங்களில் மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். தங்கள் வீட்டு நிகழ்ச்சி என்று உணர்ந்து தமிழகத்தின் அனைத்து சாலைகளும் திருச்சியை நோக்கி திரும்பின. முதியோர் முதல் பச்சிளங் குழந்தைகள் வரை திரண்டார்கள்.

1999ல் வாழ்வுரிமை மாநாடு நடைபெறும் சென்னை கடற்கரை சீரணி அரங்கை நோக்கி நான் மகிழுந்தில் வந்த போது குடும்பம் குடும்பாக மக்கள் வருவதை பார்த்துச் கொண்டே சென்றேன். முதியவர்கள் பேரப்பிள்ளைகளை அழைத்துச் செல்வதையும், தாய்மார்கள் பச்சிளங்குழந்தைகளை சுமந்து வருவதையும் கண்டேன். அதே ஆக்சன் ரீபேளேயை திருச்சியில் மாநாடு திடலை நோக்கி நான் வந்த போது கண்டேன்.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகும் தமிழகத்தில் மிக பெரும் மக்கள் ஆதரவுப் பெற்ற அரசியல் களத்தில் புறக்கணிக்க முடியாத பலம் பொருந்திய மக்கள் ஆதரவு பெற்ற கட்சி மனிதநேய மக்கள் கட்சி என்று அனைவரும் உணரும் வரலாற்றை படைத்தார்கள். இந்தியாவின் பன்மையைச் சிதைக்க மோடி தரப்பினர் முயன்றால் அதற்கு சாவுமணி அடிப்போம் என்று பறைசாற்றினார்கள்.

இரண்டரை மாதங்களாக தம் சொந்தப் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு மிகக்  கடுமையான உழைப்பை இம்மாநாட்டிற்கு செலுத்திய அனைத்து மனிதநேய சொந்தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

இம்மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து இதற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி ஆதரவு வழங்கிய உலமாக்கள், ஜமாஅத் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள். நிதியுதவி அளித்த நல்லுள்ளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

கண்மணிகளே..!

இந்த மாநாடு,  தமிழக மக்கள் மனிதநேய மக்கள் கட்சி மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் அன்பையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நமது பொறுப்புகளும் கடமைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இதனை உணர்ந்து மேலும் வீரியமாகச் செயல்படுவோம். மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தனது அற்புதத்தின் காரணமாக உதவிய இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். மக்கள் உரிமைகளுக்காகத்  தொடர்ந்துகளமாடுவோம். 

ஆளட்டும் அரசியல் சட்டம் ...

வீழட்டும் பாசிச திட்டம்...

 உங்கள் தொண்டன்

எம் எச் ஜவாஹிருல்லா