கடந்த ஆண்டு இறுதியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய ஆளும் பா.ஜ.க அரசின் மோசடி முகத்திரையை கிழித்து தொங்கவிட்டிருக்கிறது “மோடியின் டிஜிட்டல் பாசிசம்” எனும் நூல்.


வினவு இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வந்தவுடன் நாட்டு மக்கள் பொருளாதார தேவைக்காக அல்லல்பட்ட நேரத்தில் பா.ஜ.க வின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டியின் இல்லத் திருமணம் 500 கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக நடத்தியதை கேள்விக்குட்படுத்தி தொடங்குகிறது முதல் கட்டுரை.


கார்ப்பரேட் முதலாளிகளின் கருப்புப் பணத்தை காப்பாற்றவே மோடி அரசின் செல்லாத நோட்டு நாடகம் என்பதனை அம்பலப் படுத்துகின்றன கட்டுரைகள். நவம்பர் 8 இரவு பண மதிப்பிழப்பின் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இதன் பாதிப்பினால் இறந்து போயினர். அவர்களில் 33 பேரின் இறப்பின் காரண பின்னணியை விரிவாக இந்நூல் பதிவு செய்துள்ளது. அவர்களின் மரணங்கள் மோடி அரசினால் நிகழ்த்தப்பட்ட கொலைகள் என நிறுவுகின்றனர்.


இப்படி இறந்தவர்களின் சதவீத பட்டியலை மேற்கோள் காட்டி பகடி செய்த பா.ஜ.க தலைவர்களையும் சாடி, ஏ.டி.எம் வரிசைகளில் நிற்க்கும் மக்களை எல்லயோர ராணுவ வீரர்களோடு ஒப்பீடு செய்ததையும் கடுமையாக விமர்சிக்கின்றன கட்டுரைகள்.யாதின் ஓசா என்ற குஜராத்தின் முன்னாள் எம்.எல்.ஏ மோடியின் அபிமான தொழிலதிபர்கள் பணமதிப்பு நடவடிக்கையை முன்பே தெரிந்துகொண்டு பணத்தை மாற்றிவிட்டனர் என்று மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதையும் அக் கடிதத்தையும் பிரசுரித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முன்னிலால் என்ற கூலித்தொழிலாளி தனது மனைவி இறப்பிற்குப் பின் அவரை அடக்கம் செய்ய போதிய பணம் இல்லாமல் மூன்று நாட்கள் கழித்து வங்கியில் பணம் பெற்று அடக்கம் செய்த நிகழ்வை புகைப்படத்துடன் விவரிக்கிறது ஒரு கட்டுரை. கருப்பு பண மீட்பு நடவடிக்கைக்காகவே பண இழப்பு நடவடிக்கை என் கூறும் மோடி அரசு திரைத்துறையில் உழலும் கருப்பு பணத்தை கண்டு கொள்வதே இல்லை.


ரஜினி, விஷால் உள்ளிட்ட தமிழ்த்திரைப்பட துறையினரின் கள்ளப்பண உபயோக முறையை வாசகர்களுக்கு உணர்த்துகிறது ஒரு கட்டுரை. கட்டுமானத்தொழிலாளர்கள் படும் இன்னல்களையும் வரி ஏய்ப்பில் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு என்பதனையும் பட்டியலிடுகின்றனர். மோடி பற்றி இந்திய ஊடகங்கள் காட்டிய பிரம்மாண்டங்கள் தற்போது களையத்தொடங்கி வெளிநாட்டு முன்னணி பத்திரிகைகள் தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், புளும்பெர்க், ஹெரால்ட் போன்றவை இந்த பணமிழப்பு விடயத்தை கிழிகிழியென கிழித்து தொங்கவிட்டிருப்பதை செய்தி விபரங்களோடு பதிவு செய்துள்ளனர்.நவீன தொழில்நுட்பங்கள் உதவியோடு கார்ப்பரேட்டுகளை மக்கள் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளின் மீது அதிகாரத்தை செலுத்த முற்ப்படும் டிஜிடல் பாசிசம் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு கூட்டு வைத்துள்ளது. இதனை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்றும் பாகிஸ்த்தான், சீன ஆதரவாளர்கள் என்றும் கூறிவரும் காவிக்கும்பலை இந்நூல் அம்பலப்படுத்துகிறது.


புதுச்சேரியில் இப்பிரச்சனை தொடர்பாக துண்டு பிரசுரம் வினியோகித்த புதிய ஜனநாயகத் தோழர்களுக்கு காவல் துறை கொடுத்த நெருக்கடிகளையும் இந்நூல் வாயிலாக உணரலாம். வெறும் ஊடக உத்திகள், வார்த்தை ஜாலங்கள் மூலம் மக்களை எப்படியும் ஏமற்றலாம் என்பதே மோடியின் நரித்தந்திர அரசியல் என்பதனை இந்நூல் விரிவாக அலசுகிறது.


நூல்: மோடியின் டிஜிடல் பாசிசம்,

80 பக்கங்கள், விலை ரூ:20

வெளியீடு: புதிய கலாச்சாரம்,

மக்கள் கலை இலக்கியக் கழகம்,

122,நேரு பூங்கா(கு.மா,வா குடியிருப்பு),

பூந்தமல்லி நெடுஞ்சாலை,

சென்னை-600084. பேச:9941175876


Who's Online

We have 52 guests and no members online