தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழுகூட்டம் திருச்சியில் நவ.2, 2014 அன்று மாநில தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களின் தலைமையிலும், மூத்த தலைவர்கள் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ, எஸ். ஹைதர் அலி மற்றும் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, குணங்குடி. ஹனீபா மற்றும்  உமர் ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநிலச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமுமுகவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியாக தமுமுக திருச்சி மாவட்டச் செயலாளர் இப்ராஹிம்ஷா நன்றி கூறினார்.

சமூக நீதி

1. நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம் சமுதாயம் அனைத்துத் துறைகளிலும் புறந்தள்ளப்பட்டு, அவலச் சூழ்நிலையில் இருப்பதை நீதியரசர் ராஜிந்தர சச்சார் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் அறிக்கை புள்ளிவிவரங்களுடன் துல்லியமாக சுட்டிக்காட்டியது. நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மத்திய அரசு நியமித்த ஆணையம், தன் அறிக்கையில் முஸ்லிம் சமுதாயத்தின் பெரும்பின்னடைவுக்கு உரிய தீர்வுகளைப் பரிந்துரைத்துள்ளது. இவற்றை மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

வெளிநாடுவாழ் இந்தியர் நலம்

2. அன்னை தேசத்தையும், அன்பு உறவுகளையும் பிரிந்து, அந்நிய மண்ணில் உதிர வேர்வை சிந்தி, நம்நாட்டின் அந்நிய செலாவணியை உயர்த்துபவர்கள் ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள்’. இவர்கள் வங்கி மூலம் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்திற்கு சேவை வரி விதிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் தொகைக்குப் புதிதாக விதிக்கப்படும் சேவை வரி முடிவை ரத்து செய்வதோடு, நெடுங்காலம் வெளிநாட்டில் பணியாற்றி, வயதான நிலையில் தாய்நாட்டிற்குத் திரும்பும் இந்தியப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் மறுவாழ்வு திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

ஓரணியில் முற்போக்கு சக்திகள்

3. மதவாத சக்திகள் அரசியலில் வலுப்பெற்று நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க முயலும் வேளையில், நாட்டின் நலனையும், சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் கருத்திற்கொண்டு, மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளும், முற்போக்கு அமைப்புகளும் ஓரணியில் திரள வேண்டும் என இப்பொதுக்குழு உரிமையோடு கூறுகிறது. இம்முயற்சிக்கு சிறந்த முன்மாதிரியாய் அமைந்த பீஹாரின் லல்லுபிரசாத் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோரை இப்பொதுக்குழு பாராட்டுகிறது.

15 அம்சத்திட்டம்

4. சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமரின் 15 அம்ச திட்டத்தை மாநிலங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தியுள்ளன என்பதை வெள்ளை அறிக்கையாகப் பெற்று மத்திய அரசு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

இலங்கைக்குக் கண்டனம்

5. தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திவரும் அராஜகங்களை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை மூன்று ஆண்டுகளுக்கு முன் நடுக்கடலில் பிடித்து கடத்திச் சென்ற இலங்கை ராணுவம், போதை மருந்துக் கடத்தல் குற்றச்சாட்டை அவர்கள் மீது பொய்யாகப் புனைந்து மரண தண்டனை வழங்கியிருப்பதற்கு இப்பொதுக்குழு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

தமிழக மீனவர்களின் உயிர்களைக் காத்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இலங்கை கைப்பற்றி வைத்துள்ள தமிழக மீனவர்களின் 82 படகுகளை உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு கூறுகிறது.

சு.சுவாமிக்கு கண்டனம்

6. இலங்கை ராணுவத் தளபதிகள் மாநாட்டில் பங்கேற்று, தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதோடு, தமிழக மீனவர்களின் படகுகளை திரும்பத் தரக்கூடாது என இலங்கை அரசுக்கு துர்போதனை செய்துள்ள தமிழர்களின் எதிரியும் பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான சுப்பிரமணிய சுவாமிக்கு இப்பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது.

மழை நிவாரணம்

7. அண்மையில் தமிழகத்தில் பெய்த தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குத் தமிழக அரசு உரிய இழப்பீடு தந்து, விவசாயிகளை இழப்பிலிருந்து மீட்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதம் தரும் சிறப்புத் திட்டங்களைத் தீட்டி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மதவாத திணிப்புக்கு கண்டனம்

8. மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் மதச்சார்பின்மையைக் காற்றில் பறக்கவிட்டு, மதவாத நடவடிக்கைகளில் நேரிடையாகவே ஈடுபட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் வழங்கும் இப்தார் விருந்தைப் புறக்கணித்து, பெருநாளுக்கு வாழ்த்து சொல்வதைத் தவிர்க்கும் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பேசியதை அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரடி ஒளிபரப்பு செய்ததை நியாயப்படுத்துவதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் மதவாதத் திணிப்பு நடத்திவருவதையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசுக்கு நன்றி

9. இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், சையது முகமது என்ற இளைஞரை காவல் நிலையத்தில் வைத்து மிருகத்தனமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, என்கவுண்டர் நாடகமாடிய துணை ஆய்வாளர் காளிதாசை, இடைநீக்கம் செய்து, இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி மற்றும் நீதியியல் நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.5லட்சம் வழங்கியுள்ள தமிழக அரசுக்கு இப்பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. த.மு.மு.க. கோரியபடி மேலும் ரூ.5லட்சம் நஷ்டஈடு வழங்குவதோடு, அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

எஸ்.பி.பட்டினம் சம்பவத்தில் தவறு செய்த காவல்துறை அதிகாரி காளிதாசுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்கவும், குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், சமுதாய அமைப்புகளுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இப்பொதுக்குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது.

இப்பிரச்சனையில் கொல்லப்பட்ட இளைஞர் முஸ்லிம் என்பதாலேயே என்கவுண்டர் படுகொலையை ஆதரித்துப் பேசிய பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜாவுக்கும், இந்துக்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்தியைப் பரப்பி, தமிழகத்தில் அமைதியைக் கெடுக்க முயன்ற இந்து முன்னணி ராமகோபாலனையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பூரண மதுவிலக்கு

10. மதுக்கடைகளையும், பார்களையும் குறைத்து மதுக்கடை பணி நாட்களையும் குறைத்து பூரண மதுவிலக்கை நோக்கி முதல் அடி எடுத்து வைத்துள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவர்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.

தமிழ்மக்களின் குடிகெடுக்கும் மதுவை தமிழக அரசு முழுமையாக ஒழித்து பூரண மதுவிலக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தாம்பரம் சம்பவம்

11. காஞ்சி (வடக்கு) மாவட்டத் தலைவர் எம்.யாக்கூப் மீது கொலை முயற்சி மேற்கொண்ட சமூக விரோதக் கும்பல் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

காயம்பட்டவர்கள் மீதே வழக்குகளைப் பதிந்து, தாக்குதல் நடத்த வந்தவர்களைத் தப்பச்செய்யும் காவல்துறையின் போக்கை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. சகோ.யாக்கூபிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

விமானத் துறை

12. 10 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வளைகுடா நாடுகளில் குடியிருக்கும் நிலையில், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் திருச்சிக்கு சேவை வழங்கத் தயாராக உள்ள நிலையில் திருச்சியை விட சர்வதேச விமானப் பயணிகள் குறைவாக உள்ள அஹமதாபாத், அமிர்தசரஸ், லக்னோ, ஜெய்ப்பூர், கோவா, புனே, நாக்பூர் போன்ற நகரங்களுக்கு எல்லாம் சேவை வழங்க அனுமதி அளித்துள்ள நிலையில், உள்நோக்கத்தோடு திருச்சிக்கு மட்டும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களுக்கு சேவை வழங்க மத்திய அரசும், விமானப் போக்குவரத்து அமைச்சகமும் அனுமதி மறுத்துள்ளதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. மேலும் உடனடியாக வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களை திருச்சிக்கு சேவை வழங்க மத்திய அரசு ஆவன செய்யும்படியும் திருச்சியைச் சார்ந்துள்ள 4 கோடி தமிழர்களின் விமானத் துறையைச் சார்ந்த பொருளாதாரம், திருவனந்தபுரம், கொச்சி மற்றும் பெங்களூர் விமான நிலையங்களுக்குச் செல்லாமல் தமிழகத்திற்கு அவை கிடைப்பதற்கும் தமிழக மக்களின் சிரமத்தைக் குறைப்பதற்கும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இதில் தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கு தொடர்ந்தால் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்த நேரிடும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

டிசம்பர் 6 போராட்டம்

13. இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கையையும், முஸ்லிம்களின் வழிபாட்டுரிமையையும் இழிவு செய்யும் வகையில் சங்பரிவார பயங்கரவாதிகளால் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளாம் டிசம்பர் 6 அன்று, கறுப்புச்சட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் நடத்துவதென இப்பொதுக்குழு முடிவெடுக்கிறது.

மேலும் மாநிலமெங்கும் மக்களிடம் பரப்புரைகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனவும், லட்சக்கணக்கான மக்கள் பாபர் மஸ்ஜித் வழக்கில் நீதிகேட்டு குடியரசுத் தலைவருக்கு அஞ்சலட்டை எழுதி அனுப்புவது எனவும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

கோவை சிறைவாசியை விடுதலை செய்தல்

14. கோவை சிறையில் எஸ்.எல்.இ. என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு, இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அபுதாஹீர் என்ற சிறைவாசியை மனித நேயத்துடன் விடுவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

வக்ஃப் ஆக்கிரமிப்பு

15. தமிழகமெங்கும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்களை ஆக்ரமிப்புகளிலிருந்து விடுவித்து, வக்ஃப் சொத்துக்களின் பயன் முஸ்லிம் சமுதாயத்திற்குக் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

முத்துப்பேட்டை

16. சங்பரிவார கும்பல் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பெரும் பதற்றத்தை உண்டாக்கி முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பெரும் சேதத்தை உருவாக்கி இருக்கிறது. காவல்துறையும் இவற்றைத் தடுக்காமல் ஒரு சார்பாக செயல்பட்டுள்ளது. இதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அங்குள்ள முஸ்லிம்களுக்கு சட்டப்படி உரிய பாதுகாப்பைக் காவல்துறை வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

நாமக்கல் மதுக்கடை

17. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சி என்ற ஊரில் பள்ளிவாசல் அருகே மதுக்கடை நடந்து வருகிறது. இதனால் பள்ளிவாசலின் கண்ணியம் சீரழிவதோடு, தொழுகையாளிகளுக்குப் பெரும் இடையூறு ஏற்படுகிறது. சட்டவிரோதமாக வழிபாட்டுத்தலம் அருகே உள்ள இந்த மதுக்கடை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

18. தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தரப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. தாய்மொழி வழியில் தரமிக்கக் கல்வியை தருவதற்கு அரசுப் பள்ளிகளை அரசாங்கம் தயார்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

19. உருது மொழிப் பள்ளிகள் அரசால் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதையும், ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் அவை முடக்கப்பட்டு வருவதையும் இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

உருது, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிவழிச் சிறுபான்மையினர் தங்களின் தாய்மொழி வழியில் கற்கும் உரிமையையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

காட்டுக் கருவேல மரங்களை அகற்றுதல்

20. தமிழகத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சியை உருவாக்கும் காட்டுக் கருவேல மரங்களை அரசு அகற்ற வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மழைநீர் சேமிப்பு

21. தமிழகத்தில் பெய்துள்ள கனமழையால் பெரும்பகுதி கடலில் கலந்து வீணாகிறது. மழைநீர் சேமிப்புக்கு அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பால்விலை உயர்வுக்கு கண்டனம்

22. ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் பால்விலையை தமிழக அரசு மிக அதிக அளவில் உயர்த்தியதற்கு பொதுக்குழு வன்மையான கண்டனம் தெரிவிக்கிறது. பால்விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பெட்ரோல் டீசல் விலைக் கட்டுப்பாடு

23. பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளும் வகையில் அரசு தனது கட்டுப்பாட்டை முழுமையாக விலக்கிக் கொள்வது அபாயமானது என இப்பொதுக்குழு கருதுகிறது.

சிறைவாசிகள் விடுதலை

24. பத்து ஆண்டுகளுக்கும் மேல் தமிழக சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுமெனவும் இதற்கென தமிழக அரசு சிறப்பு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென இப்பொதுக்குழு கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.


Who's Online

We have 50 guests and one member online

  • ymegywu