மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

மணவை முஸ்தபா அவர்கள் ஒரு சிறந்த தமிழ் அறிஞராக விளங்கியவர். லட்சக்கணக்கான கலைச் சொற்களை தமிழுக்குத் தந்தவர். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை தனி ஒரு மனிதராக நிறைவேற்றியவர்.  கணினி, அறிவியல், பொருளாதாரம் என பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தக்கூடிய ஆங்கிலச் சொற்களை தமிழில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என மொத்தம் எட்டு தொகுதிகளாக அவர் வெளியிட்ட அகராதி, மிகவும் சிறப்பிற்குரியது. 

தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு அவரது முன்முயற்சிகளும், ஆய்வுகளும் பெரிதும் உதவின.எனது மாணவப் பருவம் முதலே மணவை முஸ்தபா நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்துள்ளேன். குறிப்பாக, மீரா பவுண்டேஷன் என்ற பெயரில் அவர் நடத்திய இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் குறித்த தொடர் சொற்பொழிவுகள் சென்னை மண்ணடியில் நடத்தி வந்தது மிகவும் சிறப்பிற்குரியது.

பல்வேறு தமிழ் அறிஞர்கள் குறிப்பாக சிலம்பொலி செல்லப்பனார் போன்றவர்களுக்கு தமிழ் இஸ்லாமியக் காப்பியங்கள் வாயிலாக இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகமும், இஸ்லாத்தைப் பற்றிய ஆய்வும் செய்ய பெரிதும் காரணமானவர் மணவை முஸ்தபா என்பதை நான் இங்கு நினைவு கூறுகின்றேன்.

 தொலைக்காட்சி இல்லாத அக்காலக்கட்டத்தில் சர்வதேச அளவில் நடக்கும் நிகழ்வுகளை ஆங்கிலத்திலிருந்து தொகுத்து தமிழில் யுனெஸ்கோ கூரியர் என்ற தமிழ் இதழ் மூலம் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மணவை முஸ்தபா அவர்கள். மருத்துவம், இயற்பியல், தொழில்நுட்பம், வாகனஇயல் என உயிர்காப்பு மருந்து முதல் உதிரி பாகங்கள் வரை எல்லாவற்றுக்குமே தமிழ் பெயர்கள் இருக்க வேண்டும் என பேராவல் கொண்டவர் மணவை முஸ்தபா அவர்கள்.

நமது சமகாலத்தில் செம்மொழியாம் தமிழ்மொழிக்கு, மற்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது அறிவியல் சொற்கள் நிறைந்து காணப்படக்கூடிய வகையில் தமிழை செழுமைப் படுத்தியதற்கு மணவை முஸ்தபா அவர்கள் பெரிதும் காரணமாக இருந்தார். 

அவருடைய இழப்பு தமிழ்பேசும் நல்லுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும். மணவை முஸ்தபா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் மறுமையில் அவருக்கு உயர்ந்த சுவனத்தை வழங்க பிரார்த்திக்கிறேன்.


Who's Online

We have 78 guests and no members online