மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:

உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தமிழக முதல் அமைச்சர்  ஜெயலலிதா மற்றும் வி.கே. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்,  4 ஆண்டுகள் தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. 

கீழமை நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு சரியே; குழம்பிய கணக்குடன் உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு தவறு என்று இந்தத் தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அரசியல் என்பது மக்கள் சேவை தானே தவிர பொதுச் சொத்தை கபளீகரம் செய்வது அல்ல. ஆனால் அரசியல் ஊழல் மயமாகி கொள்ளையடிப்பதே என்ற நிலை உருவாகி சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பி விடுவதே வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகின்றது. இந்தச் சூழலில் 21 ஆண்டுகளாகிய பிறகு ஊழலை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு உண்மையில் வரலாற்றுச் சிறப்புமிகுந்தது. அரசியலில் ஊழலை ஒழிக்க உழைத்துக் கொண்டிருப்பவர் களுக்கு இது ஒரு பெரும் ஊக்கத்தை அளிக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது.

அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தொடர்புள்ள இந்த வழக்கில் திருமதி சசிகலா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட தண்டனையை அதிமுகவின் ஒரு தரப்பினரே வரவேற்றுக் கொண்டாடுவது முரண்பாடுகளின் சிகரமாக விளங்குகின்றது.

உச்சநீதிமன்றம் கல்யாண்சிங் எதிர் ஜெகதாம்பிக பால் வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழக ஆளுநர் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி யாருக்கு ஆதரவு இருக்கின்றது என்பதைக் கண்டறிய வழிவகுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது. ஆளுநர் அரசியலமைப்பின் விதிமுறையின் படி தமிழகத்தில் நிரந்தர ஆட்சி அமைய வழிவகுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


Who's Online

We have 67 guests and no members online