மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் காலியாக உள்ள தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 21.07.2016 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் இரண்டு மாதகால அவகாசத்திற்குப் பிறகு எந்தவித வெளிப்படைத் தன்மை இல்லாமலும் அரசின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முரணாகவும் அரசியல் பின்னணி கொண்ட திருமதி கல்யாணி மதிவாணன் என்பவரை குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக தமிழக அரசு நியமித்தது.

கடந்த 2.9.2016 சென்னை உயர்நீதிமன்றம், குழந்தை உரிமைகள் தொடர்பாக அனுபவமும், நிபுணத்துவமும் இல்லாத கல்யாணி மதிவாணன் எந்த அடிப்படையில் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார் என்று கேள்வி எழுப்பி, இதற்கான சரியான விவரத்தை அளிக்காவிட்டால் நியமன ஆணையை நீதிமன்றமே ரத்து செய்யும் என்றும் தமிழக அரசை எச்சரித்திருந்தது. 

இந்நிலையில் மீண்டும் குழந்தை உரிமைக்கான பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க அரசு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு இந்த ஆணையத்தின் தலைவராக விதிமுறைகளின்படி வெளிப் படையான நடைமுறைகளைப் பின்பற்றி முறையான குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பியலில் நிபுணத்துவம் பெற்றவரை  நியமிக்க வேண்டும் என்றும் ஆளும் கட்சியின் உறுப்பினராக அல்லது அனுதாபியாக இருப்பது மட்டுமே தகுதியாகக் கொண்டு சட்டப்பூர்வமான ஆணையங்களுக்கு தலைவர்களை நியமிக்கும் பாரபட்சப் போக்கை  அரசு கைவிட வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


Who's Online

We have 37 guests and 2 members online

  • ScroogeBus
  • ymegywu