தெலுங்கானா  மாநிலத்தில் முஸ்லிம்களின்  விகிதாச்சாரப்படி 12 சதவீதம் இடஒதுக்கீடு  வழங்க ஆளும் சந்திரசேகர ராவ் அரசு தீர்மானித்துள்ளது.

தமிழ்நாட்டைபோல் அரசியல் சாசனத் தின் 9ம் அட்டவணைப்படி இணைத்து   இடஒதுக்கீடு வழங்க  மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும்,  மத்திய அரசு மறுக்கும்  பட்சத்தில்   ஒரு வலுவான சட்ட யுத்தம் ஒன்றை தொடுக்கவும்  தமது அரசு தயாராக இருப்பதாகவும் முதல்வர் ராவ் தெரிவித்துள்ளார்.  இந்த ஒதுக்கீடு   சமய அடிப்படையிலானது அல்ல என்றும் இது சமூக பொருளாதார  அடிப்படையில்  வழங்கப்பட உள்ளதாகவும் சட்டமன்றத்தில்   தெரிவித்தார். இடஒதுக்கீடு தெலங்கானா மாநிலத்தில் 50 சதவீதத்தை   மிகுந்துவிட்டநிலையில்  முஸ்லிம்களின்  விகிதாச்சார அடிப்படையில்  இடஒதுக்கீடு வழங்க  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதின் படி  நடவடிக்கை மேற்கொள்ள  இருப்பதாக சந்திரசேகர் ராவ் தெரிவித்தார். முன்னதாக சிறுபான்மை சமூக மக்களுக்கான கல்வி, சமூக , பொருளாதார நிலை குறித்து தெலங்கானா அரசால் அமைக்கப்பட்ட சுதீரன் கமிட்டி தனது ஆய்வினை  ஒரு மாதத்திற்கு  முன்பு  சமர்ப்பித்தது என்பது  குறிப்பிடத்தக்கது.

சட்டமன்றத்தில் தீர்மானம்

 சுதீரன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 12 சதவீதத்திற்கான சட்ட முன்வரைவு எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில்   சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு  தீர்மானம்  நிறைவேற்றப்பட்டு  மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ள தாகவும்,  அதனை அரசியல் சாசன 9 வது அட்டவணையில் சேர்த்து உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற சட்டங்கள் வரிசையில்  இணைக்கப் படல் வேண்டும்  என  வேண்டுகோள்  விடுக்கப்படும்  என தெரிவித்துள்ளார். இதில்  தமிழ்நாடு முன் உதாரண மாநில மாக திகழ்வதாக குறிப்பிடுகிறார் முதல்வர் ராவ். சமூகநீதியின் வேர் மண்ணான தமிழகத்தில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டை தாண்டி 69 சதவீதத்தை நோக்கி சென்றபோது,   சமூகநீதி தத்துவத்திற்கு எதிரான சக்திகள்  உச்சநீதிமன்றம் சென்று இடஒதுக்கீட்டிற்கு ஊறு விளைவிக்க முயன்றபோது   அன்றைய தமிழக அரசு அதனை அரசியல் சாசனத்தின் 9ம் அட்டவணையில் சேர்த்து சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றம் கூட மேலாய்வு செய்ய முடியா வண்ணம் பாதுகாப்பு  வழங்கப்பட்டதை  தான்  திரு ராவ்  மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். 

சட்ட யுத்தம்

ஒருவேளை மத்திய அரசு மறுக்குமா னால் சட்ட யுத்தத்திற்கு  தயார் என சூளுரைக்கிறார். தமிழ்நாட்டால் முடியு மானால் தெலங்கானாவால் ஏன் முடியாது  என்றும் வினா விடுத்தார் முதல்வர் ராவ். தற்போதைய 4 சதவீத முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு உடனடி அச்சுறுத்தல்   ஏற்பட்டுவிடாதபடி  பார்த்துக் கொள்ளவேண்டியது  மாநில அரசின்  பொறுப்பு  என எம் ஐ எம் ன்  அக்பருத்தீன் உவைஸீ  தெரிவித்தார்.  சங்பரிவார சக்திகள் வழக்கம் போல் இதற்கு கடும் எதிர்ப்புக்குரல் எழுப்பத்தொடங்கியுள்ளனர். மத அடிப்படையில்  ஒதுக்கீடு வழங்கமுடியாது என பழைய பஞ்சாங்க   காலத்து வாதத்தையே தொடர்ந்து   வைத்து வருகின்றனர்.  மத அடிப்படையிலான  இடஒதுக்கீட்டிற்கு அம்பேத்கார்  எதிர்ப்பு தெரிவித்தார் அது ஒடுக்கப்பட்ட பிற சமூக மக்களுக்கு எதிரானது என்றும்  திசை திருப்பல்  வாதங்களை   விடுக்கும் பிற்போக்கு சக்திகளை தெலங்கானா முதல்வர் முறைப்படி முறியடிப்பார்  என்றும்  எதிர்பார்க்கலாம்.

சிறுபான்மையினருக்கு 1,204 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மேலும் தமது முதல் பட்ஜெட்டில்  1,030 கோடி ரூபாய் சிறுபான்மை மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு  செய்த   சந்திரசேகர்ராவ் அரசு  நடப்பு ஆண்டில் 1,204 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.  சிறுபான்மையினர் உள்ளிட்ட  பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு  உறைவிட  பள்ளிகள் அமைக்க 8ஆயிரம் கோடி  ஒதுக்கீடு  செய்ததோடு 71 உறைவிடப்பள்ளிகள்  அமைத்திருப்பதாகவும்  மேலும் 129 பள்ளிகள் எதிர்வரும் ஆண்டில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும்   தெரிவித்துள்ளார்.

 -  ஹபீபாபாலன்


Who's Online

We have 45 guests and one member online

  • ymegywu