உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர்   அருகே 115 பேரின்   உயிரை காவு வாங்கிய 200 பேரை படுகாயமடைய செய்த ரயில் விபத்திலும்   மற்றும் ஒரு ரயில் விபத்தில்  பாகிஸ்தானின்   உளவு  அமைப்பான   ஐ.எஸ்.ஐ  இருந்ததாக பிகார் காவல்துறை தெரிவித்துள்ளது. 

முக்கியத்துவம் மிகுந்த  இந்த செய்தியை ஒரே ஒரு ஆங்கில ஏட்டை  தவிர   மற்றவை இருட்டடிப்பு செய்துள்ளன. அது தொடர்பான சந்தேகத்திற்கு விடை காண்பதற்கு முன்  தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்வோம். இந்த ரயில் கோர விபத்துக்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ இருக்கிறது என்பது மூன்று முக்கிய பயங்கரவாதிகள் பிடிபட்டதில்  இருந்து உறுதியாகி இருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது. 

உமாசங்கர்   படேல் மோதிலால் பாஸ்வான், மற்றும் முகேஷ் யாதவ் ஆகியோரே அந்த மூவராவார். இவர்கள்   நேபாள நாட்டு குடியுரிமை பெற்றவர்கள்.  அமீரகத்தில் பணியாற்றுபவர்களாம்   நேபாள் எல்லையில்  இந்த சதித்திட்டத்தை தீட்டினார்களாம். இவை பீகார் காவல்துறையினர் குறிப்பிடுபவையாகும்.  

கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி கோரேஷன் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தின் அருகில் குக்கர் பாம்   வைத்ததாகவும்   இதை வைக்குமாறு தூண்டியது  ஐ.எஸ்.ஐ தான் என பிடிபட்டவர்கள் ஒப்புக்கொண்டதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர ராணா டைம்ஸ் இந்தியா   ஆங்கில நாளேட்டின் செய்தியாளரிடம்   தெரிவித்து இருந்தார். இதே  பயங்கர வாதிகள் தான் கடந்த ஆண்டு இந்தூர் பாட்னா  விரைவு  தொடர் வண்டியிலும் அஜ்மீர் சியால்தா விரைவு தொடர்வண்டியிலும் குண்டுகள் வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.  தற்போது  பயங்கரவாதிகள்   ரயில்களையும்  ரயில் பயணிகளையும்    குறி வைத்திருக்கும்  செயல் நாட்டு மக்களை குலை நடுங்க செய்துள்ளது. தற்போது   இது தொடர்பான விசாரணை இந்தியா, நேபாளம் அமீரகம் என மூன்று முனைகளில் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும்  பிகார் காவல்துறை தெரிவித்துள்ளதாகவும் இந்த விசாரணையை பிகார் காவல்துறை  மேற்கொள்ளும்   முறையை தாம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அதில் தமக்கு திருப்தியே   என்றும் என்  ஐ ஏ தெரிவித்திருக்கிறது. ஜனவரி 1ம் தேதி கல்யான்பூர்-மந்தனா தொடர் வண்டி பாதைகளின்  இடையே  கான்பூர் -அன்வர் கஞ் பிரிவில் ரோந்து சென்று கொண்டிருந்த ரயில்வே  பாதுகாப்புத்துறையினர் குண்டுகளை  கண்டுபிடித்ததால்   பெரும்  விபத்து தவிர்க்கப்பட்டது.  இந்த வழக்கை சிபிஐ இடம் ரயில்வே துறை ஒப்படைத்தது.

 அதேபோல் அக்டோபர் 1ம் தேதி கோரஸான்  பகுதியில் வைக்கப்பட்ட குண்டு  உள்ளூர் மக்களின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.  ஆனால் நவம்பர் 21ம் தேதி  இந்தூர் - பாட்னா  விரைவு  தொடர்வண்டியில் பயணம் செய்தவர்களுக்கு   அந்த  அளவுக்கு அதிர்ஷ்டம்  கைகொடுக்கவில்லை  என்றே  சொல்லவேண்டும். 

இந்தூர்  -பாட்னா விரைவு தொடர் வண்டி   செல்லும்   பாதையில் குண்டு வெடித்ததால் 115 பேர் பலியாயினர்  200  பேர்  படுகாயமடைந்தனர். டிசம்பர்  28ம் தேதி அதாவது இந்தூர் -பாட்னா  விரைவு   தொடர்வண்டி விபத்து நடந்து ஒரு மாதம் கழித்து கான்பூர் அருகே அஜ்மீர் -சியால்தா தொடர் வண்டி விபத்தில் சிக்கியது இதில் 50 பேர்  காயமடைந்தனர். இவை அனைத்திலும் சதிகாரர்கள் கைவரிசை உள்ளது  என்பதையும்   காவல்துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர  ராணா தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய பொது போக்குவரத்து நிறுவனமான ரயில் வேத் துறையில் , நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் ரயில்வே  பயணங்களில்   உயிரைக்குடிக்கும்  பயங்கரவாதிகள்   தொடர்ந்து குண்டுகள் வைத்து  நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விளைவித்து வரும் நிலையில் அரசுத்துறையும், வெகுஜன மீடியாக்களும்  கண்டுகொள்ளாத   போக்கு அதிர்ச்சி அடைய வைக்கிறது. 

பாகிஸ்தான் உளவுத்துறை பங்கு  இதில் உள்ளது  என பீகார் காவல்துறை தெரிவித்தும்  அது குறித்து வெளிப்படையாக  அறிவிக்கவோ   அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவோ காட்டிக்  கொள்ளாத அளவுக்கு  கண்டு கொள்ளா போக்கு ஏன் ? கள்ள மவுனம் சாதிக்கும் கயமைத்தனம் ஏன் ?

 இந்த வினாவுக்கு விடை - பிடிப்பட்ட பயங்கரவாதிகளின் பெயர்கள்  மற்றும் அவர்கள் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் களாக  இல்லாதது தான் காரணமா ?   இந்தியா வில் பிறந்து   நேபாளத்தில் குடியுரிமை பெற்று அரபு நாட்டில் பிழைக்க சென்றபோது கூட எங்கே ஐ.எஸ்.ஐ இருக்கிறது என்று நேபாளத்தில் ஏற்கனவே பழகி வைத்து இருந்த  ஐ.எஸ்.ஐ  தொடர்பினை  வைத்து   வடபுலம் முழுவதும் குண்டு வைத்து கதறவிடுவீர்கள். நாளை மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்தால்  உங்களுக்கு பிணை கிடைக்கக்கூடும் . ஏன் முக்கிய  பதவிகள் கூட உங்களை   தேடி வரக்கூடும் . காரணம்  நீங்கள்  நீங்கள் தான் .

  நீண்டகாலமாக   விசாரணைக் கைதிகளாக நாடு முழுவதும் நீதி மறுக்கப்பட்டு சிறைக் கொட்டடிகளில் வாடும் வஞ்சிக்கப்பட்ட  சமுகத்தை சேர்ந்தவர்கள் நீங்கள் இல்லை  அல்லவா ?  நீங்கள் குண்டுமழை  பொழிந்தாலும் உங்கள் காட்டில் மழை  பெய்யும்.

   இந்திய மாநிலங்களில் வெளிவந்துகொண்டு இருக்கும்  ஏராளமான  வெகுஜன ஊடங்கள்  உங்களை கண்டு கொள்ளாது. காரணம்    உங்கள் பெயர்  உமா சங்கர்  பட்டேல், மோதிலால் பாஸ்வான்,  முகேஷ் யாதவ் என்பது உண்மைதானே.

-அபூஸாலிஹ் 


Who's Online

We have 47 guests and one member online

  • Leonardrof