மேகாலாயாவின் ஆளுநர் மாளிகையில் ’காமக்களியாட்டம்’ நடத்திய புகாரில் குடியரசு தினத்தன்று தன் பதவி விலகியிருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.சண்முகநாதன்.

ஒழுங்கிற்கும் கட்டுப்பாட்டிற்கும் எங்களை விட்டால் வேறு அமைப்பு உண்டா என்று கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் நிர்வாகியான இந்த கட்டை பிரம்மாச்சாரி சண்முகநாதனை,  பிரதமர் நரேந்திரமோடி  பரிந்துரை செய்து கடந்த 2015-ல் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலாயா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். சங்பரிவார அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் பாரதிய ஜனதாவின் நிர்வாகியாகவும் இருந்தது மட்டுமே அவரது தகுதியாக இருந்தது. ஆளுநர் பதவியில் அமர்ந்தவர் இதற்காகவே காத்திருந்தவர் போல் தன் குடியிருப்புடன் சேர்த்து மேதகு ஆளுநர் அலுவலகத்தையும் சிறிது, சிறிதாக தரம் இறக்கியுள்ளார்.

 இவற்றை உடன் இருந்து பார்த்த அவரது சுமார் 100 அலுவலர்கள் கொதித்து போய் விட்டனர். பிரதமருக்கு விரிவான புகார் அனுப்பியுள்ளனர். அதில்,”’சண்முகநாதன் ஆளுநர் மாளிகையை இளம் பெண்களுடான மனமகிழ் மன்றமாக மாற்றி விட்டார். ஆளுநர் சண்முகநாதனின் உத்தரவின் அடிப்படையில் எவ்வித தடையும் இன்றி இளம்பெண்கள் வந்து செல்லும் இடமாக மாறி விட்டது. இவர்களில் பல பெண்கள் ஆளுநரின் படுக்கை அறைக்கும் சென்று வரும் வழக்கம் கொண்டு விட்டார்கள்”எனப் புகார்களை அடுக்கியுள்ளனர்.  சண்முகநாதனின் காமக்களியாட்டங்கள் குறித்து மேலும் அதிகமான விபரங்களை, மேகாலாயாவின் நாளிதழ்கள் புலனாய்வு செய்து வெளியிட்டுள்ளார்கள்.   மக்கள் தொடர்பு அதிகாரியின் பணிக்காக நேர்முகத்தேர்விற்கு வந்த ஒரு இளம்பெண்ணை ஆளுநர் சண்முகநாதன் கட்டிப்பிடித்ததுடன், முத்தமும் அளித்ததாக ஒரு நாளிதழ் செய்தி கூறுகிறது. இதுபோல், படிப்பதற்கே கூசும் அந்தப் புகார்கள் தமிழரான சண்முகநாதன் மீது வந்திருப்பது நெருடச் செய்கிறது.

 சென்னை பல்கலைகழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் எம்.ஏ பயின்று தங்கமெடல் பெற்றவர் இந்த சண்முகநாதன். சுவாமி விவேகனந்தர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிறுவனரான தீனதயாள் உபாத்யாயா ஆகியோரால் உந்தப்பட்டு தன்னை தேசத்திற்கு அர்பணித்துக் கொண்டதாக அவர் அடிக்கடி தன்னைக் கூறிக் கொள்வது உண்டு.

 தஞ்சாவூரை சேர்ந்த சண்முகநாதன் ஆர்.எஸ்.எஸ் பிரமுகராக இருந்து பாஜகவிற்கு மாறியவர். டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மக்களவை தேர்தலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவில் சண்முகநாதன் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆட்சி அமைந்த பின் நாடாளுமன்ற பாஜகவின் அலுவலக செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். 

இதில், நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் பாஜக அலுவலகம் வரும் எம்பிக்களை வரவேற்று அமர வைத்து, விருந்தோம்பல் செய்யும் பணி செய்து வந்தவர் தான் திடீர் என ஆளுநராக அமர்த்தப்பட்டார். இதில் அவர் மீது கிளம்பியுள்ள புகார்களை பார்த்தால் அவர் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையையும் சந்தேகப்பட வைக்கிறது.

 ஆளுநர் மாளிகையில் பலான புகார்கள் வெளியாவது நம் நாட்டில் முதன்முறை அல்ல. ஏற்கனவே, ஆந்திராவின் ஆளுநராக இருந்த என்.டி.திவாரி படுக்கையறையில் இளம்பெண்களுடன் அரைநிர்வாண நிலையில் இருந்த காணொலி வெளியானது. இவர் உபி ஆட்சியில் முதல் அமைச்சராக இருந்தவர். தற்போது இவர் பாஜகவில் இணைந்திருக்கிறார். ஆளுநர் மாளிகையை அசிங்கப்படுத்திய புகார்களை தாங்கியவர்களை சேர்க்கும் கட்சி எப்படிப்பட்டது என ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. ஏனெனில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி அழகல்ல என வினய்கட்டியார் கருத்து கூறுகிறார். உபியை சேர்ந்த இவர் அக்கட்சியின் மாநிலங்களவையின் எம்பியாக இருப்பவர். இவரது கருத்தில் கட்சிக்கு உடன்பாடில்லை என கூறி தப்ப முயலும் பாஜக, வினய்கட்டியார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?

 சண்முகநாதன் மீதான புகார்கள் மீது வெளிப்படையாக கருத்து கூற மறுக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் ‘நம்ப முடியவில்லை’ ‘ஆச்சரியமாக இருக்கிறது!’ என புலம்புவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.. பாஜகவின் தலைவர்களோ, ‘அவர்தான் ராஜினாமா செய்து விட்டாரே! இனி சொல்வதற்கு என்ன இருக்கிறது?’ என திருப்பி கேட்கிறார்களாம். இதை விட அதிகமாக கவலை கொண்ட பிரதமர் மோடி, அவரை பதவியில் இருந்து உடனடியாக நீக்கியுள்ளார். சண்முகநாதனால் நியமிக்கப்பட்ட இளம் பெண்களான மூன்று பணியாளர் கள்

(ஒருவர் சென்னையை சேர்ந்தவர்) மற்றும் ஒரு தனிச்செயலாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளி யிட்டுள்ளது. இவர்கள் தவறு செய்தமையால் தான் நீக்கப்பட்டுள்ளனர் என வைத்துக் கொள்வோம். அவர்களை தவறு செய்ய வைத்தவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் மோடிஜி?

 - தியாகவர்மன்    

சண்முகநாதனுக்கு வயது 67 ஆகும். 2002ல் சன் தொலைக்காட்சியில் திரு. வீரபாண்டியன் நெறிப்படுத்தி வந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பாபர் பள்ளிவாசல் குறித்து தமுமுக தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா உடனான விவாதத்தில் இவர் மண்ணைக் கவ்வினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Who's Online

We have 44 guests and one member online

  • Leonardrof