ஒரு'புரட்சிகர' நடவடிக்கை என்று பா.ஜ.க.,வினரால் வர்ணிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 1 அன்று  தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் வரவு செலவு திட்டம் திசையற்ற சாத்திரமாக உள்ளது.

ஆளும் பா.ஜ.க.,வினரைத் தவிர அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பல தரப்பட்ட மக்களின் கடுமையான விமர்சனத்திற்கு இலக்கான வரவு செலவு அறிக்கையாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் அமைந்துள்ளது.

விவசாயிகள் ஏமாற்றம்

விவசாயிகள் தற்கொலை இன்று இந்தியாவை பீடித்திருக்கும் மிகப் பெரும் அவலமாகும். இதனை தடுக்கும் முகமாக விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் அவர்களுக்கு மேலும் கடன் அளித்து, அவர்களை கடனாளியாக்கி அவர்களை மீண்டும் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் வரவு -செலவு அறிக்கையை அளித்திருப்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?

தலித் மக்களுக்கு வஞ்சனை

செட்யூல்ட் மற்றும் பழங்குடி மக்களுக்கு வரவு செலவு அறிக்கையில் திட்ட அடிப்படையிலான செலவு, திட்டமில்லாத செலவு என்று இரண்டு கூறுகள் தனித் தனியாக வரவு செலவு அறிக்கையில் காட்டப்படும். இந்த பாரம்பரிய முறை  இந்த ஆண்டு பட்ஜெட்டில் கைவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட தொகை மற்ற செலவீனங்களுடன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. மொத்த எஸ்.சி., எஸ்.டி., மக்கட் தொகைக்கேற்ப நிதி ஒதுக்கப்படும் என்று அரசு கூறுகின்றது. ஆனால் பட்ஜெட்டை ஆய்வு  செய்தால் எஸ்.சி மக்களுக்கான ஒதுக்கீட்டை மோடி அரசு குறைத்துள்ளது தெரிய வருகின்றது.மொத்த பட்ஜெட் அளவு  21,47,000 கோடி 2011 எஸ்.சி. மக்கள் தொகை  16.6%

எஸ்.சி. மக்களுக்கு நியாயமாக ஒதுக்க வேண்டியது: 3,56,402 கோடி சிறப்புக் கூறு திட்டத்தின் கீழ் இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை 52,393 கோடி.எஸ்.சி. மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகையில் பற்றாகுறை ரூ.3,04,009 கோடியாகும்.     

 தலித்கள் மீது தனக்கு அன்பு உண்டு என்று உதட்டளவில் பேசி வரும் மோடி, மின்னணு பரிவர்த்தனைக்காக பீம் என்ற பெயரில் ஒரு செயலியைத் தொடங்கி அது டாக்டர் அம்பேத்கார் பெயரில் இயங்குவதாக கூறிக் கொண்டார். தலித் மக்களை மோடி அரசின் வரவு செலவு அறிக்கை வஞ்சித்துள்ளது.

 பழங்குடியினருக்கு அநீதி

 இதே போல் எஸ்.டி. (பழங்குடியினர்) மக்கட் தொகை 8.6%. பழங்குடியினருக்கான உட்கூறு திட்டப்படி ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ31,920 கோடியாகும். நியாயமாக ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய தொகை ரூ1,84,642 கோடியாகும் பற்றாகுறை ரூ1,52,722 கோடியாகும்.

 சிறுபான்மையினருக்கு மோசடி

 சிறுபான்மையினருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மோடி அரசு வஞ்சகம் செய்துள்ளது.மத்திய வரவு செலவு அறிக் கை யில் சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு 10 விழுக்காடு அதி கரித்திருப்பதாக மத்திய சிறு பான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார். ஆனால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றுள்ளார்.

 2011 மக்கட்தொகை கணக் கெடுப்பின்படி மொத்த இந்திய மக்கட் தொகையில் 118.7 கோடியில்  சிறுபான்மையினர் 23.37 கோடி (19.3) விழுக்காடாகும். சிறுபான்மையினரில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மற்றும் ஜெயினர்கள் அடங்குவர். சிறுபான்மையினர் மக்கட் தொகை அடிப்படையில் மத்திய வரவு செலவு திட்டத் தில் ரூ 4,29,346 கோடி ஒதுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனல் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப் பட்டது ரூ4,515 கோடி மட்டுமே.

 பற்றாகுறை 4,24,831 கோடி ஆகும். அதாவது 19.3 மக்கட் தொகையுடைய சிறு பான் மையினருக்கு மொத்த செலவீன ஒதுக்கீடு 0.21 விழுக்காடு மட்டுமே. கடந்த ஆண்டைவிட வெறும் ரூ368 கோடி மட்டும் அதிகரித்து விட்டு சிறுபான்மையினருக்கு பெரும் சலுகை அளித்து விட்டதாக மக்களை ஏமாற்றுகிறது மோடி அரசு.வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் சமூக பொருளாதார நிலையில் உயர்ந்து இருக்கும் ஜெயின் சமூகத்தினரையும் சிறுபான்மையினர் பட்டியலில் சேர்த்து முஸ்லிம்களை வஞ்சித்துள்ளது மோடி அரசு.

 மீனவர்களுக்கு துரோகம்

 நமது நாட்டின் கடற்கரை யோரம் 36 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவர் களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் ஆவர். மீன் வளத் துறைக் கென தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி அரசு, தற்போது இந்த வரவு செலவு அறிக்கையில் மீன் வளத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளது.

2016-17ல் மீன் வளத்துறைக்கு ஒதுக்கப்பட்டது ரூ575.34 கோடி. 2017-18ல் அது ரூ 549.13 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையும் முழுமையாக செலவிடப்படவில்லை என்று தெரியவருகின்றது. மீனவர் தினத்தில் மீன் விற்பனையில் ஈடுபடும் பாஜகவினருக்கு மீனவர்கள் நலனில் அக்கறை யில்லை என்பதை இவை தெளிவாக்குகின்றன.

 நெசவாளர்களுக்கு நாமம் 

 காந்தி சுற்றுவது போல் ராட்டை சுற்றும் வேடத்தை சமீபத்தில் தறித்தார் பிரதமர் மோடி. ஆனால் நெசவாளர்கள் மீது மோடி அரசுக்கு எவ்வித கரிசனமும் இல்லை என்பதை அவரது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த வரவு செலவு அறிக்கை பட்டவெளிச்சமாக்கியுள்ளது.

 ஜவுளித் துறைக்கான ஒதுக்கீடு 35.5% விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.  ஆனால் கைத்தறித் துறைக்கான ஒதுக்கீடு 15% குறைக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களின் மக்கட் தொகையுடன் ஒப்பிடும் போது அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகையில் 37.2% அதாவது ரூ 358 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களுக்கு ஏமாற்றம்

 கல்வித் துறையும் மோடி அரசினால் இரண்டாம் பட்சமாக கருதப்பட்டுள்ளது. சர்வ சிக்ச அபியான் என்னும் அனைவருக்கும் தொடக்க கல்வி திட்டத்திற்கோ, மத்திய உணவு திட்டத்திற்கோ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து நிதி அமைச்சர் ஜெய்ட்லி எதுவும் குறிப்பிடவில்லை. 

இதே போல் அனைவருக்கும் தரமான உயர்நிலைக் கல்வி அளிப்பதற்காக, சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினால் கொண்டு வரப்பட்ட ராஷ்டிரிய மாதியமிக் சிக்‌ஷ அபியான் (ஆர்எம்எஸ்ஏ) மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உதவுவதற்காக ராஷ்டிரிய உஷ்தார் சிக்சா அபியான் ஆகிய திட்டங்களுக்கும் உருப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

சாதாரண ஏழை மாணவர் களுக்கும் தரமான கல்வியை அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த மூன்று திட்டங்களையும் மோடி அரசு புறக்கணித்திருப்பது கல்வியை கார்ப்ரேட்மயமாக்க வேண்டும் என்ற அதன் தணியாத தாகத்தின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.

 ஆண்டுக்கு 2 கோடி வேலை எங்கே?

 2014ல் அச்சே தீன் -நல்ல நாட்கள் வரப்போகின்றது என்று சொல்லி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மோடி வாக்குறுதி அளித்தார். அதிகபட்மாக 2015-&16ல் 1.5 லட்சம் வேலைகளை உருவாக்கினார்கள். ஆனால் இந்த வரவு செலவு திட்டத்தில் வாக்குறுதி அளித்தபடி 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் பார்க்க இயலவில்லை.

 மொத்தில் மோடி அரசு சமர்பித்துள்ள 4 வது பட்ஜெட் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கெட்ட நாட்களை கொண்டு வரும் வகையிலும் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு நல்ல நாளை கொண்டு வரும் வகையிலும் தான்வடிவமைக்கப்பட்டுள்ளது.

19.3 மக்கட் தொகையுடைய சிறுபான்மையினருக்கு மொத்த செலவீன ஒதுக்கீடு 0.21 விழுக்காடு மட்டுமே. கடந்த ஆண்டைவிட வெறும் ரூ368 கோடி மட்டும் அதிகரித்து விட்டு சிறுபான்மையினருக்கு பெரும் சலுகை அளித்து விட்டதாக மக்களை ஏமாற்றுகிறது மோடி அரசு.

-சுவனத்தின் செல்வன்


Who's Online

We have 45 guests and one member online

  • Leonardrof