சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே, ஜனவரி 28ஆம் நாள் எம்.டி.டி.டபிள்யூ, மேம்பிள் மற்றும் எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் எம்.டி.டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. 

 கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் சுமார் 32கி.மீ. தூரம் வரையில் பரவி கடலை மாசுபடுத்தி விட்டது. இந்த எண்ணெய் மாசை அகற்றும் பணியில்,தீயணைப்பு படைவீரர்கள், கடலோர காவல் படை வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டாகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் மீனவர்கள் உட்பட நூற்றுக் கணக்கான பொதுமக்களும் ‘வாளி’ கொண்டு கச்சா எண்ணையை அகற்றி வந்தனர். இந்த விபத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மீனவர்கள் நல சங்கத்தின் தலைவர் ராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். பசுமை தீர்ப்பாயத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களை பெரிதும் கவலைக்குள்ளாகியிருக்கும் இந்த செயற்கை பேரிடர் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பொறியாளர் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது,  “கடலில் எண்ணெய் கொட்டும் விபத்து புதியதல்ல. இதற்கு முன்பு உலகில் இது போன்று பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்திய கடற்பரப்பில் எண்ணெய் கொட்டியது முதல் அனுபவமாக இருக்கலாம். இதுவும் ஒரு பேரிடர்தான். ஆனால் நம் நாட்டில் இந்தப் பேரிடரை எதிர்கொள்ள எந்த முன்னேற்பாடும் இல்லை.

 அணு உலை வாங்கும் மோடிக்கு எண்ணை உறிஞ்சும் கருவி வாங்க இயலவில்லை.  “கடலில் கொட்டிய எண்ணையை அள்ள உலகில் அதிநவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஸ்கிம்மர் என்றொரு டெக்னாலஜி இருக்கிறது. பி.ஆர்.பி. ஷெட்டல், நானோ பார்ட்டிக்கப் போன்ற தொழில் நுட்ப முறைகள் எல்லாம் இருக்கின்றன. மேக் இன் இண்டியா திட்டத்துக்காக வளர்ந்த நாடுகளுக்குச் சென்று அணு உலை வாங்க ஒப்பந்தம் போடும் மோடி ஏன்,எண்ணையை உறிஞ்சும் தொழில் நுட்பக் கருவிகளை வாங்க முயற்சி எடுக்கவில்லை.

 துறைமுகத்திற்கு உள்ளே தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. இது அதிகாரிகளின் அஜாக்கிரதையால் தான் நடந்திருக்கிறது. அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த விபத்து சுகாதாரத்துக்கே பேராபத்தை உண்டாக்கச் செய்யும்.  இத்தகைய ஆபத்து பற்றி எந்த முன்னறிவும் இல்லாமல் இருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

 “இந்த விபத்தால் கடல் வாழ் உயிரினங்கள் சுவாசிப்பதற்காகவே உள்ள நீர் ஆக்சிஜன்  குறைந்து விடும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடல் உயிரினங்கள் அழியும். மேலும், குளிர்ந்த நீரைத் தாங்கி வாழும் உடல் கூறுகள் உடைய உயிரினங்களும் கடலில் இருக்கின்றன.

கடலின் மேற்பரப்பில் எண்ணெய் படர்வதால் அவற்றின் உடல் கூறு தன்மை அழிந்து விடும். அதன் காரணமாகவும் உயிரினங்கள் அழியும். எந்த பாதுகாப்பு அம்சமும் இல்லாமல் எண்ணையைக் கோரி அள்ளும் பணியில் மக்களையும் இறக்கி விட்டிருக்கிறார்கள். இதனால் சுகாதாரக் கேடுகள் உண்டாகும். மக்களை அதிக அளவில் பாதிக்கும்.

 மீன்களை சாப்பிடுவது உகந்தது அல்ல

 “இப்போது மீன்களை  சாப்பிடுவது உகந்தது அல்ல. ஆனால் ஆழ்கடல் மீன்களை சாப்பிடலாம் என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். எண்ணெய் படலம் ஆழ்கடல் பகுதிக்குப் போகாது என்று நிச்சயம் இல்லை. மீன்களை கச்சா எண்ணை சோதனைக்கு உட்படுத்திய பிறகே சாப்பிட அனுமதிக்க வேண்டும். கச்சா எண்ணை நுண் துகள்களாக கடல் முழுவதும் பரவி இருக்கும்.

 இந்த செயற்கை பேரிடரினால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளார்கள். மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும். இதிலிருந்தாவது பாடம் கற்றுக் கொண்டு இனியாவது தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’என்றார் சுற்றுச் சூழல் போராளி சுந்தர்ராஜன்.

‘‘ சிலர் தனது மாணவர்களிடத்தில், ஒரு அறையில் இருள் கொட்டிக்கிடக்கிறது. அதை எப்படி வெளியேற்றுவீர்கள்” என்று கேட்டாராம் ஒரு ஆசிரியர். அதற்கு மந்த புத்தியுள்ள ஒரு மாணவன் “வாளி ஒன்றை எடுத்து வந்து அறையில் இருக்கும் இருளை எல்லாம் வாளியால் கோரி வெளியில் கொட்டப் போகிறேன்” என்றானாம்’’ அந்த மாணவனுக்கும் மத்திய அரசுக்கும் ஒரே புத்தி தான் இருக்க வேண்டும்.

 மெரினாவில் ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப் போராட்டத்தில் தமிழக போலீசரால் தாக்கப்பட்ட அப்பாவிப் பெண்களை பாதுகாத்ததற்காக மெரினாவை சூழ்ந்த மீனவர் குப்பங்களையும், சந்தைகளையும் தமிழக காவல்துறை திமிரோடு தீவைத்து கொளுத்தியது. அடுத்த 10நாட்களுக்குள் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் அசட்டைத் தனத்தால் வங்கக் கடலில் எண்ணெய் கொட்டி தமிழக மீனவர்களின் வாழ்வாதரமே முடிவுக்கு வந்திருக்கிறது.

 -ஜி. அத்தேஷ்

 

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கையிலிருந்து...

நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தாமல் வாளிகளைக் கொண்டும் கூடைகளைக் கொண்டும் கழிவுகளை அப்புறப்படுத்தி வருவது என்பது வேதனைக்குரியது. வளைகுடா நாடுகளில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதுண்டு.  அங்கெல்லாம் ஆயில் மோப் ஸ்கிம்ர் முறை  பயன்டுத்தப்படுகின்றது. இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால் சுற்றுச் சூழலை பாதுகாத்து கைகளினால் கழிவுகளை அகற்றும் கடலோர காவல்படையினர் மற்றும் இப்பணியில் ஈடுப்பட்டுள்ள சமூக ஆர்வலர்களின் உடல் ஆரோக்கியதையும் பாதுகாக்கலாம். இந்தக் கசிவினால் எண்ணூர் கடல்பகுதி முதல் நீலாங்கரை வரையிலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சம்மந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து பெற்று நிவாரணம் வழங்க வேண்டும்.


Who's Online

We have 43 guests and 2 members online

  • ScroogeBus
  • ymegywu