தமிழகம் தகிக்கிறது... அரசியல் வானில் அனல் வீசுகிறது... முதலமைச்சர் என்ற தகுதியில் இருந்த பன்னீர் செல்வம் தற்போது காபந்து முதலமைச்சர் என்ற வெற்றுப் பதவியில் தொற்றிக் கொண்டிருக்கிறார்.

சசிகலாவோ தற்காலிகப் பொதுச் செயலாளர் என்ற நியமனப் பதவியில் நீடித்து வருகிறார். பன்னீர் செல்வத்தின் தலையெழுத்தை கவர்னர் நிர்ணயிக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. சசிகலாவின் பதவியான பொதுச் செயலாளர் நியமனம் ஏற்றுக்கொள்ளத்தக்கது தானா என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது.

 தற்போது தமிழகத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா இடையிலான ஜனநாயகப் போர் என்று வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் உள்ளூர நடக்கின்ற ‘கோல்டு வார்’ வேறு. அம்பலத்தின் நிகழ்வுகள் தான் விழிகளில் படுகின்றன. அந்தரத்தின் ஆட்டங்களை அடையாளம் காட்டுவதே இந்த அலசல் படைப்பின் நோக்கம்.

 ஜெயலலிதா மறைவின் போது அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபத்திற்கு பிரதமர் மோடி வந்திருந்தார். அஞ்சலிச் சடங்கு முடிந்த பின்னர் அவர் பன்னீர் செல்வத்தை கட்டித்தழுவி தன் மார்புக்குள் ஏந்திக் கொண்டார். அப்போதே அவர் பன்னீரை இதயத்தில் ஏந்திய அர்த்தத்தை இலைமறைவு காய்மறைவாகத் தெரிவித்து விட்டார்.

 பின்னால் அவர் சசிகலாவின் தலையில் கைவைத்து ஆறுதல் கூறினார். இப்போதுதான் தெரிகிறது அவர் சசிகலாவின் தலையில் கைவைத்து விட்டார். சசியின் தலையெழுத்தைக் கலைத்து விட்டார். ஒரே இடத்தில் இருவேறு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியவாறு தமிழகத்தில் அதிரடி அரசியலை ஆரம்பித்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் மோடி.

 நடராசன் – பிரணாப் உறவு

 கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சசிகலாவின் கணவர் ம.நடராசனின் அனைத்து பொது விழாக்களிலும் அவசியம் கலந்து கொள்ளக்கூடிய பிர முகர்கள் என்ற ஒரு பட்டியல் உண்டு. அதில் நிச்சயமாக பிரணாப் முகர்ஜியின் மகளோ, மைத்துனரோ இருப்பர். அவர்களின் உறவினர்கள் டெல்லியில் இருந்தோ, கொல்கத்தாவில் இருந்தோ தமிழகத்திற்கு வந்து ம.நடராசனின் விருந்தினராகத் தங்கிவிட்டுச் செல்வதும் வழக்கம்.

 அதேபோல புதுடெல்லிக்கு எப்போதெல்லாம் நடராசன் செல்கிறாரோ அப்போதெல்லாம் அவரின் நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி மாளிகைப் பயணமும் நிச்சயம் இருக்கும். நடராசனின் இல்லத்திலும், புகைப்பட ஆல்பத்திலும் காணப்படும் பெருமளவு புகைப்படங்களில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ம.நடராசன் கைகுலுக்கியபடியோ, தேநீர் அருந்தியவாறோ, அமர்ந்து அளவலாவுவது போன்றோ படங்கள் இருக்கும்.

 தனிப்பட்ட இந்த நட்பு தற்போது அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ம.நடராசன் புதுடெல்லிக்குச் சென்று ஐந்து நாட்களுக்கும் மேலாக முகாமிட்டிருந்தார். அவரின் பயண நோக்கத்தின் முக்கியமான அம்சமே ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தை ஒட்டியதுதான். அதன் விளைவை தமிழகம் தற்போது சந்தித்து வருகிறது. அதன் ஒரு கட்டத்தை இப்போது அறிவோம்.

 ஆளுநருக்கு வந்த எச்சரிக்கை

 சசிகலாவுக்கு 131 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக, எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் கூடிய கடிதங்கள் கிடைத்து விட்டன. எனவே கவர்னரை சந்தித்து இந்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதங்களோடு கூடிய வேண்டுகோள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய அவசர அவசியத்தில் சசிகலா இருந்தார். இதனை அறிந்த தமிழக கவர்னர் தனது தமிழக நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு புதுடெல்லிக்குப் பறந்தார். அதிகார வர்க்கத்தின் உச்சத்தில் இருந்து கிடைத்த எச்சரிக்கையையடுத்து அவர் அங்கிருந்து மும்பைக்குச் சென்று முடங்கிவிட்டார். 

 நட்டாற்றில் ஜனநாயகம்

 அகில இந்திய ஊடகங்கள் அலறத் தொடங்கின. தமிழகம் தத்தளிக்கிறது, முடிவை எடுக்க வேண்டிய கவர்னரோ ஓடிப்போய் விட்டார், ஜனநாயகத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு திரைமறைவில் ஒளிந்திருக்க வேண்டிய அவசியம் கவர்னருக்கு என்ன வந்தது என்ற வாத பேதங்கள் ஊடகங்களில் ஒலிக்கத் தொடங்கின. அவர் என்ன செய்வார் பாவம். டெல்லியின் உயர் பொறுப்பினர் உத்தரவிடுவதை வைத்துதானே அவர் இயங்க முடியும்.

 மோடி மஸ்தான் வேலையைப் புரிந்துகொண்ட சசி தரப்பினர், எம்.எல்.ஏ.க்களை ஒன்றுதிரட்டினர். புதுடெல்லிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இரவு விமானத்திற்கு டிக்கெட்டுகள் எடுத்தாகி விட்டன. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விமான தளத்தில் குழுமினர். தகவல் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றது. "சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் முன் ஆஜராகி, ஜனநாயக விதிமுறையின் அடுத்தக்கட்ட நிகழ்வுக்கு ஆணையிடுமாறு வேண்டப் போகின்றனர்" என்ற தகவல் ஜனாதிபதிக்கு எட்டியது.  

 அடுத்த ஓரிரு நிமிடங்களில் எம்.எல்.ஏ.க்களின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. மும்பையில் முடங்கிக்கிடந்த கவர்னர் முடுக்கிவிடப்பட்டார். மறுநாளே அவர் சென்னை ராஜ்பவனில் காட்சியளிக்கத் தொடங்கினார். அரசியலின் பரபரப்பு அடுத்தக்கட்டத்தை நெருங்கியது. 

 மோடி & நடராசன் ஆட்டம்

 கவர்னரை கைப்பாவையாக வைத்துக்கொண்டு மோடி காய் நகர்த்துகிறார். ஜனாதிபதியை நட்பினராக நிலைநிறுத்திக் கொண்டு நடராசன் சதுரங்கம் ஆடுகிறார். எனவே தமிழகத்தில் நடப்பது பன்னீர் செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையிலான மோதல் அல்ல. ஜனாதிபதியும் பிரதமரும் தமிழகப் பிரச்சனைக்குள் தலையீடு செய்து கோபதாபங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

 "மக்கள் மத்தியில் சசிகலாவுக்கு கடும் வெறுப்பு நிலவுகிறது. எனவே அவரை முதல்வர் ஆக்கக்கூடாது" என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் ஜனநாயக சமிக்ஞை என்னவென்று புரிய வேண்டும். நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு ஜனநாயகத்திற்குக் கிடையாது. 51 முட்டாள்களின் முடிவை 41 அறிஞர்கள் தலைதாழ்த்தி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஜனநாயகக் கோட்பாடு. 

எம்எல்ஏக்கள் & எம்பிக்கள் சடுகுடு ஆட்டம்

 இப்போதைய நிலையில் எம்.எல்.ஏ.க்களும் மந்திரிகளும் சசி தரப்பில் இருந்தும் பன்னீர் தரப்பிலிருந்துமாக சடுகுடு ஆட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சசிகலாவுக்கு இருக்கிறது. எனவே அவரைப் பதவியேற்க அழைக்க வேண்டிய ஜனநாயக நிர்பந்தம் கவர்னருக்கு உண்டு. ஆனால் இதைவிட மோடித்துவ நிர்பந்தம் மேலானதல்லவா! ராஜினாமா கடிதத்தை பன்னீர் செல்வம் சமர்ப்பணம் செய்தார். அதனைக் கவர்னர் ஏற்றுக்கொண்டார். "மாற்று ஏற்பாடு செய்யும் வரை காபந்து முதலமைச்சராக நீடிக்க வேண்டும்" என்று பன்னீர் செல்வத்தை கவர்னர் கேட்டுக் கொண்டார். ஆகவே ஒரு காலக்கட்டம் முடிந்துவிட்டது. ஆனால் பன்னீரோ... "ராஜினாமாவை வாபஸ் பெறுவேன்" என்கிறார். இது சாத்தியமில்லை என்பது பன்னீருக்குத் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம். "ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை மர்மம் குறித்த விசாரணைக் கமிஷன் அமைப்பேன்" என்று பன்னீர் செல்வம் அறிவிப்பு செய்கிறார். காபந்து முதலமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் ஏதும் கிடையாது என்ற அடிப்படை விதி கூட தெரியாமல் எப்படி இவர் ஆண்டுக்கணக்கில் நீண்டநெடிய காலம் அமைச்சரவையில் குப்பைக் கொட்டினார் என்பது அதிர்ச்சிக் கலந்த ஆச்சரியம்.

 பன்னீரின் அரைவேக்காட்டுத்தனம்

ராஜினாமாவை சமர்ப்பணம் செய்து முடித்துவிட்டு, இனி இந்த நிலைப்பாட்டிலிருந்து மீட்சிக்கு வழியில்லை என்ற சூழல் உருவான பின்னர் அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று மவுனப் போராட்டத்தில் மூழ்குகிறார்.

இந்துத்துவ மெய்யண்பர்களைக் கேட்டால் அவர்கள் இதை, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்கள். உண்மையிலேயே அரசியல் ஸ்திரத்தன்மை மிக்கவராக பன்னீர் இருந்திருப்பாரேயானால் அவர் தனது மவுனப் போராட்டத்தை முன்கூட்டியே நடத்தியிருக்க வேண்டும். 

அப்போது அவர் நிரந்தரமாகவே முதலமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்து வந்தார். 

குதிரை ஓடியபிறகு லாயத்தைப் பூட்டியக் கதையாக பன்னீர் செயல்பட்டிருப்பது அவரின் அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தைக் காட்டுகிறது.

 உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை முடிவெடுப்பதைத் தள்ளிப்போட கவர்னர் தீர்மானித்திருப்பதாகத்தான் தெரிகிறது. நடைமுறை நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தி அரசியல் சாசன நெறிமுறைகளை முறித்துப் போடுவது என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதற்குச் சமம்.

-கும்கி பாகன்


Who's Online

We have 52 guests and no members online