இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த இ.அகமது எம்.பி, நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை நடந்து கொண்டிருந்த நேரத்தில் மயங்கி விழுந்தார் (2017,ஜனவரி 30).

உடனடியாக அவரை தில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். பல மணி நேரம் கழித்து அங்கு அவர் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்.

 அதே நேரம் அவரை அவரது உறவினர்கள் பார்க்க அனுமதிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் தடுத்து விட்டதாகவும், அவருக்கு என்ன நேர்ந்தது, என்ன மருத்துவம் அளிக்கப்பட்டது என்ற எந்த விபரமும் சொல்ல மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் மறுத்ததாகவும் அதனால் இ. அகமது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகள் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

முஸ்லிம் லீக் புகார்

 இதனிடையே மத்திய அரசும், மருத்துவமனை நிர்வாகமும் கூட்டாக சேர்ந்து கொண்டு, எம்.பி.யின்  மரணத்துக்கான காரணத்தை மூடி மறைத்து விட்டார்கள் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.பஷீர், பரக்கல் அப்துல்லாஹ்,மற்றும் வழக்கறிஞர் சையது மர்சூத் பஃபாக்கி ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்கள்.  உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஹரிஸ் பீரான் புகார்களை தொகுத் தளித்திருக்கிறார்.  இ. அகமது எம்.பி.க்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தில்லி காவல்துறை ஆணையர் மற்றும் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் இருவருக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இ.அகமது எம்.பி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சற்று நேரத்தில் அவரை கொண்டு வந்தவர்களிடத்தில்,எம்.பி.யை பார்க்க உங்களை அனுமதிக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிச் சென்றார்கள். சற்று நேரத்திற்குள் பிரதமர் அலுவலகப் பொறுப்பு அமைச்சர் ஜிதேந்திர சிங் மருத்துவமனைக்கு வந்த பிறகு தான் சூழ்நிலை சிக்கலானது.

மத்திய அரசே பொறுப்பு

அமைச்சர் வந்த சற்று நேரத்தில் எம்.பி. அகமதுவை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு போனார்கள். பின்னர் அவரது இரத்த உறவுகளுக்கு கூட அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. எம்.பி.யின் உறவினர்களுக்கும் மருத்துமனை நிர்வாகத்துக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்று இறுதியில் தில்லி காவல்துறை தலையிட நேர்ந்தது.

அவரது இறந்த உடலை இடம் மாற்றம் செய்யும் போது கூட கடினமாக நடந்து கொண்டார்கள். இறந்து போன அவரது உடல் மீது கருவிகளை அள்ளி வைத்திருந்தனர். அவரது உடலை பார்க்க கூட உறவினர்களையோ, நண்பர்களையோ மருத்துமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் முன்பாகவே இறந்து விட்டாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. 

இதன் காரணமாக, உறவினர்கள் கடும் மன வேதனைக்கு ஆளானார்கள். இதற்கான எல்லா உத்தரவுகளும் மத்திய அரசிடம் இருந்து தான் வந்திருக்கிறது. லோகிய மருத்துவமனை கண்காணிப்பாளர் மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு எம்.பி. உடலை பார்க்கவிடாமல் உறவினர்களை தடுத்திருக்கிறார். 

இது மனித உரிமைகளுக்கு பெரும் கேடு செய்த செயலாகும். மருத்துவமனையின் நடவடிக்கைகள் முழுவதுமே தனி மனிதனின் கண்ணியத்தை மதிக்காத படிக்குத்தான் இருந்தது’’என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இ.அகமது எம்.பி.,கேரள முஸ்லிம்களிடத்தில் வலிமை மிக்க தலைவராக விளங்கினார். வலிமை மிக்க மக்கள் தலைவர்கள் மரணித்துவரும் மாநிலங்களில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். வழிநடத்தும் தலைவர்கள் இல்லாத சமுதாயங்களை எளிதில் பலவீனப்படுத்தி விட முடிகிறது. அதனால் தான் இன்று தலைவர்களின் மரணங்கள் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றன.

 மர்மம் தொடர்கிறது

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மரணத்திலும் கூட சந்தேகம் கிளப்பப்பட்டது நினைவிருக்கலாம். பாஜக வின் அரசியல் சூத்திரங்கள் அப்படிப்பட்டது. எது எவ்வாறு இருப்பினும், சந்தேகங்களுக்கு அப்பால், எளிய மனிதனுக்கு கூட கிடைத்திருக்க வேண்டிய மனித உரிமைகளும்,மரியாதையும் நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருக்கு கிடைக்கவில்லை என்பது தான் குற்றச் சாட்டு . இதற்கு தோதான பதிலை கூட மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துவிடும். அதனை ஆணையமும் ஏற்று விடும் என்றே தோன்கிறது. சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவரையும் இழிவாகத் தான் நடத்தும் என்பதைதான் இ.அகமது எம்.பி.க்கு கொடுத்த மரியாதையின்(?)  மூலம் பாஜக அரசு உணர்த்தி இருக்கிறது.

- இம்ரான்.

முந்தைய பதிவு இந்திய  முஸ்லிம் சமுதாயத்தின்  குரலாக நாடாளுமன்றத்தில் எதிரொலித்தவர் இ.அகமது


Who's Online

We have 22 guests and one member online

  • Leonardrof