முஸ்லிம் தனியார் சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சாய்ரா பானு தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் ஜே.எஸ்.கேஹர்  தலைமையிலான அமர்வு அந்த வழக்கை அரசியலமைப்பு அமர்விற்கு மாற்றும் உத்தரவை கடந்த வாரம் பிறப்பித்துள்ளது. 

பொதுசிவில் சட்டம் குறித்து நாங்கள் எதுவும் கருத்துச் சொல்ல முடியாது. அது அரசினுடைய வேலை என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். இதே போல் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தலாக் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதியரசர்கள் மறுத்து விட்டார்கள். முத்தலாக் மற்றும் பலதார மணம் அரசியலமைப்புச் சட்டத்தின் 13ம் பிரிவிற்கு உடன்பட்டு இருக்கின்றதா என்பதை உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் என்று நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

 முஸ்லிம் தனியார் சட்டத்தின் எந்த அம்சத்திலும் தலையிடும் அதிகார வரம்பு உச்சநீதிமன்றத்திற்கு இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் ஒன்றை ஏற்கனவே சமர்ப்பித்திருந்தது.

 இந்த நிலைப்பாட்டை தாங்கள் ஏற்றுக் கொள்ளதாகவும், ஆனால் முத்தலாக்கும், பலதார மணமும் முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கிறதா என்பது குறித்து தாங்கள் முடிவு எடுத்தே ஆக வேண்டிய நிலையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் விசாரணையின் போது தெரிவித்தார்கள்.

  ‘‘இந்த நாட்டின் எந்த ஒரு சட்டமும் அரசியல் சாசனத்தின் சரத்து 13ல் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை தடைசெய்யாமலும்,மீறாமலும் இருக்க வேண்டும். ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்று அரசியல் சாசனத்தில் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை, எந்த தனியார் சட்டமும் மீறக் கூடாது என்றும், அவ்வாறு மீறினால் அது சட்டமாகவோ அல்லது பழக்க வழக்கமாகவோ இருப்பினும் அதை நீதித்துறை ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வானத்திலிருந்து குதித்தது அல்ல

அரசியல் சாசனத்தில் விதிகள் 25 முதல் 30வரை வழங்கப்பட்டுள்ள மத வழிபாட்டு, பிரச்சார உரிமைகளிலும், சிறுபான்மையினரின் கல்வி மற்றும் கலாச்சார உரிமைகளிலும், அடிப்படை உரிமைகள் என்ற பெயரில் ஒருக்காலும் தலையிட முடியாது. அதே நேரத்தில் அடிப்படை உரிமைகளை பேசும் விதி 13ஒன்றும் வானத்திலிருந்து குதித்து வந்ததோ அல்லது கொம்பு முளைத்ததோ அல்ல என்பதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

சொத்துரிமை  (Right To Property) என்பது 1978 வரை அடிப்படை உரிமையாகத்தான் இருந்தது. தனி நபர் சொத்தை ஓர் அரசு கைப்பற்ற முடியாமல் தான் இருந்தது. ஆனால் 44 ஆவது சட்டத்திருத்தத்தின் மூலம் 1978ல் சொத்துரிமையை அடிப்படை உரிமையில் இருந்து அகற்றி விட்டார்கள்.

 கருத்துரிமையும் அடிப்படை உரிமைகளில் தான் இருக்கிறது. ஆனால் சமூக வலைதளங்களிலோ அல்லது பொது வெளியிலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை பேசிவிட முடிமா? எனவே அடிப்படை உரிமைகளும் வரம்புக்கு உட்பட்டது தான். வானளாவிய அதிகாரம் படைத்தது அல்ல. முஸ்லிம் பெண்கள் மீது இவ்வளவு இரக்கம் காட்டும் பாஜக, கொஞ்சம் இந்துப் பெண்களின் மீதும் அக்கறை காட்டலாமே. குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட இந்துப் பெண்களின் கூட்டம், நீதிமன்றங்களில் அதிகளவு குவிந்திருக்கிறதே? ‘மைத்ரி கரார்’ எனும், ஒப்பந்த அடிப்படையில் வைப்பாட்டி வைத்துக் கொள்ளும் பழக்கம் வட இந்தியாவில் இன்றும் உள்ளது. அதை உங்களால் ஒழிக்க முடியுமா? அண்ணன் தம்பிகள் அனைவரும் ‘‘பாஞ்சாலி’’ போல ஒரே பெண்ணை மணந்து கொள்ளும் முறை சில வடஇந்திய சாதிகளிலே இருக்கிறதே,  அதை ஒழிக்க முடியுமா? தமிழ்நாட்டின் தென்மாவட்டங் களில் (காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர்) சேர்வை சமூக மக்களிடையே அறுத்துக் கட்டும் வழக்கம் இன்றும் இருக்கிறதே, அதை ஒழிக்க முடியுமா?

 இஸ்லாமியப் பெண்கள் மட்டும் தான் மதச்சட்டத்தால் துன்பப்படுகிறார்கள் என்று பாஜக முதலைக் கண்ணீர் வடிப்பதும், அதற்கு உச்சநீதி மன்றம் சாமரம் வீசுவதும் தேவையற்ற செயல்கள். 

 முடக்க முடியாத முஸ்லிம் தனியார் சட்டம்

 அவசர நிலை (EMERGENCY)  பிரகடனப்படுத்தப் பட்டால் அரசியல் சாசனமே கூட செயல்படாமல் முடங்கி விடும். ஆனால் முஸ்லிம்களின் தனியார் சட்டம் என்பது அந்த நிலையிலும் கூட முடக்க முடியாதது. அது தன்னிச்சையாக இயல்பாக செயலாற்றிக் கொண்டிருக்கும். இது தான் அதன் சிறப்பு. தனிநபரின் அடிப்படை உரிமைகளைக் காரணம் காட்டி,ஒட்டுமொத்த மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தவோ, கடைபிடிப்பதை தடை செய்யவோ முடியாது என்பதை உச்சநீதிமன்றம் விரைவாக விளம்புகை செய்ய வேண்டும். சிறுபான்மை மக்களின் மத விஷயங்களில் தலையிட உச்ச நீதிமன்றத்திற்கு   எவ்வித அதிகாரமும் இல்லை.

 (We Are Intellectual Bankrupts) நாமெல்லாம் ஞான சூனியங்கள் என்று பல்கி வாலா கூறினார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் எவ்வித விருப்பு வெறுப்பும் இல்லாமல், ஒரு தலை பட்சமாகவும் இல்லாமல் அறிவுப்பூர்வமாக சிந்திப்பார்கள் என்று நம்புவோம்.

- அப்ரார் அஹ்மத்


Who's Online

We have 33 guests and one member online

  • Leonardrof