மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் திவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் ஜோஷி. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரான இவர், மாலேகான் நகரத்தில் 2006 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூருடன் இணைந்து செயல்பட்டவர்.

இந்த குண்டுவெடிப்புகளில் முதலில் மாலேகானைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களே கைது செய்யப்பட்டனர். 

மராட்டிய காவல்துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவில் பணி செய்த அதிகாரி ஹேமந்த் கர்கரே என்பவர்தான் மாலேகான் குண்டுவெடிப்புகளை சனாதன இந்துத்துவ அமைப்புகள் செய்தன என்பதை கண்டுபிடித்தார். இவர்களுக்கு மூளையாக செயல்பட்டவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த ஸ்ரீகாந்த் புரோகித்.

சதித்திட்டம்

முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதிகளில் குண்டுவெடிப்புகள் நடத்தி உயிர் பலிகளை ஏற்படுத்தி,  குண்டுவெடிப்பு பழியை  முஸ்லிம்கள் மீது போட்டு  அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பது இவர்களின்  சதித்திட்டமாக இருந்துள்ளது. 

இந்தக் குற்றங்களில் பிரக்யா சிங்குக்கு நெருக்கமாகவும், உதவியாகவும் இருந்தவர்தான் சுனில் ஜோஷி. மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் கையர்சிங் நினாமா என்ற பழங்குடி வகுப்புத் தலைவரை சுட்டுக் கொன்றதாக சுனில் ஜோஷி ஒரு வழக்கில் தேடப்பட்டு வந்தார். 

ஜோஷி கொலை

அந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சுனில்ஜோஷி 29.12.2007ஆம் ஆண்டில், திவாஸ் பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து சில மீட்டர் தூரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தார். 

ஜோஷி கொல்லப்பட்ட வழக்கை மத்தியப் பிரதேச காவல்துறை முதலில் கிடப்பில் போட்டுவிட்டது. இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த ராம்சரண் பாட்டீல் அளித்த தகவலின் அடிப்படையில், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஹர்ஷக் சோலங்கி என்பவர் ராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையிடம் சிக்குகிறார். மாலேகான் குண்டுவெடிப்பை விசாரித்து வந்த மராட்டிய தீவரவாத தடுப்புப் படைதான் பிரக்யாசிங் தாகூரை அடுத்து ராம்சரண் பாட்டீலையும்  கைது செய்திருந்தது.

 வாஜ்பேய் காலத்தில் சம்ஜவ்தாவில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு ரயில் விடப்பட்டது. அந்த ரயிலில் 2007ஆம் ஆண்டு ஒரு குண்டு வெடிப்பு நடந்து பாகிஸ்தான் நாட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த குண்டு வெடிப்பை திட்டமிட்டு நடத்தியவர் பிரக்யாசிங் தாகூர் தான். அவருக்கு உதவியவர்களான லோகேஷ் சர்மா, ராஜேந்திர சௌத்ரி, ஹர்சத் சோலங்கி. ஆகியோர் மீது 2007ல் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றப் பத்திரிகை இருக்கிறது.

விசாரணை

ராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையிடம் ஹர்ஷத் சோலங்கி சிக்கிக்கொண்ட பிறகுதான் மத்தியப் பிரதேச காவல்துறையினர் மீண்டும் வழக்கை விசாரிக்கத் தொடங்கினார்கள். சுனில் ஜோஷியின் வழக்கு சாதாரண வழக்காக அல்லாமல் பயங்கரவாதச் சம்பவங்களால் விளைந்த கொலையாக விசாரிக்கப்பட்டது.

 சுனில் ஜோஷி ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர். இவர் பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூருக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தவர். பெண் சாமியாருக்கு இவர் பாலியல் துன்பம் கொடுத்து வந்திருக்கிறார். இதனால் ஜோஷியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து அதற்கான  பணியை சர்மா மற்றும் ராஜேந்திர சௌத்ரியிடம் ஒப்படைத்திருக்கிறார். 

ஜோஷியைக் கொலை செய்வது பற்றி இவர்கள் 15 நாட்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.  சுனில் ஜோஷி கொலையில் பிரக்யாசிங் தாகூருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் ஜோஷி கொலை வழக்கையும் பயங்கரவாத வழக்கின் தொடர்ச்சியாக விசாரணை செய்யப் போவதாக தேசிய புலானாய்வு முகமை (என்ஐஏ) மும்பை உயர்நீதிமன்றத்திடம் 2011 ஜூன் மாதம் கோரிக்கை வைத்தது. மும்பை உயர்நீதிமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்தது. சுனில் ஜோஷி கொலை வழக்கில் 8 பேர் மீது குற்றப் பத்திரிகை தயார் செய்து 2014 ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்திடம் ஒப்படைத்தது என்ஐஏ. 

ஜோஷியின் கொலை வழக்கை விசாரித்த போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானதாகவும், பயங்கரவாதம் மற்றும் சதித்திட்டங்கள் நிறைந்த தாகவும் இருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய குற்றப் பத்திரிகை

 போபாலில் இருக்கும் சிறப்பு நீதிமன்றம், என்ஐஏ குறிப்பிடுவது போல ‘ஜோஷியின் கொலை, பயங்கரவாதச் சம்பவங்களின் தொடர்ச்சி அல்ல, சாதாரணமான கொலைதான்’ என்று சொன்னது மட்டுமில்லாமல், கொலை வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திடம் இருந்து விடுவித்து திவாஸ் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியது. மத்தியப் பிரதேச காவல்துறை, சுனில் ஜோஷி சம்பந்தமாக திவாஸ் நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு குற்றப்பத்திரிகையை அளித்திருந்தது. இதன்பிறகு இந்த வழக்கில் முன்னர் கிடைத்திருந்த ‘துப்பாக்கி வைத்திருத்தல், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல்’ போன்ற ஆதாரங்களை அழித்துவிட்டு காவல்துறை தரப்பு புதிய குற்றப் பத்திரிகையை திவாஸ் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.

 சுமார் 10 ஆண்டுகள் நடந்துவந்த இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட 8 பேரும் இப்போது திவாஸ் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். மத்தியப் பிரதேச காவல்துறையும் என்ஐஏயும் குற்றவாளிகளுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்களைத் திரட்டி சமர்ப்பிக்கவில்லை என்று திவாஸ் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ராஜீவ் மதுசூதன் ஆப்தே கண்டனம் தெரிவித்திருக்கிறார். என்ஐஏ தீவிரமாக வேலை செய்யவில்லை என்றும் கடிந்துள்ளார்.

ஒப்புதல் வாக்குமூலம்

கொலை வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் திலீப் ஜக்தாப் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். 

ஜக்தாப் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் உட்பட 35 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. எனினும் இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பவைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் மத்தியப் பிரதேச காவல்துறையும் என்ஐஏயும் பாரபட்சத்துடன் நடந்துகொண்டதாக நீதிபதியே குற்றம்சாட்டியிருக்கிறார்.

 மத்தியப் பிரதேசத்தின் காவல்துறை அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் பிடியில் தான் இருக்கிறது. என்ஐஏ மத்திய பாஜக அரசின் வசம் இருக்கிறது. 

2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்துத்துவா அமைப்பினர் தொடர்புடைய பல பயங்கரவாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்கள் விடுதலைப் பெற்று வருகிறார்கள்.

 சுனில் ஜோஷி கொலை வழக்கை பயங்கரவாத சம்பவத்தின் தொடர்ச்சியாக விசாரிக்க மும்பை நீதிமன்றத்திடம் 2011ல் வேண்டிவிரும்பி கேட்டுக்கொண்ட என்ஐஏ., 2014க்குப் பிறகு நமத்துப் போனது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

பிரக்யாசிங் தாகூர், ஸ்ரீகாந்த் புரோகித், அசிமானந்தா தொடர்புடைய குண்டுவெடிப்புகள் சுமார் 10 ஆண்டுகளாக நடந்துவந்தும் வழக்கு முடிவுக்கு வராமல் இருப்பது ஏன்? அல்லது வழகுகளின் சாட்சிகள் பிரண்டு, விசாரணையின் வீரியம் குறைந்து, தீர்ப்புகள் நமத்துப் போவது ஏன்?

 கொலை மற்றும் பயங்கரவாதம் சம்பந்தமான ஒரு வழக்கை முதலில் காவல்துறையும் பின்னர் என்ஐஏயும் விசாரிக்க, இரண்டுக்குமிடையில் ஏராளமான முரண்பாடுகள் காணப்பட நீதிமன்றம் இரண்டிலும் குழம்பிப் போய் இறுதியில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது ஏன்?

 சுனில் ஜோஷி கொலை வழக்கு 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடந்திருந்தும் குற்றவாளிகளை நீதிமன்றம் ஏன் தண்டிக்க முடியவில்லை. சுனில் ஜோஷியின் கொலையானது சாதாரணமானதாகக் கருதப் படாமல், பயங்கரவாத சம்பவத்துடன் சேர்த்து விசாரணை செய்யப்பட்டு இறுதியில் சாதாரண வழக்காக முடிந்துள்ளது.

ஜி. அத்தேஷ்


Who's Online

We have 37 guests and one member online

  • Leonardrof