சட்டவிரோதமாகக் குற்றச் செயல்களில் திட்டமிட்டே ஈடுபட்டு வருகிறார் ஒரு ஆன்மீகவாதி.  அவருக்கு இந்தியப்  பிரதமரே ஞானஸ்னானம் செய்து வைக்கிறார்.

நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல் அமைச்சரும் நாவடக்கத்துடன் அடங்கி ஒடுங்கி அமர்ந்து இருக்கிறார். மெய்யன்பர்களோ பக்தியின் பெயரால் மட்டும் ஒருங்கிணைந்து அமர்ந்து உரக்கக்குரல் எழுப்பி வருகின்றனர். இவ்வாறாக கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் இந்தக் கோலாகல வைபவம் கொண்டாடி முடிக்கப்பட்டு இருக்கிறது.

 தமிழகத்தில் ஒரு தந்திரத் தாண்டவம் உண்டு. புறம்போக்கு நிலப்பரப்பின் மீது சில உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு கண் விழும். அங்கு திடீர் என்று சில குடிசைகள் முளைக்கும். அவை அந்த அரசியல்வாதியின் ஆத்மார்த்த சீடகோடிகளுக்கும், அவர் காட்டுகின்ற நபர்களுக்கும் என ‘ஒதுக்கீடு’ செய்யப்படும். இதில் லகரங்கள் கைமாறி விடும். தகவல் அறிந்ததும் உள்ளூர் உள்ளாட்சி அமைப்பினர், போலீஸ் படையுடன் வருவர். ஆக்கிரமிப்புக் குடிசைகள் கிழித்து எறியப்படும்.

 அந்தப் பகுதி சில வாரங்களுக்கு வெற்றிடமாக இருக்கும். பின்னர் ஒரு கோவில் முளைக்கும். அதில் கும்பாபிஷேகம் நடக்கும். அதன் வரிசையில் குடிசைகள் மறு பிரவேசம் செய்யும்.  கோயில் விழாவில் உள்ளூர் செல்வாக்குள்ள அரசியல் பிரமுகர், காவல்துறை அதிகாரி, அரசு அலுவலர் ஆகியோர் கலந்துகொள்வர் அவ்வளவே...!  அந்த குடிசைப் பகுதியில் ஆளுங்கட்சியின் கொடி ஏற்றுவிழா நடக்கும். கட்சிக் கிளைக்குரிய பெயர்ப்பலகை திறக்கப்படும்.

 அரசின் நிலச்சொத்து பட்டப்பகலில் பகிரங்கமாகக் கபளீகரம் செய்யப்படும். இவ்வாறாகத் தமிழகத்தில் தான் அதிக அளவில் புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புக் கோயில்கள் எழுப்பப்பட்டு இருப்பதை உச்சநீதிமன்றம் கண்டுபிடித்தும் கூறியிருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே 85 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் எனில் இப்போது எவ்வளவு இருக்கும் என எண்ணிப் பாருங்கள். இந்தக் கோயில்களையொட்டிக் குடிசைகள் என்று கணக்கிட்டால் எத்தனை லட்சம் எனவும் கற்பனை செய்து பாருங்கள். மூச்சு முட்டும்.

  நிலஅபகரிப்பு ஜாக்கி

 "இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாம் ஜுஜுபி... என் சாதனையைப் பார்" என்று மார்தட்டிப் பேர் எடுத்துக்கொண்டு இருக்கிறார் கோவைக் கோமான் ஜக்கி வாசுதேவ். அவர் வெள்ளியங்கிரி என்ற வனப்பகுதியில் சுமார் 42 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து விட்டார். ஒரு லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் என்றால்... ஜக்கியார் நிலஅபகரிப்பு ஜாக்கியாகத் திகழ்கிறார். 13.5 லட்சம் சதுர அடி நிலம் என்றால்... ஏதோ ஒரு ஊரையே வளைத்து உலையில் போட்டுக் கொண்டது போல் உள்ளதே!   அந்த நிலத்தில் கட்டிடங்களைக் கட்டி வந்தார். ஈஷா யோகா மையத்தின் இந்தக் கட்டுமானம் நில ஆக்கிரமிப்பு என்ற சாதா சட்டவிரோதம் மட்டுமல்ல, வனப்பகுதியில் கட்டுமானம் என்ற கடும் சட்ட விதிமீறலும் ஆகும். எனவே கடந்த 2012ம் ஆண்டே இந்தக் கட்டுமானத்தை இடித்திட தமிழக அரசு நோட்டீஸ் விடுத்தது.

 "கட்டிடங்களையா இடிக்கச் சொல்கிறாய். மகனே... நான் என்ன செய்கிறேன் பார்" என்று வஞ்சினம் கூறினார் ஜக்கி. மளமளவென்று திட்டம் தயார் ஆனது. 112 அடி உயரத்தில் ஆதியோகி என்ற சிலையை நிர்மாணித்தார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அழைத்தார். கடந்த 24ம் தேதி சிலையை பிரதமர் திறந்து வைத்து நெக்குருக நாவாடினார். வேறு வழியின்றி தமிழக முதல்வரும் அரங்கத்தில் ஆஜர். பாஜக நியமனம் செய்த தமிழக, புதுவை ஆளுநர்களும் அமர்ந்திருந்தனர். பற்றாக்குறைக்கு மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூட வருகை தந்தார்.

 மலைப்பகுதிக்கு மானபங்கம்

 குற்றங்களைத் தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள், அரசு சொத்துக்களைப் பாதுகாத்திட சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு வந்தவர்கள் ஒருங்கிணைந்து நிலம் அபகரிப்பாளரின் தவறுகளுக்கு உடந்தையாகி இருக்கின்றனர்.

 மலைப்பகுதியே மானபங்கப் படுத்தப்பட்டுள்ளது. வனத்து நிலமே தனிநபரால் தனதாக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியும் இந்த ஆக்கிரமிப்புக்குள் சிக்கி இருக்கிறது. ராஜவாய்க்கால் என்ற நீர் ஓட்டப் பகுதியும் ஜக்கியின் ஜாகைக்குள் முடக்கப்பட்டுள்ளது. 300 சதுர மீட்டர் பகுதியில் விளைநிலங்களை மாற்றிட மாவட்டக் கலெக்டரிடம் அனுமதி பெற்றார்கள். லட்சக்கணக்கான சதுர அடி பரப்பளவில் கட்டுமானங்களை எழுப்பி விட்டார்கள்.

 வக்கீல் வெற்றிச் செல்வனின் வழக்கு உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கே.கல்யாண சுந்தரம் ஆகியோர் விசாரணை நடத்தி, நான்கு வார காலத்தில் மீண்டும் விசாரணை என்று அறிவித்துள்ளனர்.

 வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவி பி.முத்தம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதே பிரச்சனையை முன்வைத்து வழக்குத் தொடுத்துள்ளார்.

 தன் மனைவியையே கொலை செய்து விட்டதாக ஒரு வழக்கு ஜக்கி வாசுதேவ் மீது இருக்கிறது. இந்த வழக்கும் இன்னும் முடிவு எய்தாமல் இழுவையில் உள்ளது.

 இவற்றை எல்லாம் தொகுத்துக் கூறி, "ஜக்கி வாசுதேவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்குவதைத் தடை செய்ய வேண்டும்" என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யபப்பட்டு இருக்கிறது.

 யானைகள் உலவும் வனம்... அவற்றின்  நீர்த்தேவைக்குத் தாகம் தணிக்கும் இடம்... இதை ஜக்கி மடக்கிக் கொண்டு விட்டார். இதனால் யானைகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நகரப் பகுதிக்குள் படை எடுத்து வருகின்றன. நாமோ அவற்றை அடித்துத் துன்புறுத்தி வனத்துக்கு விரட்டி வருகிறோம். வாயில்லா ஜீவன்களின் வயிற்றில் அடித்து விட்டார்களே என்று எண்ணிப் பார்க்க வேண்டும். மேனகா காந்திகளுக்கு இத்தகு துன்புறுத்தல் புரிவதில்லையா? காளைகளின் மீது மட்டும் தான் குறியா?

 இன்னலுக்குத் துணை போவதா? எண்ணிப் பாருங்கள்.


Who's Online

We have 20 guests and 2 members online

  • dasni-Lydindom
  • Leonardrof