கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் ஜக்கி வாசுதேவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ள ஆதியோகி என்ற சிவன் சிலையை (112அடி உயரம்) பிரதமர் மோடி  திறந்து வைத்தார்.

தொடர்ந்து  ஜக்கி எழுதிய ‘ஆதியோகி யோகத்தின் மூலம்’ என்ற நூலையும் மோடி வெளியிட்டார்.  கடந்த பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற இந்த விழாவில், பிரதமர் மோடி   பேசும் போது, ‘‘இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நம் முன்னோர்களிடத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்’’என்று குறிப்பிட்டார். ஆனால் 1லட்சத்து 25ஆயிரம்  சதுர மீட்டர் பரப்பளவில் ஆசிரமம் கட்டி லட்சக்கணக்கான மக்களை குமியச் செய்து மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சூழலை ஜக்கி வாசுதேவ் கெடுத்து விட்டார் என்று இயற்கை ஆர்வலர்கள் வைக்கும் குற்றச் சாட்டை பிரதமர் பொருட்படுத்தவில்லை.

 பூவுலகின் நண்பர்கள்

ஈஷா யோகா இயற்கையை அழிக்கும் வகையில் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டியிருக்கிறது. அதனால் விழாவில் பிரதமர் கலந்துக் கொள்ளக் கூடாது என்று தமிழகத்தில்இருந்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள் கடிதம் ஒன்றையும் முன்னரே அனுப்பியும் இருந்தது. 

 நொய்யல் நதியின் ஆரம்ப இடம் இந்தப் பகுதிதான். யானைகள் இனப்பெருக்கம் செய்யும் இடத்தையும் சுற்றி வளைத்து பல்வேறு கட்டுமானங்களை ஜக்கி உருவாக்கி வைத்திருக்கிறார். இதன் காரணமாக யானைகள் போக்குவரத்துக்கான பாதை தடுக்கப்பட்டுள்ளது. யானை இனத்தின் அழிவுக்குதான் இது வழிவகுக்கும் என்று ஈஷாவின் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.  பிரதமர் வருகைக்கு முன்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. 

 வழக்குகள்

ஈஷா அமைப்பானது வெள்ளியங்கிரி மலைமீது கட்டடங்கள் கட்டுவதற்கு முறையான அனுமதிகளை பெறவில்லை என்று செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் குறிப்பிட்டார். 

இயற்கையை பாதுகாக்கவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும் வேலை செய்து வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன். இவர் 2013ஆம் ஆண்டில் ஈஷாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார் (ரிட் மனு எண்:5885)

அதில், இக்கரை பொலுவம்பட்டி கிராமத்தில் ஈஷா பவுண்டேஷன் சட்ட விரோதமாக கட்டியுள்ள கட்டடங்களை இடித்துத் தள்ள ஜக்கி வாசு தேவுக்கு உத்தரவு போட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

 சட்டப்படி நடவடிக்கை இல்லை

 கோயம்புத்தூர் பகுதி நகர - கிராமத் திட்டமிடலின் துணை இயக்குனர்  ஈஷா மையத்துக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், இக்கரை புலுவம்பட்டி கிராமத்தில் 48/1,48/2,49/50 என்ற சர்வே எண்கள் கொண்ட நிலத்தில் உள்ள மத சம்பந்தமான கட்டடங்களையும், பிற கட்டடங்களையும் இந்த உத்தரவு கையில் கிடைத்த 30 நாட்களுக்குள் இடித்து தள்ளி விட்டு அந்த நிலம் முன்பு எப்படி இருந்ததோ அதே நிலைக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார்.  ஈஷா கட்டியுள்ள சட்ட விரோத கட்டடங்களின் பரப்பு 1,25,000 சதுர மீட்டர் ஆகும். இது பற்றிய அறிக்கை ஒன்றையும் இந்த வழக்கில் துணை இயக்குனர் தாக்கல் செய்தார்.

 2013ஆம் ஆண்டில் ஈஷாவுக்கு எதிராக மற்றொரு ரிட் மனுவும் (எண்:16583) போடப்பட்டிருக்கிறது. அதில், கோயம்புத்துரில் செம்மேடு போஸ்ட், வெள்ளியங்கிரி மலையடிவாரம் என்ற முகவரியில் நடத்தப்பட்டு வரும் ஈஷா சமஸ்கிருத என்கிற குழந்தைகளுக்கான பள்ளியை மூடவும் உத்தர விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. 

ஜக்கி வாசுதேவ் சட்ட விரோதமாக கட்டிய கட்டடத்தில் தான் அந்தப் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது என்று மனுவுக்கு நகர்புற ஊரக திட்டமிடல் துறையின் துணை இயக்குனர் பதில் அளித்திருந்தார்.  பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல பிரிவிலும் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு மார்ச் 27ஆம் நாள் விசாரணைக்கு வருகிறது.

 நீதிபதி அரிபரந்தாமன்

 இந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்,  ‘‘வெற்றிச்செல்வன் தொடுத்த வழக்குகளில் தமிழக அரசே சட்டவிரோத கட்டுமானங்கள் நடைபெற்றுள்ளன என்று வாக்குமூலம் அளித்த போதினும் இன்றைய நாள் வரை ஒரு கட்டடமும்  இடிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகள் சென்ற பிறகும் இது குறித்து தொடுக்கப்பட்ட மூன்று வழக்குகளிலும் ஒரு இன்ஞ் கூட முன்னேறாதது வருத்தம் அளிக்கின்றது. பிரதமர் இந்த நிகழ்ச்சியில் பங்கு  கொள்வது தவறான சமிக்ஞைகளைத் தருவதுடன் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அங்கீகாரத்தை அளித்துவிடும். எனவே பிரதமர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள கூடாது" என்று குறிப்பிட்டார்.

  நல்லகண்ணு

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு  கூறுகையில், 'தொடர்ந்து பல ஆண்டுகளாக விதிமுறைகளை மீறி ஈஷா யோகா மையம் கட்டடங்களை எழுப்பியுள்ளது. அதனால்தான்,  ஈஷா யோக மையம் நடத்தவுள்ள நிகழ்வை எதிர்க்கிறோம். பிரதமர் வருவதால் எதிர்க்கவில்லை. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் மட்டுமே இந்த நிகழ்ச்சியை எதிர்க்கிறோம்' என்று தெரிவித்தார். சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்புடைய பிரதமர், ஆளுநர், முதலமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், சர்ச்சைக்குரிய சாமியாரின் வேண்டுகோளை ஏற்று,  சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கும் ஆசிரமத்தில் சிரித்த முகத்துடன் கலந்து கொண்டது எவ்வளவு வெட்கக்கேடானது.


Who's Online

We have 52 guests and one member online

  • ymegywu