ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் கலந்து வெளிவந்துள்ளன. 

பத்தாண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. உ.பி.யிலும், உத்தரகாண்டிலும், பா.ஜ.க பெரும் வெற்றி பெற்று விட்டதாக மோடியடிப் பொடிகள் பீற்றி வருகின்றனர்.

மணிப்பூரில் காங்கிரஸ் மணிமகுடம் சூடிவிட்டது. கோவாவில் இழுபறியே வெற்றியாகக் காட்டப்படுகிறது. 

5 மாநிலத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் பாஜக பின்னடைந்து, 2 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஊடகங்களும். ஆரியத்தின் ஊதுகுழல்களும் மதச்சார்பின்மை வீழ்ந்து விட்டதாகவும், பாஜகவின் பாசிச வாதம் வானாளாவிய வெற்றியை எட்டி விட்டதாகவும் சித்தரித்து அதே பாணியில் மக்களை சிந்திக்கவும் நிர்பந்திக்கின்றன.

உண்மை, என்னவெனில் பாஜக வென்ற மாநிலங்களில் ஆளுங் கட்சிக்கு எதிரான அலையும், மதச்சார்பற்ற கட்சிகளின் ஓரணி சேராத பிழையும் தான் அதன் வெற்றிக்குக் காரணிகளாக உள்ளன.

உ.பி.சமாஜ்வாடியின் உள்கட்சி சண்டையும், கூடவே பகுஜன் சமாஜ் வாக்கைப் பிரித்ததும். உவைசி போன்றவர்கள் மேலும் வாக்குகளைக் கலைத்ததும், பாஜகவின் வெற்றிக்கு உதவியுள்ளது. ஆயினும் உ.பி.யில் பாஜகவிற்கு 69% வாக்குகள் எதிராகவே பதிவாகியுள்ளன. இது மதவாதத்தின் வெற்றி அல்ல,  மதச்சார்பற்ற கட்சிகள் அணி சேர்வதில் செய்த பிழையால் தேடிக் கொண்ட தோல்வி.

 தேவ்பந்த் தொகுதியில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் 75,000, 55,000, 10,000 என வாக்குகளைப் பிரிக்க,  1லட்சத்து ஆயிரம் வாக்குகள் பெற்ற பாஜக வென்றிருகிறது. இதே நிலைதான் பரவலாக... உ.பி.யின் வெற்றியை பாஜக தமிழகத்தின் மூலைகளில் கொண்டாடுகிறது. பஞ்சாபின் வெற்றியைக் கொண்டாட தெம்பில்லாமல் காங்கிரஸ் கட்சியோ படுத்து உறங்குகிறது.

இதன்மூலம் மக்களிடம் பாஜக மட்டும்தான் வென்றது போல தோற்றம் உருவாக்கப்படுகிறது. உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான முஸாபர் நகர் கலவரம், அஹ்லாக் படுகொலை உள்ளிட்ட பல கொடூர சம்பவங்கள் சமாஜ்வாதி ஆட்சியில்தான் நடைபெற்றன. ஆளுங்கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்றக் கட்சிகள் இதைத் தடுக்க முடியவில்லை. சங்பரிவார வெறித்தனங்களை ஒடுக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் இருக்க முடியவில்லை. என்ன செய்வார்கள்?

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவது நல்லது என்ற பழமொழியை, மிக, மிகச் சிறுதொகையினர் பரிட்சித்துப் பார்த்திருப்பார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இது இறுதித் தேர்தலல்ல.. பாஜக பெற்றது இறுதி வெற்றியுமல்ல. சட்டமன்றத் தேர்தலில் வென்ற கட்சிகள் பலவும் நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வியதுண்டு. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப்பிடித்த அதிமுக 2004ம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுவையின் அத்தனை தொகுதியிலும் தோற்றது. எனவே எந்த வெற்றியும் நிரந்தரமல்ல. 

மதச்சார்பற்ற கட்சிகளுக்கு எத்தகைய வியூகம் தேவை என்பதற்கு பிஹார் சிறந்த முன்னுதாரணமாகும். எதிரிகளாய் இருந்த லல்லுவும், நிதிஷும், தேசத்தின்  பொது எதிரியான பாசிச பாஜகவை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைத்தனர். மோடி மஸ்தான் வேலை அங்கே முடங்கி, அடங்கி ஒடுங்கியது.

மதச்சார்பின்மை பேசும் கட்சிகள் அதைச் செயலாலும் காட்ட வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும். தீர்க்கமான திட்டங்களைத் தீட்ட வேண்டும். போக்கிரித்தனம் நுழையும் வாசல் அனைத்தையும் பூட்ட வேண்டும். மதச்சார்பற்ற கட்சிகளும், மென்மையான மதவாதத்தைத் தமது அடையாளமாகக் கொண்டிருந்தால்  வெல்லப்போவது வன்மையான மதவாத ஃபாசிசமே என்பதற்கு அக்கட்சிகள் தெளிவாக உணர வேண்டும்.

 ‘‘பதினோறாவது முறையாக விழுந்தவனைப் 

பார்த்து பூமி கேட்டது, 

பத்துமுறை எழுந்தவனல்லவா நீ’’ 

என்ற ஈரோடு தமிழன்பனின் வரிகள் இங்கு நினைவு கூறத்தக்கவை. 

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலைப்போரினை முடித்திருந்தாலும், காவி பாசிசத்திற்கு எதிரான, அயராத போராட்டத்தை நடத்தி தேசத்தை காக்க வேண்டியது, காலம் நம்மீது சுமத்திய கடமையாகும்.


Who's Online

We have 45 guests and one member online

  • Leonardrof