தமிழகத்தில் சதுப்பு நிலங்களில் உள்ள சொத்துகளை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் சதுப்பு நிலங்களில் உள்ள சொத்துகள் தொடர்பான ஆவணப் பதிவுகள் ஏதும் பதிவுத்துறை மூலம் மேற்கொள்ளப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சதுப்பு நிலங்களின் சொத்துக்கள் சிலரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால் தமிழக அரசு இந்த அறிவிப்பை செய்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு


தமிழக அரசு இந்த அறிவிப்பை தானாக முன்வந்து வழங்கவில்லை. நாட்டில் உள்ள அரசு சொத்துக்கள், புறம்போக்கு நிலங்களை எல்லாம் அரசாளும் அரசியல்வாதிகள்தான் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.


சென்னையை அடுத்த பள்ளிக்கரனையில் உள்ள சதுப்பு நிலங்களில் 66.70 ஏக்கர் பரப்பளவை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பத்திரப்பதிவு செய்து ரூ.66 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் பிணை கேட்டு மனு செய்திருந்தனர். நீதிபதி கிருபாகரன் இந்த மனுக்களை விசாரித்து, சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டித்து உத்தரவிட்டார்.


"சதுப்பு நிலம் சுற்றுச்சூழல் மற்றும் பறவைகளைப் பாதுகாக்கும் நிலம் ஆகும். எனவே சதுப்பு நிலத்தை விற்பனை செய்யவோ, சொந்தம் கொண்டாடவோ யாருக்கும் உரிமை இல்லை. தமிழகம் முழுவதும் 1990ஆம் ஆண்டு முதல் சதுப்பு நிலப் பகுதிகளில் பத்திரப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விபரங்களை பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவு வெளியான சில நாட்கள் கழித்துதான் தமிழக அரசு, சதுப்பு நிலப் பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு தடை விதிப்பதாக திடீரென அறிவித்திருக்கிறது. "சதுப்பு நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது" என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது அரசின் கவனத்துக்கு வந்த பின்னரும் அரசு நடவடிக்கை எடுக்காமல்தான் இருந்திருக்கிறது. உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் அரசு பயந்துகொண்டு அறிவிப்பு வெளியிடுகிறது. நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகே அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. மாநிலத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைப் போன்றே முஸ்லிம்களுக்குச் சொந்தமான வக்பு நிலங்களின் சொத்துக்களும் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கிறது. வக்பு நிலங்கள் மாநில அரசுகளாலும் எடுக்கப்பட்டிருக்கிறது.


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் வக்பு நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.


பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு நிலங்கள் மீது முறைகேடாக ஆவணப் பதிவும் செய்து கொடுத்திருக்கின்றன. போலி பட்டாக்களையும் பலர் வைத்துள்ளார்கள். சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு முன்வந்து ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதைப் போன்று வக்பு நிலங்களையும், கோயில் நிலங்களையும் ஆக்கிரமிப்பதைத் தடுக்கவும், போலி ஆவணங்கள் பதிவதைத் தடுக்கவும் தமிழக அரசு அதிரடி உத்தரவு போட வேண்டும்.


வக்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவதைத் தடுக்க சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். வக்பு நிலங்களின் சர்வே எண்கள் மீது போடப்பட்டிருக்கும் போலி ஆவணங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். புதிதாக போலி ஆவணங்கள் போடுவதற்கு எதிராகவும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வக்பு சம்பந்தமான வழக்குகளையும் விரைவாக முடித்துக்கொடுக்க உயர்நீதிமன்றத்துக்கும் ஏனைய மாவட்ட மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கும் மாநில அரசு உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டு காலி செய்ய முடியாத நிலங்களுக்கு மாற்று நிலங்களைக் கொடுக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.


அரசு இதுவிஷயத்தில் மெத்தனமாக இருக்குமானால் முஸ்லிம்களும் நீதிமன்றத்தை நாட வேண்டிவரும்.


Who's Online

We have 46 guests and one member online

  • Leonardrof