முஸ்லிம்கள் மீது வெறிப்பேச்சு பேசி அதன்மூலம் காவி முகாமில் பிரபலம் அடைந்த ஆதித்ய நாத் அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் இடம் பெற்றுள்ளது தேசிய அளவில் பலரின் புருவங்களை உயர செய்துள்ளது.

403 சட்டமன்ற இடங்களைக் கொண்ட உத்திர பிரதேசத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்ற பாஜக, ஒரு முஸ்லிமைக் கூட தனது கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கவில்லை.


உத்தர பிரதேச வரலாற்றிலேயே முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் இல்லாத ஓர் ஆளுங்கட்சி, ஹஜ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகக்கூட ஒரு முஸ்லிம் அல்லாதவரைத்தான் அமைச்சராக அறிவிக்குமோ என யூகங்கள் கொடி கட்டிப் பறந்த நேரத்தில் ஆதித்ய நாத் அமைச்சரவையில் மொஹ்சின் ரஸா என்ற முஸ்லிம் அமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் .


மொஹ்சின் ரஸா ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர், ஆணழகன் போட்டியில் வென்றவர். மற்றும் நடிகர். இவருக்கு அரசியலிலோ சமூகநலன் சார்ந்த விஷயங்களிலோ எவ்வித பெயரோ புகழோ பெறாதவர். லக்னோ உயர் சமூக வட்டாரத்தில் இவர் பொதுவான முகமாக கருதப்படுகிறார்.


இவர் பவுஷியா சர்வத் பாத்திமா என்ற பெண்ணை மணமுடித்தார். இவரது பெயரில் ஷியா இருந்தாலும் கூட, இவர் சன்னி பிரிவை சேர்ந்தவர் தான். பவ்ஷியா பாஜகவின் முக்கியப் பிரமுகரும் தற்போதைய மணிப்பூர் ஆளுநருமான நஜ்மா ஹெப்துல்லா வின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.


ரஸா சென்னை எம் ஆர் எப் பவுண்டேஷனில் பயிற்சி பெற்றவர். முன்னாள் ரஞ்சி டிராபி விளையாட்டு வீரர். மேலும் பொழுது போக்கு அம்சங்களில் அதிக அளவு ஆர்வம் காட்டுபவர். ஆணழகன் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தார். 1995ம் ஆண்டு லக்னோ பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார். நீம் கா பேத் என்ற பெயரில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வெளிவந்த பிரபல ஹிந்தி தொடரில் நடித்திருக்கிறார். சினிமாவிலும் நுழைந்து தனது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்த்தார். இங்கு மக்களின் அதிர்ஷ்டம் அதைவிட வலுவாக இருந்ததால் அந்த துறையில் இவர் சோபிக்கவில்லை.
இவர் உன்னாவ் பகுதியில் பெயர் பெற்ற சபிபூர் ஜமீந்தார் வம்சத்தை சார்ந்த வாரிசாவார். 1999 ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் விளையாட்டுத்துறை பிரிவின் சேர்மனாக பொறுப்பில் இருந்தார். ஆனால் காங்கிரசில் விளையாட்டு போல் ஊடுருவி இருக்கும் கோஷ்டி சண்டையில் தனது பதவியை பறிகொடுத்தார்.


அன்றிலிருந்து அவர் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இருப்பினும் ரஞ்சி டிராபியில் அவர் சாதித்ததைக் கண்ட அவரது ஆதரவாளர்கள் அவரை அரசியலில் மீண்டும் குதிக்கத் தூண்டினர். அவரது பிரபலத்தை நம்பி அவரது மனைவி உன்னாவ் உள்ளாட்சி தேர்தலில் குதித்தார்.


125 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் சொற்ப வோட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததால் ரஸாவுக்கும் அரசியல் ஆர்வம் மீண்டும் துளிர் விட்டது. 2010ல் சபிபூர் விகாஸ் மன்ச் என்ற பெயரில் ஓர் அமைப்பை இவர் தொடங்கினார் (அடுத்து என்ன கரெக்ட் அதேதான் நீங்கள் நினைத்தது சரிதான் )


2014 ல் பாஜகவில் இணைந்தார். கடந்த ஆண்டு அந்த கட்சியின் செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டார். ராஜ்நாத் சிங் மற்றும் அவரது மகன் பங்கஜ் சிங் உடன் நெருங்கிய நட்புறவு கொண்ட ரஸா ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்று விட்டார். ஹிந்துத்துவாவை மைய நோக்குப் புள்ளியாகக் கொண்ட ஆதித்யநாத் வகையறாக்களுக்கு மொஹ்சின் போன்ற பெயர் தாங்கி முஸ்லிம்கள் தான் தேவை . அரசியல் சமூக பின்னணி இல்லாத ஒருவரை , உயர் தட்டு வர்க்கத்தை சேர்ந்தவராக இருந்தால் போதும் அவர் ஹிந்துவாக, அல்லது முஸ்லிம் பெயர் கொண்ட யாராக இருப்பினும் சரியே என்ற முடிவில் உறுதியாக இருக்கும் பாஜகவின் ஆதிக்க வர்க்க சாய்மானம் உங்களுக்கு புலப்படுகிறதல்லவா?


முஸ்லிம்களை வாக்கு வங்கியாக பார்க்கிறார்கள் என ஏனைய கட்சிகளை குற்றம் சாட்டியவர்கள் இன்று முஸ்லிம்களை எதிர் வாக்கு வங்கியாக மாற்றி முஸ்லிம்களிலும் தங்களுக்கு ஏற்றாற்போன்ற பெயர் தாங்கி முஸ்லிம்களை வளைத்துப் போட்டு கதையை ஒப்பேற்றவேண்டும் என்பதற்காக மொஹ்சின் ரஸா போன்ற பாத்திரங்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள்.


நடுநிலையான ஹிந்து சகோதரர் களை சற்றே திசை திருப்ப ரஸாக் களின் நியமனங்கள் பயன்படும். நடுநிலை போன்று நடிப்பவர்களும் தொலைக்காட்சி விவாதங்களில் கூச்சல் போடும் அந்தக் கட்சி பிரபலங்களுக்கும் ரஸாக்கள் போன்றோர் நஜ்மா ஹெப்துல்லாக்கள், எம் ஜே அக்பர்கள் தேவைப்படலாம் ஆனால் அனைத்திலும் புறக்கணிப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு இவர்களால் முள்ளின் முனையளவுக்கு கூட எள்ளின் மூக்களவு கூட எவ்வித நன்மையையும் இல்லை என்பதே உண்மை.


Who's Online

We have 40 guests and one member online

  • Leonardrof