பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலை கட்ட வேண்டும், என சர்வதேச விளம்பர விரும்பி மற்றும் பாஜக பிரமுகர் சுப்ரமண்யன் சுவாமி கடந்த ஆண்டு வழக்கு தொடுத்து அதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக ஒரு கிரிமினல் வழக்கும், பள்ளிவாசல் இருந்த இடம் யாருக்கு சொந்தம்? என்ற சிவில் வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாபரி மஸ்ஜித் இடம் தொடர்பாக, அலஹாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை அளித்தது. அதன்படி, பாபர் மஸ்ஜித் இருந்த இடம் வழக்கின் மனுதாரர்களான சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அஹாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்புக்கும் பிரித்து கொடுக்க வேண்டும் என்றது.


400 ஆண்டுகளுக்கு மேல் இருந்துவரும் பாபரி மஸ்ஜித் இடத்தை பிரித்து கொடுக்க முடியாது என சன்னி வக்பு வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மற்ற இரண்டு தரப்பினர்களும் மேல் முறையீட்டில் இணைந்து கொண்டனர். உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்தது. மேற்படி வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில்தான் சு,சாமி கோவில் கட்ட வேண்டும் என்கிற விபரீத கோரிக்கையோடு உச்சநீதிமன்றத்தை அணு கினார்.சுவாமியின் விபரீத மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதிக்க வேண்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் அடங்கிய அமர்வு, மனுவை அனுமதித்ததோடு சு.சுவாமியை பள்ளிவாசல் இடம் தொடர்பான வழக்கிலும் இணைந்து கொள்ள அனுமதி வழங்கியது.


கோலுக்கு ஆடும் குரங்கு?

தற்போது உ.பி.யில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு கோரிக்கை வைத்தார் சு.சுவாமி. சாமானியர்களின் வழக்கை விசாரிப்பதில் சுணக்கம் காட்டும் உச்சநீதிமன்றம், சு.சாமி வழக்கு என்றதும் குரங்காட்டியின் கோலுக்கு ஆடும் குரங்கு போல நடந்து கொண்டது. சுவாமியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர், சந்திரசூட், சஞ்சை கிஷன் கவுல் அடங்கிய அமர்வு இந்த பிரச்சனை மதரீதியான உணர்வுகள் சம்மந்தப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி சுமூகத் தீர்வு காண வேண்டும். மனுதாரர்கள் விருப்ப பட்டால் நானே சமரசம் செய்து வைக்கவும் தயார் என்ற தலைமை நீதிபதி, வேறு எந்த நீதிபதியை வேண்டுமானாலும் சமரசத்துக்கு அனுப்ப தயார் என்றும் குறிப்பிட்டார்.


சு.சாமியே இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியதோடு இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி வரும் மார்ச் 31 க்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதாகப்பட்டது பள்ளிவாசலை இடித்து அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற பச்சையான சட்ட விரோத எண்ணம் கொண்ட சு,சாமி சமரசத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


எதிர் தரப்பு மறுப்பு

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆலோசனையை பாபரி மஸ்ஜித் வழக்கில் எதிர் தரப்பினராக உள்ள இரண்டு இந்து மத அமைப்புகளும் நிராகரித்துள்ளன. இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த நிர்மோஹி அகாரா அமைப்பின் தலைவர் மஹந்த் ராம் தாஸ், பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்கள் விட்டுக் கொடுத்ததால்தான் பேச்சு வார்த்தைக்கு வரமுடியும். முஸ்லிம்கள் வேண்டுமென்றால் பள்ளிவாசலை மீர்பாகி நினைவிடத்தின் அருகே கட்டிக் கொள்ளட்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு தரப்பான ராம் லல்லா அமைப்பின் டி.என்.பாண்டே, பேச்சுவார்த்தை அலஹாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடைபெற வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும். கோவில் அருகே பள்ளிவாசல் அமைவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். இத்தகைய நியாய உணர்வு மிக்கவர்களுடன் உட்கார்ந்து சமரச பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என எந்த முட்டாளும் நினைக்க மாட்டான்.


எனினும் ஆலோசனையை கூறியது உச்ச நீதிமன்றம் என்பதால் ஏற்றுத்தானே ஆக வேண்டும். சன்னி வக்பு போர்டு சார்பாக வழக்கை நடத்தி வரும் வழக்கறிஞர் ஜபர்யாப் ஜீலானி அவர்கள் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை மதிக்கின்றோம். எனினும் சமரசப் பேச்சுவார்த்தை நீதிமன்றத்துக்கு வெளியே நடக்க கூடாது. நீதிபதிகளின் முன்னிலையில் நடைபெற வேண்டும் அப்படி நடைபெற்றால்தான் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கும்.


அது தவிர வழக்குக்கு சம்பந்தமில்லாத தனி நபர்களை சமரச பேச்சுவார்த்தை அனுமதிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார். இடம் யாருக்கு சொந்தம் என்கிற இந்த சிவில் வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்க பட வேண்டியது. முஸ்லிம்கள் தரப்பில் இடம் தங்களுக்கு சொந்தம் என்பதை நிரூபிக்கும் அனைத்து ஆவணங்களும் உள்ளன.
மற்றவர்களோ வெறும் மத நம்பிக்கையின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து தற்போது உச்சநீதிமன்றம் வரை அனுமதிக்கப் பட்டுள்ளனர். கூட்டு மனசாட்சிக்கு ஏற்ப தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள் இவ் வழக்கில் கூட்டு நம்பிக்கைக்கு எற்பவும் தீர்ப்புகளை வழங்க கூடும். ஆனால் அதன் பிறகு நீதிமன்றம் தனது மாண்புகளை மொத்தமாக தொலைத்து விட்டு வெறும் ‘மனு"க்கூடமாகவே காட்சி தரும்.


இந்த வழக்குகளையும் கவனிக்கலாமே!


2011ல் எடுத்துக் கொள்ளப்பட்ட பாபர் மஸ்ஜித் இடம் தொடர்பான வழக்கு 6 வருடங்களாகியும் தீர்ப்பளிக்கப்படவில்லை. விரைவில் விசாரிக்க வேண்டும் என்று சுப்ரமணிய சுவாமி கொதிக்கிறார். ஆனால் கோவை சிறைவாசிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு பல வருடங்களாக காத்திருப்பில் கிடக்கிறது. ஷிமிவிமி அமைப்பு தங்கள் அமைப்பின் மீது தொடரப்பட்ட தடையை நீக்க கோரி தொடர்ந்த வழக்கை விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் சுணக்கம் காட்டி வருகிறது.


அதே போன்று பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் இடிக்கப்பட்டதற்கு காரணமான அத்வானி, உமாபாரதி ஆகியோர் மீதான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் உயர்நீதி மன்றத்தால் உருவாக்கப்பட்ட அத்வானி,உமாபாரதி ஆகியோரை மீண்டும் வழக்கில் சேர்க்க உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகளையும் விரைவில் விசாரித்து தீர்ப்பளித்தால் நன்றாக இருக்கும் என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.

 


Who's Online

We have 38 guests and one member online

  • Leonardrof