பாபர் பள்ளி வழக்கில் மத்தியஸ்த தீர்வு சாத்தியமற்றது என நீதியரசர் ராஜேந்தர் சச்சார் தெரிவித்துள்ளார்.

பாபர் பள்ளி வழக்கினை மத்தியஸ்தம் மூலம் தீர்க்கலாம் என்றும் தானே மத்தியஸ்தராக செயல்படுவதற்கு தயார் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்துகள் அவரது கவலை வெளிப்படுத்தியிருக்கலாமே தவிர தீர்வாக அமையாது.

இந்த வழக்கில் தொடர்பில்லாத ஒருவர் இடையில் குறுக்கீட்டு தொடுத்த வழக்கில் நீதிமன்றம் இந்த கருத்தை வெளியிட்டிருப்பது இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சிறிது கவலை அளித்துள்ளது.

சமரசத்திற்கு வழியில்லை

பாபர் பள்ளி வழக்கில் சமரசத்திற்கு வழியில்லை என்பதே எனது கருத்து. மதசார்பற்ற குடியரசு என்று பிரகடனம் செய்யும் நமது அரசியலமைப்புச் சட்டம் குறித்த ஆழமான கேள்விகளை உள்ளடக்கியதே இந்த வழக்கு.

நான் ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் இருந்த போது பாபர் பள்ளிவாசலின் கும்பங்களின் மீது காலிகள் ஏறி அது உடைக்கப்படும் அகோர காட்சியை தொலைக்காட்சியில் கண்டேன்.

உச்சநீதி மன்றத்தில் முதலமைச்சர் கல்யாண்சிங் ‘‘தடுத்திடுவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்திடுவேன்" என்று தந்த வாக்குறுதி பொய்யாயிற்று.

இவ்வாறு நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான அவரை சிறைக்கு அனுப்பாமல், அவர் மன்னிப்பு கோரியதையும், ஏற்றுக் கொண்டு அமைதியானது நீதிமன்றம்.

ஆனால் இதைவிட மோசமானது அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தீட்டிய சதித்திட்டம். அவர் தீடீரென மூத்த பத்திரிகையாளர்கள், உள்துறைச் செயலாளர் ஏன் அவரது அமைச்சரவை சகாக்கள் கூட அணுக இயலாத வகையில் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தார்.

நீதித்துறைக்காக வெட்கி தலைகுனிகிறேன்

பாபர் பள்ளி தகர்ப்பில் நீதித்துறைக்கும் இருந்த பங்கு குறித்து எண்ணி நான் வெட்கி தலைகுனிகிறேன்.


1949 முதல் பாபரி பள்ளிவாசல் வளாகத்திற்குள் எவரும் நுழைய கூடாது என தடை விதித்தது நீதிமன்றம் தான். ஆனால் நமது நாட்டின் உயர்ந்த நீதிபரிபாலன அமைப்பான உச்சநீதிமன்றம் உட்பட நீதிமன்றங்கள் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக இருந்தது என்னை வெட்கப்பட வைத்தது.

 

அந்த சூழலில் கிளர்ந்து வரும் அபாயத்தை அனைவரும் உணர தவறினார்கள். வகுப்புவாதம் என்ற புற்றுநோய்க்கு எதிர்க்கும் ஒற்றை நோக்கத்துடன் அனைவரும் மதசார்பின்மையை பாதுகாக்கும் போராட்டத்தில் ஒன்றிணைந்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

லாகூர் சாகித்கஞ்ச் பள்ளி

டிசம்பர் 6 தேசீய பாவமன்னிப்பு தினம்

நான் ‘‘டிசம்பர் 6ம்ஐ தேசிய பாவமன்னிப்பு கோரல் தினம்‘ என அரசு அறிவிக்க வேண்டுமென பகிரங்கமாக கோரிக்கை விடுத்தேன். அன்றைய தினம் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் நோன்பிருந்து அனைத்து சமூகத்தினரின் நலனுக்காக பிரார்த்தனைகள் புரிய வேண்டுமென கோரிக்கை விடுத்தேன். ஆனால் பாஜக அல்லாத கட்சிகள் இதை ஒரு சட்டம், ஒழுங்கு பிரச்சினையாகவே பார்த்தன. அதன் காரணமாக அந்த பாபர் பள்ளி தகர்ப்பு எனும் பயங்கரவாதச் செயலை சிறிய நிகழ்வாகவே ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

 

கடந்த கால நிகழ்வுகள் ஒரு புறம் இருந்தாலும் அனைத்து தரப்பினரும் அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கட்டும் என்று காத்திருந்தனர். ஆனால்அலஹாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை இருசாராருக்கும் திருப்தி அளிக்கவில்லை. 500 ஆண்டுகள் பாபர் பள்ளிவாசல் இருந்த இடத்தில் பி.ஜே.பி.யினர் கோவில் கட்ட கங்கணம் கொண்டுள்ளனர். முஸ்லிம்களோ பள்ளிவாசல் இருந்த அந்த இடத்தை விட்டுக் கொடுக்கும் வகையில் ஒரு வெட்கங்கட்ட சமரசத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது இயற்கையானது.

தற்சமயம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் தீர்ப்பு வழங்கும் கடமையிலிருந்து உச்சநீதிமன்றம் விலகியிருக்க இயலாது. உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தாது. ஆனாலும் உச்சநீதிமன்றத்திற்கு தீர்ப்பு வழங்கும் உரிமையும், கடமையும் உள்ளது.

தீர்ப்பிற்கு அடிப்படை லாகூர் சாகித்கஞ்ச் பள்ளி வழக்கு

வழக்கின் முடிவை என்னால் கணிக்க முடியாவிட்டாலும் கடந்த கால தீர்ப்புகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டால் அது முஸ்லிம்களுக்கு சாதகமாகவே அமைய வாய்ப்பு மேலோங்கியிருக்கிறது.

இராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதை உச்சநீதிமன்றம் முடிவுச் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இராமர் கோவில் அங்கு இருந்தது என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் அது இந்த வழக்கிற்கு தொடர்பில்லாத விஷயமாகும். ஏனெனில் 500 ஆண்டுகள் பாபர் பள்ளிவாசல் அங்கிருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. பள்ளிவாசல் இருந்த இடத்தில் தான் இராமர் பிறந்தார் என்பதை நிரூபிக்க இயலாது.


இராமர் அங்கு பிறந்தார் என்பது உண்மையான அல்லது திரிக்கப்பட்ட நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் சட்டத்தின் அடிப்படையில் பள்ளிவாசல் இடத்தை அளிப்பதற்கான ஆதாரமாக அந்த நம்பிக்கை அமைந்திட முடியாது.


இராமர் பிறந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்படவில்லை என்று நிரூபிக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு அந்த நிலம் கிடைத்துவிடும். அதனை அவர்கள் பள்ளிவாசல் கட்டுவது உட்பட எப்படி வேண்டுமென்றாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். .இதற்கு மாற்றமாக பாபர் பள்ளிவாசல் இடத்தில் கோயில் இருந்தது என நிரூபிக்கப்பட்டாலும் விஹெச்பி-ஆர்எஸ்எஸ் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்.. ஏனெனில் 1992ல் விஹெச்பி-ஆர்எஸ்எஸ் குண்டர்கள் இடிக்கும் வரையில் அந்த இடத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாபர் பள்ளிவாசல் இருந்தது. சட்டரீதியாக பார்க்கும் போது கோயிலை இடித்து தான் பாபர் பள்ளி கட்டப்பட்டதாக கருதினாலும் சங் பரிவாருக்கு அங்கே கோயில் கட்ட உரிமை இல்லை. பிரிவி கவுன்சில் (ஆங்கிலேயர் ஆட்சி கால உச்சநீதிமன்றம்) லாகூர் சாகித்கஞ்ச் வழக்கில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் நான் இதை கூறுகிறேன்.


கி.பி. 1722 முதல் சாகித்கஞ்ச் பள்ளிவாசல் செயல்பட்டது. 1762ல் அந்த இடம் சீக்கியர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. பள்ளிவாசல் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் குருத்வாரா கட்டப்பட்டது. 1935ல் குருத்வாரா இயங்கும் கட்டடம் பள்ளிவாசல் என்றும் தங்களிடம் அதனை ஒப்படைக்க வேண்டுமென்று முஸ்லிம்கள் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பிரிவி கவுன்சில் தொடர்ந்து குருத்வாராவாக செயல்பட்ட அந்த இடத்தை காலநிர்ணயச் சட்டம் (Limitation Act) அடிப்படையில் பள்ளிவாசலாக மாற்றுவதற்கு ஒப்படைக்க இயலாது என்று தீர்ப்பு வழங்கிளனார்கள்.


இதே அடிப்படையில் தான் 500 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் பள்ளிவாசல் இருந்த இடத்தில் கோவில் இருந்தது என நிர்மான் அகாரா விஹெச்பி உள்ளிட்ட அமைப்பு தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.


இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.

ஒரு வாரிசு தனது மூதாதையரை கொலை செய்தால் கொலையாளி சொத்துரிமையை இழந்து விடுகிறார். பாபர் பள்ளிவாசல் விவகாரத்திலும் மிக மோசமான படுகொலை நிகழ்ந்துள்ளது. எனவே உண்மை எப்படி இருப்பினும் தனது கேடு கெட்ட செயலினால் விளைந்த நன்மையை கொலையாளி அனுபவிக்க அனுமதிக்க முடியாது. பாபர் பள்ளிவாசல் நிலத்தை கோரும் உரிமை அவர்கள் இழந்து விட்டனர்.


விபரங்களும், சட்டநுணக்கங்களும் இவ்வாறிருக்க தீர்ப்பு சொல்லும் அமர்வை அமைக்கும் பொறுப்பு தலைமை நீதிபதியிடமே உள்ளது என்ற போதிலும் ஏழு அல்லது ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு மிகவும் ஏற்புடைய தீர்ப்பை தரும் என நம்பிக்கை கொள்வோம்.


Who's Online

We have 55 guests and no members online