2016 ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஜெ.என்.யூ-வை சேர்ந்த மாணவர் நஜீப் அஹ்மது ஏ.பி.வி.பி கும்பலுடன் வாக்குவாதம் செய்த பின்னர் காணாமல் போனார்.

ஏறக்குறைய 6 மாதம் கடந்த நிலையில் நஜீபின் கதி என்ன ? அவரை கடத்தி சென்ற சதிகாரர்கள் கண்டு பிடிக்கப்பட்டார்களா ? என நாடே கவலைப்படும் தருணத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில ஏடு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல ஓர் இழிவான வேலையில் இறங்கியது.


டைம்ஸ் முதல் பக்கச் செய்தி

மார்ச் 21ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா முதல் பக்கத்தில் நஜீப் அஹ்மது ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்றதாகவும் அது தொடர்பாக தனது மடிக்கணினியில் அந்த அமைப்பின் கொள்கைகள், அதன் நெட்ஒர்க், தலை வெட்டும் முறை போன்றவற்றை வலை தளத்தில் தேடி தேடி பார்த்ததாகவும் அதனை டெல்லி காவல்துறை தனது புலனாய்வில் கண்டறிந்து விட்டதாகவும் அது தொடர்பான வலைதள மற்றும் யூ டியூப் ஆதாரங்களை உயர் நீதிமன்றத்தில் ஒப்படைத்ததாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா 1ம் பக்கத்தில் விட்ட புருடாவை 3 ம் பக்கத்திலும் தொடர்ந்தது. 70 வார்த்தைகளில் முன்னுரையுடன் தொடங்கிய அந்த பொய் செய்தி கட்டுரையை எழுதியவர் ராஜசேகர் ஜா என்பவர் . 500 வார்த்தைகளில் தொடர்ந்த அந்த கப்ஸா கட்டுரையை பின்பற்றி அகில இந்திய அளவில் ஆங்கில தொலைக்காட்சிகள் நஜீப் ஐ எஸ் ஐ எஸ் சேர்ந்தாரா ? அதில் இணைவதற்கு தான் காணாமல் போனாரா ? என வான் வழியே புளுகு பரப்புரையை நடத்தின . எல்லா பொய் நிகழ்வும் 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை.

 
காவல்துறை மறுப்பு

மறுநாள் 22ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கு டெல்லி காவல்துறை மூக்கை பதம் பார்க்கும் விதமாக பதில் கொடுத்தது. நஜிபுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கும் எவ்வித தொடர்பு கிடையாது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. என காவல்துறை உயர் அதிகாரி தீபக் பதக் தெரிவித்திருக்கிறார் .


கடுகளவு மறுப்பு


அதனை தொடர்ந்து 22ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா வில் 5ம் பக்கத்தில் 75 வார்த்தைகளில் மறுப்பு செய்தியை யாரும் பார்த்துவிடாதபடி சிறிய கடுகளவு செய்தியாக வெளியிட்டுள்ளது.


தொழில் முறை விரோதிகளை கொலை செய்ய கூலி படையை அமர்த்துவதைப்போல அரசியல் எதிரிகளை தீர்த்து கட்டுவதற்கு கூலிக்கு ஆள் அமர்த்துவதைப்போல் ஒரு அயோக்கிய செயலை அண்மைக் காலமாக துப்பாக்கிகளுக்கு பதிலாக பேனாக்கள் செய்ய தொடங்கிவிட்டனவா ? அதற்கென சில கொடுமதியாளர்களின் பேனாக்கள் தூண்டப்படுகின்றனவா ? என்ற அச்சம் ஐயம் பரவலாக எழுப்பப்படுகின்றன.


ரத்தக்கரையின்றி உயிரையெடுக்காமல் ஆனால் சம்பந்தப்பட்டவரின் கண்ணியம் , சமூக மதிப்பு போன்றவற்றை ஒழிக்க துப்பாக்கியின்றி எழுதுகோலால் செய்யும் முயற்சி வன்மையாக கண்டிக்கத்தக்கது.


தொடரும் ஊடக பயங்கரவாதம்


2016 பிப்ரவரி 16ல் நீயூஸ் எக்சில் ஜெ என் யூ மாணவர் உமர் ஹாலித் ஜெய்சி முஹம்மத் அமைப்பை சேர்ந்தவர் என ஐபி அறிக்கை வெளியிட்டதாக கூறியது. ஆனால் மறுநாள் தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட கட்டுரையி ல் ஐபி அவ்வாறு எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று கூறியது.


அதுமட்டுமல்ல 2005ல் டிசம்பர் 10 தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளிவந்த செய்தி 29/10 குண்டுவெடிப்பில் குற்றவாளி என ரபீக் ஷா என்பவரை உறுதியாக கூறியது. ஆனால் 12 ஆண்டுகள் கழித்து பிப்ரவரி 16 2017 ல் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். சில ஊடகங்களின் விபரீதம் உணரா பொய்கள் எண்ணற்ற அப்பாவிகளின் வாழ்வோடு விளையாடி இருக்கிறது. இந்த இதயமற்றவர்கள் திருந்துவது எப்போது ?


Who's Online

We have 55 guests and no members online