தமிழகமெங்கும் தாண்டவமாடி வரும் ஜல்லிக்கட்டுப் போராட்ட இயக்கத்தின் தாக்கம் கண்டு தரணியே திணறி வருகிறது.

"உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு" என்று நம் தலைவர்கள் மேடைதோறும் முழங்கி வருவதை அறிவோம். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய புரிதல் வெளிப்படையாக இருந்ததே கிடையாது. ஆனால் இப்போது அந்த உண்மையில் இருக்கின்ற உள்ளார்ந்த அர்த்தம் வெள்ளிடை மலையாய் வெளிப்பட்டிருக்கிறது.

கடந்த ஒரு வார காலமாகவே சென்னை மாநகரம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. தெருவிழா என்றும் கூறும் அளவுக்கு வீதிகள் தோறும் வீச்சுரைகள் நிகழ்ந்தன. அனைத்துமே தமிழக மக்களின் தொன்மைச் சிறப்புமிக்க பண்பாட்டுக் கலைப்பொக்கிஷமாக விளங்கக்கூடிய ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுப்பதற்கான முனைப்புகள் தான். சென்னை மட்டுமன்றி, அலங்காநல்லூர், சேலம், திருச்சி, மதுரை, கோவை என வரிசைக் கட்டினால் 100ஐ தாண்டக்கூடிய ஊர்கள் பட்டியல் ஊர்ந்துவரும். அந்த அளவுக்கான இளைஞர் பட்டாளம், மாணவர் சமுதாயம், மகளிர் கூட்டம், கொத்துக் கொத்தாய்க் குழந்தைகள் வரிசை - என லட்சக்கணக்கான தமிழர்கள் குவிந்துநின்று கூவியெழுப்பிய முழக்கங்கள் விண்ணை முட்டின. "ஜல்லிக்கட்டுக் காளைகளை மீட்டே தீருவோம்..." என்ற நோக்கின் போக்கு அது. 

இத்துணை ஜனத்திரள் எப்படி வந்தது... புரியாது. எந்தெந்த அமைப்புகள் அழைப்பு விடுத் தன...? தெரியாது. தலைவர் கள் யார் யார் களமிறங்கிக் குரல் கொடுத்தனர்...-? கிடையாது. எந்த ஊடகம் வாயிலாகப் போராட்டக் களத்திற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டன...? இல்லவே இல்லை. அப்படியானால் இந்த அளவுக்கான மக்கள் பெருக்கம் மையப்பட்டு நின்றதற்கு அடித்தளமாய் அமைந்த முயற்சிகள் எவை? 

தகவல் புரட்சியின் தாக்கம்

இதற்கான பதிலைத் தேடிப்பிடித்தால் தான் நவீன யுகத் தகவல் புரட்சியின் தாக்கம் வெளிப்படையாகத் தெரிய வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவ-மாணவியர் கையில் பேனாவையோ புத்தகத்தையோ வைத்திருக்கிறார்களோ இல்லையோ... நிச்சயமாக ஆன்ட்ராய்டு அலைபேசியை வைத்திருப்பார்கள். இதுபோதாதா? 

வாட்ஸ்அப், ட்விட்டர், முகநூல், இமெயில், இன்ஸ்டாகிராம் - என சமூகவலைதளங்களின் நவீனயுக ஊடகத்தின் விசுவரூபம் அகிலஉலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. அதற்குத் தமிழகமும் விதிவிலக்கல்ல. இதனைத்தான் பிரம்மாண்டமாக வெளிப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டுக்கான கூட்டம் அடையாளம் காட்டியிருக்கிறது. 

ராஜதந்திரநுட்பம்

ஒவ்வொரு கட்சியும் இப்பிரச்சனையில் தனித்தனியே களமிறங்கி இருந்தாலும் திமுகவின் முயற்சிகள் அரசியல் அரங்கில் முதன்மைத்துவம் பெறுகின்றன. குறிப்பாக அலங்காநல்லூர் ஆர்ப்பாட்டத்தையும், சென்னை உண்ணாநோன்பையும் குறிப்பிட்டுக் கூறமுடியும். களமிறங்கிப் போராடி வந்த காளையர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று வந்தார். அவரை அணுகுவதற்கு ஆர்ப்பாட்டத் தொண்டிளைஞர்கள் கடைப்பிடித்த பாங்கு ராஜதந்திர நுட்பம் கொண்டது.

கடந்த பல்லாண்டு காலத்தில் தெரியவந்த உண்மை ஒன்றுண்டு. "ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும்..." என்பதாக பழமொழியே உண்டு. இதில் அரசியலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது ஜல்லிக்கட்டுக் களத்தின் அறிவிக்கப்படாத சித்தாந்தம். "மு.க.ஸ்டாலின் மீதான அபிமானத்தை முன்னிலைப்படுத்தினால் அரசாங்கத்தின் அணுகுமுறையில் தொய்வு வந்துவிடும்" என்று அவர்கள் கருதினர். எனவே ஸ்டாலின் மீதான அபிமானத்தை அடக்கி வாசித்தவாறே அவரை அன்பு ததும்ப அனுப்பி வைத்தனர். 

ஆனால் அய்யகோ... பாஜகவின் நிலையைப் பாருங்கள். ஒரு பானை சோற்றுக்கு இரு சோறு பதமாக்குவோம். ராதாராஜன் என்ற பெயரில் இந்துத்துவ வயோதிகப் பெண்மணி இருக்கிறார். இவரோ, "பாலியல் இச்சை இலவசமாகக் கிடைத்தால் காளையர் கூட்டத்துக்குக் குறைவா என்ன?" என்று கழிசடை வார்த்தைகளைச் சாக்கடைப் பாணியில் உளறிக்கொட்டி இருக்கிறார். 

கேவலமான மனபிசகல்

எதிர்பார்ப்புகளைத் துறந்து, இதரப் பணிகளை மறந்து, தமிழினத்தின் பாரம்பரியப் பண்பாட்டுப் பெருமையான ஜல்லிக்கட்டை மீட்பதற்கு வீறுகொண்டு எழுந்துள்ள காளையர்களைக் களங்கப்படுத்தி அசிங்கப்படுத்த இதைவிடக் கீழ்த்தரமான வாசகங்களைப் பயன்படுத்தவே முடியாது. ‘ஜல்லிக்கட்டுக்கு வருவோர் ஜொள்ளு சொட்டு விடுவோர்’ எனக் கிண்டலடிப்பது எந்தளவுக்கு கேவலமான மனப்பிசகல் என்பதை நடுநிலை நாயகர்கள் எண்ணிப்பார்த்திட வேண்டும்.

பாஜகவில் எச்.ராஜா என்ற பெயரில் ஒரு தமிழகத் தலைவர் இருக்கிறார். அவரோ, "மாட்டுக்கறி சாப்பிடுவோருக்கு ஜல்லிக்கட்டு எதற்கு?" என்கிறார். ஒருபுறம் மாட்டுக்கறிக்கு எதிராக  மேடையேறி கூவுவது, மறுபுறம் மாட்டுக்கறியைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்து வருமானத்தைக் குவிப்பது - இதுதானே பாஜக தலைவர்களின் இருநாக்குப் பஞ்சாங்கம். இந்துத்துவக் கட்சியின் ‘இருபெரும்’ தலைவர்களின் பேச்சிலிருந்தே... ஏச்சிலிருந்தே... பாஜகவின் பண்பாடு... இல்லை இல்லை புண்பாடு புரிய வரும். ஜல்லிக்கட்டுக் களத்தில் இஸ்லாமியச் சகோதரர்களின் எழுச்சி முழக்கங்களையும் கேட்க முடிந்தது. அவர்களின் தலைவாழ் தொப்பிகள் தான் அவர்களைத் தனியே அடையாளம் காட்ட நேர்ந்தது. தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானவர்கள் என்றும், தமிழர் குலத்திற்கு மாறானவர்கள் எனவும், இஸ்லாமியர்கள் மீது பழிச்சொல் சுமத்துவது சில காவிக்காவியக் கர்த்தாக்களுக்கு வாடிக்கை. அத்தகைய சொத்தைகளுக்கு ஜல்லிக்கட்டு களத்தின் முஸ்லிம் முழக்கங்கள் பாலபாடங்களாக நிகழ்ந்திருக்கின்றன.ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைச் சொற்றொடர் மூலமாகத் தமிழகத்து இளைஞர்கள் அனைவரும் ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், பாலினம் - என அனைத்து மாறுபாடுகளையும், மார்ச்சரியங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஓங்கிஒலித்த ஒற்றுமையை இந்தியாவே விந்தையோடு பார்க்கிறது.

-கும்கிப்பாகன்


Who's Online

We have 52 guests and no members online