எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமைந்துள்ள மாநிலங்களைக் குறி வைத்து நிர்வாகத்தைக் குலைப்பது எனில் பாஜக அரசுக்கு அல்வா சாப்பிட்டது போல.

இதற்கான முன்னுதாரணங்களைப் பல மாநிலங்களில் பார்த்து விட்டோ தமிழகத்தில் தற்போது பாஜக என்ன செய்யப் போகிறது? ஆயிரம் டாலர் கேள்வியாக இருக்கும் இந்த விவகாரத்தில் பாஜக அரசு அடக்கி வாசிக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் மர்மம்தான் என்ன? வருகிற ஜூலை மாதத்தில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்கள் வர உள்ளன. 5 மாநிலங்களின் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பின்பு  ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களுக்கான அறிவிக்கைகளை முறைப்படி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

 

 இந்தத் தேர்தலில் ஜனாதிபதியாகவும், துணை ஜனாதிபதியாகவும் தன் கட்சியினரே வரவேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இதற்குப் போதிய அளவுக்கு எம்.பி.க்கள் மற்றும் எல்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இதற்கான ‘நம்பர் கேம்’ வேலைகளில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

 

 பஞ்சாபில் பாஜக நொடிந்து விட்டது. வருகிற ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜகவுக்கு எத்தகைய வெற்றி கிடைக்கும் என்று தெரியாமல் பாஜக திணறிக் கொண்டிருக்கிறது. 

 

பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவின் முக்கியத் தலைவரான கிரிக்கெட் வீரர் சித்து அக்கட்சியை விட்டு விலகி, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இருக்கிறார். இதனால் பஞ்சாபில் பாஜக நொடிந்து விட்டது. பிரகாஷ்சிங் பாதலின் ஆட்சியால் மாநில மக்கள் கொதிப்பில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக பிரியங்கா காந்தி விசுவரூபம் எடுத்திருப்பதும் பாஜகவுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 கெஜ்ரிவால் கூட பஞ்சாப் மாநிலத்தில் செல்வாக்குப் பெற்று வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தலிலேயே அவரின் செல்வாக்கு ஓரளவுக்கு பஞ்சாபில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, "இவர்களைத் தாண்டி கீழே வந்து விடுவோமோ" என்ற அச்ச உணர்ச்சியும் பாஜகவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

 

 மம்தா பானர்ஜியும் தன் மேற்கு வங்க மாநிலத்தை விட்டு வெளியே வந்து ஐந்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராகக் களமிறங்கிப் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்து விட்டார். இதனால் பாஜக கூடாரத்தில் குய்யோ... முறையோ...

 

வாட்டி வதைக்கும் வாட்டம்

உ.பி.யில் முலாயமுக்கும் அவரின் மகன் அகிலேஷுக்கும் இடையே மோதல் முட்டியதும் பாஜக மனப்பால் குடிக்கத் தொடங்கியது. தேர்தல் கமிஷனின் ஆணைப்படி சைக்கிள் சின்னம் அகிலேஷுக்குக் கிடைத்ததும் மகனுடன் தந்தை ஒன்றிப் போய்விட்டார்.

 பிரியங்கா காந்தியின் முழுமுயற்சியில் மனம் மாறிய அகிலேஷ் தாராளமாக 103 சீட்டுக்களை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்து கூட்டணியை அறிவித்து விட்டார். இதனைக் கண்டும் பாஜக கவலையில் ஆழ்ந்துள்ளது. மக்களவைத் தேர்தலைப் போன்று வெற்றி வாய்ப்பு கிடைக்காதோ என்ற வாட்டம் பாஜகவை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

 மதச்சார்பற்ற வாக்குகள் சிதறிப் போய் பாஜகவுக்கு சாதகம் வந்துவிடக் கூடாது என்று கருதியே மதச்சார்பற்ற ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் போட்டியில் இருந்து விலகி விட்டன. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் களத்தில் இல்லை.

 எனவே உ.பி.யில் மதச்சார்பற்ற வாக்குகள், முஸ்லிம்கள், தலித்கள் மற்றும் யாதவர்களின் வாக்குகள் ஒருங்கிணையும். இவற்றை சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மட்டுமே பகிர்ந்து கொள்ளும். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வழக்கம் போல ராமர் கோயில் விவகாரத்தையும் குறிப்பிட்டுள்ளன. எனவே சிறுபான்மையின மக்களின் கோபாக்கினிக் கொந்தளிப்பும் ஆக்ரோஷமாக வெளிப்படப் போவது உறுதி.

 இவ்வாறாக ஒவ்வொரு மாநிலத் திலும் பாஜகவுக்குத் தலைவலி அதிகம் இருப்பதால் தலைமையே தடுமாறிக் கொண்டு இருக்கிறது. 5 மாநிலத் தேர்தல்களில் பாஜகவுக்குக் குறைவான எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தால் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கனவு தகர்ந்து போகும். அத்தகைய சூழல் இருப்பதால் பாஜகவுக்குத் தமிழக ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அவசியம். தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தேன்கூடு போலத் தெளிவான கட்டுக்கோப்புடன் இருக்கிறது.

அதிமுக அரசு அடக்கமான பிள்ளை

 இதனை அப்படியே தன் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ள பாஜக முனைகிறது. எனவே தான் தமிழக ஆளும் தரப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அடக்கி வாசிக்கிறது. அதிமுக அரசு மீது தாக்குதல் தொடுக்க இப்போதே பாஜக முயற்சி செய்தால் தேன்கூடு மீது கல்பட்ட கதிதான். தேனீக்கள் சிதறிப் பறக்கும். இதில் பாஜகவுக்கு லாபம் ஓரளவு தான். ஆனால் திமுகவுக்கோ அசுர பலம் கிடைத்து விடும். திமுக அரசு அமையும் சூழல்கூட வந்துவிடும். அதிமுக அரசு இருந்தால் அடக்கமான பிள்ளை என்று பாஜக கருதுகிறது. திமுக ஆட்சி அமைந்தால் அதன் மீது கை வைப்பது கடினம். எதிர்ப்பின்  சூடு... சூரியனை நினைவுபடுத்தி விடும்.

 பாஜகவை வளர்க்க முற்படும் இச்செயலால் திமுக ஆட்சி அமையச் செய்ததாக அமையும். இதனால் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கான ஆதரவில் சுணக்கம் ஏற்படும். எனவே தான் இப்போதைக்கு அதிமுக அரசை பாஜக விட்டு வைத்திருக்கிறது. 

 ஆனால், "முதல்வர் பன்னீர் செல்வம் தனது ஆத்மார்த்தமான இஷ்ட சிஷ்யன்" என்று பாஜக கருதுவது தான் ஜனநாயகச் சிறுமை. தமிழகத்தில் பாஜக தலைவர்கள் எல்லாம் பன்னீர் செல்வத்தின் மேலாண்மையைத் தாங்கிப் பிடிக்கும் வகையில் பேசி வருகின்றனர். மன்னார்குடி குடும்பத்தாருக்கு எதிராக பன்னீர் செல்வத்தைக் கொம்பு சீவி விடும் வேலையை பாஜகவின் தேசியத் தலைமை செய்து வருகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்து வருகிறது.

 பன்னீர் செல்வமும் தன் பங்குக்கு பாஜகவின் மீதான தன் அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக பாஜகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தி வருகின்றனர். 

இவர்களின் நோக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் முதல்வர் பன்னீர் செல்வமும் பேசி வருகிறார். தமிழக சட்டசபையில் கூட படங்களைக் காட்டிப் பேசி, பாஜக மேலிடத்தின் மீதான தனது நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் பன்னீர் செல்வமா? செந்நீர்ச் செல்வமா? சூரிய பூமியை ஆரிய பூமியாக்கும் பாஜகவின் முயற்சியைத் தமிழக வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


Who's Online

We have 50 guests and one member online

  • ymegywu