டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேரா. ஜவாஹிருல்லா பேட்டி

முஸ்லிம்களும் இஸ்லாமிய கடுங்கோபாளர்களும் தான் மெரினா வன்முறைகளுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் பேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்துள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச் ஜவாஹிருல்லா. டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஜெயா மேனனுக்கு அவர் அளித்த பேட்டியில் இது போன்ற கருத்துகள் முஸ்லிம் விரோத மனப்போக்கையும் சங் பரி வாரின் பாசிச சிந்தனைகளையும் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கேள்வி: எதிர்காலத்தில் மாணவர் தலைவர்கள் தலைமை தாங்கும் நிலை வரும் என்று கருதுகிறீர்களா?

பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா: சமீப கால தமிழக நிகழ்வுகள் புதிய தலைவர்கள் வரக் கூடும் என்பதற்கு அறிகுறியாக அமைந்துள்ளன. ஆயினும் மாணவர் தலைவர்களும் மெரினா போராட்டத்திற்கு பின்புலமாக இருந்தவர்களும் ஜனநாயகத்தின் அடிப்படையில் நன்கு கூர்தீர்த்தப்பட்ட அரசியல் வியூகமே நீடித்து நிலைக்கும் என்பதை உணர வேண்டும். நமக்கு பரிசுத்தமான ஊழலற்ற சுயநலமற்ற தலைமை தேவை.

 கேள்வி: மெரீனாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் ஒரு வகையில் நல்லதொரு மாற்றத்திற்கு கட்டியம் கூறியுள்ளன என்று சொல்லப்படுகின்றது. உங்கள் கருத்து என்ன?

பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா: அது நிச்சயமாக மாற்றத்திற்கு கட்டியம் கூறும் நிகழ்வுதான். ஜனநாயகம் என்பது வெறுமனே பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமல்ல. என்ன வழிமுறைகளை பின்பற்றி எப்படி ஆட்சி மாற்றம் நடக்கிறது என்பதும் அதில் அடங்கும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அரசியலுக்கு வந்தவர்களின் குரல்கள் பண ஆதிக்கத்தால் நெறிக்கப்படுகின்றன. மெரீனா புரட்சி தொடர்ச்சியாக தமிழகத்தில் நிலவும் விஷம்தோய்ந்த அரசியலை தூய்மைப்படுத்த வேண்டும்.

கேள்வி: கல்வி வளாகங்களில் அரசியல் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் மெரீனாவில் பெருந்திரளாக மாணவர்கள் தங்கள் குமுறல்களை வெளிக்கொட்டினார்கள் என்று சில பார்வையாளர்கள் கருது கின்றார்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீகள்?

பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா: ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்கால தலைமுறையின் அரசியல் உருவாக்கத்திற்கு கல்வி வளாகங்கள் வழிவகுக்க வேண்டும். தமிழகத்தில் பல்லாண்டுகளாக மாணவர் பேரவைகள் ஜனநாயக ரீதியில் அமைக்கபடவில்லை. பெரும்பாலான கல்வி நிறு வனங்களில் நிர்வாகம் தனக்கு அடிபணிபவர்களை வைத்து மாணவர் பேரவைகளை உரு வாக்குகின்றன. இது ஜனநாயக உணர்வுகளுக்கு எதிரானது. கல்வி வளாகங்களில் ஜனநாயகத்திற்கான தளம் இல்லை. எனவே சந்தர்ப்பம் கிடைக்கும் போது மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். மாணவர் சமுதாயத்தை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. உதாரணமாக தொழில் முறை கல்வியை கற்க அவர்கள் மிக அதிகம் செலவுச் செய்ய வேண்டியுள்ளது. கன்ஹய்ய குமார், ரோகித் வெமுலா போன்ற மாணவர் தலைவர்கள் வடபுலத்தில் உருவானர்கள். ஆனால் தமிழக பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஜனநாயக செயல்பாடுகள் விதிவிலக்காக உள்ளன. நிச்சயமாக கடந்த காலங்களில் கல்வி வளாகங்களில் வன்முறைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் அத்தகைய வன்முறைகளை கையாள ஜனநாயக வழிமுறைகள் உள்ளன. ஆனால் முழுமையாக கல்வி வளாகங்களிலிருந்து ஜனநாயகத்தை அழிப்பது சர்வாதிகார போக்காகும்.

கேள்வி: பல்வேறு அமைப்புகள் மாண வர்களின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவும் அளித்தார்கள். பல்வேறு உதவிகளையும் செய்தார்கள். உங்கள் ஆதரவாளர்களும் இவ்வாறு ஆதரவு தெரிவித்தார்கள். இது சரிதானா?

பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா: தங்கள் போராட்டத்திற்கு அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்று போராட்டக்காரர்கள் கவனமாக இருந்தார்கள். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு கலந்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் தங்கள் அமைப்பின் பிரதிநிதிகளாக அல்லாமல் தனிபட்ட முறையில் கலந்துக் கொண்டார்கள். பல்வேறு மதத்தைச் சேர்ந்த கொள்கைகளைச் சேர்ந்த சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பங்குக் கொண்டார்கள்

கேள்வி; பிறகு ஏன் அது வன்முறை வடிவம் எடுத்தது?

பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா: இந்த போராட்டம் மத்தி யிலும் மாநிலத்திலும் ஆட்சியி லிருப்பவர்களின் நிலையை அம்பலப்படுத்தியது. இரண்டு ஆண்டு காலமாக ஜல்லிக்கட்டு நடத்தப் போகிறோம் என்றுச் சொல்லி தமிழ் சமுதாயத்தை அவர்கள் அலைக்கழித்தார்கள். இறுதியில் ஆட்சியாளர்கள் வலிமையான மக்கள் எதிர்ப்பை இந்த போராட்டத்தின் மூலம் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. அரசு நிர்வாகம் அதாவது மத்திய மாநில அரசு நிர்வாகத்திற்கு இனி எதிர்காலத்தில் இது போன்ற ஜனநாயக எழுச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாடு இருக்கின்றது, இதுவே வன்முறைக்கு காரணமாகும். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒரு அரை நாளை அல்லது ஒரு இரண்டு மணிநேர அவகாசத்தைக் கூட தமிழக அரசு கொடுக்க மறுத்தது ஆச்சரியத்தை அளித்தது. காவல் சீருடை அணிந்த காவலர்கள் மீனவர்களின் கடைகளுக்கும் குடிசைகளுக்கும் தீ வைப்பதை நாம் பார்த்ததில்லை. இது மிக மோசமான மனித உரிமை மீறல். ஜனநாயக ரீதியில் போராடினால் என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை மக்களுக்கு எச்சரிகை விடுப்பதற்காகவே இந்த வன்முறை

கேள்வி: முஸ்லிம்களும் மற்றும் இஸ்லாமிய கடுங்கோட்பாளர்களும் வன் முறைக்கு தூபமிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றதே?

பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா: இந்த கருத்து முஸ்லிம் விரோத மனப்போக்கு மற்றும் சங்க பரிவாரின் ஓரவஞ்சனையான சிந்தனையின் பிரதிபலிப்பேயன்றி வேறில்லை. தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். பல நூற்றாண்டுகளாக தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக வாழ்ந்து வருகின்றார்கள். பல்வேறு பிரச்னைகளுக்காக தங்கள் தமிழின சகோதரர்களுடன் ஒன்றிணைந்து போராடி வந்துள்ளார்கள். மத்திய கால தமிழக வரலாற்றை எடுத்துக் கொண்டால் மதுரையை ஆட்சி செய்த பாண்டி மன்னர்களின் அவையில் பல முஸ்லிம் அமைச்சர்கள் சேவையாற்றியுள்ளார்கள். மதுரையை ஆட்சி செய்த குலசேகர பாண்டியன் சீனாவின் ஆட்சியாளர் குப்லாய் கானின் அவைக்கு 1279ல் ஜமாலுத்தீன் என்பரை தனது தூதராக அனுப்பி வைத்தார். மதுரைக்கு படையெடுத்து வந்த மாலிகாபூர் தன்னை எதிர்த்து போரிட்ட வீரபாண்டியனின் படையில் முஸ்லிம் சிப்பாய்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். திருநெல்வேலியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகை நடத்திய போது மழை பொழிந்தது. முஸ்லிம் சகோதரர்கள் நனையாமல் இருப்பதற்காக ஹிந்துக்களும் மற்ற சுமூகத்தாரும் தார்ப்பாயை பிடித்த வண்ணம் நின்றார்கள். முஸ்லிம்கள் இப்போராட்டத்தில் பங்குக் கொள்வதே கடுங்கோட்பாட்டின் விளைவு என்று சொல்பவர்களின் சிந்தனையில் கோளாறு இருக்கின்றது.

கேள்வி: காவல்துறையின் நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசிய முதலமைச்சர் போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் உஸாமா பின்லே டனின் படங்களை பிடித்துக் கொண்-டிருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளதை பற்றி உங்கள் கருத்து என்ன?

பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா: இது போன்ற அறிக்கையை முதல்வர் வெளியிட்டிருப்பது மனவேதனை அளிக்கின்றது. முதலமைச்சர் சொல்வது உண்மையெனில் எத்தனை போராட்டக்காரர்கள் அத்தகைய பதாகைகளை பிடித்துக் கொண்டிருந்தார்கள்? காவல்துறை நடவடிக்கை எடுக்கும் போது தான் அவர்கள் அந்த பதாகைகளை பிடித்துக் கொண்டிருந்தார்களா?

 இது போன்ற விஷமத்தில் ஒருவரோ அல்லது இருவரோ ஈடுபட்டிருக்கலாம். இதை வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அனைவரையும் சமூக விரோதிகள் என்று சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. உஸமா பின் லேடனை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்திய உடன் பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது. பன்னீர்செல்வம் அவரது எஜமானரின் (மோடியின்) ஊதுகுழல் ஆகிவிட்டார்.

 கேள்வி; திமுக மீதும் இந்த பழி சுமத்தப்படு கின்றதே?

பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா: சங்பரிவாரம் முஸ்லிம்கள் மீது பழி போடுவது போல், அதிமுகவும் முக்கிய எதிர்கட்சியான திமுக மீது பழி சுமத்துகின்றது

 நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் 30.01.17


Who's Online

We have 97 guests and one member online

  • ZeettReuck