தமிழக முதல் அமைச்சராக வி.கே.சசிகலா தேர்வு" என்ற செய்தி, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவை அடுத்து,  ஓ.பன்னீர் செல்வம் முதல் அமைச்சராக உடனடியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஏற்படாத பரபரப்பும், விமர்சனமும் இப்போது எழுந்துள்ளது. அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக, அக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒரு மனதாக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது அது அவர்கள் கட்சியின் உட்கட்சி விவகாரம் என்ற அளவில் எதிர்க்கட்சிகள் எந்த விமர்சனமும் செய்யவில்லை.

ஆனால்,  இப்போது அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக, கட்சியின் சட்டசபைக் குழுத் தலைவராக, முதல் அமைச்சராக சசிகலாவை தேர்வு செய்துள்ளனர். கட்சித் தலைமைக்கும், ஆட்சித் தலைமைக்கும் ஒருவரே பொறுப்பில் இருப்பதுதான் சிறந்தது என்ற அடிப்படையிலும், ஜெயலலிதாவுடன் 32 ஆண்டுகள் நெருக்கமாக இருந்தவர் என்ற அடிப்படையிலும், கட்சியையும், ஆட்சியையும் ஜெயலலிதா வழியில் கட்டுக் கோப்பாக நடத்துவதற்கு சசிகலாதான் சிறந்தவர் என்ற அடிப்படையிலும் சசிகலா தேர்வு செய்யப்பட்டதாக அ.தி.மு.க., தரப்பில் கூறுகின்றனர்.

ஆனால், ஜெயலலிதாவின் வீட்டில் இருந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக, முதல் அமைச்சர் பதவியை வழங்குவதா என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே தேர்தலுக்கு பிறகு மூன்றாவது முதலமைச்சர் வினோதம் தமிழகத்தில் நடந்துள்ளது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதேகுரல்தான் சமூக ஊடகங்களில் பெரிதாக எழுப்பப்படுகிறது. 

ஜெயலலிதா ஆட்சி நடந்த போதே, மறைமுக ஆட்சி நடத்தியவர்கள் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துகள் வாங்கிக் குவித்ததால, சொத்துக் குவிப்பு வழக்கிலும் ஜெயலலிதாவுடன் இணைந்து குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்து, பின்னர் ஜாமினில் வெளியே வந்து, அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது. இந்த நிலையில் சசிகலா முதல்வர் ஆவது சரிதானா என்ற கேள்வி, எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது. அதேசமயம், பா.ஜ. க.,வுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஜெயலலிதாவைப் போல சசிகலா மிக உறுதியாக இருப்பார். அதனால்தான் பன்னீர் செல்வத்தை ஆதரிக்கும் பா.ஜ.க.,வினர், சசிகலாவை கடுமையாக எதிர்க்கின்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உட்பட திராவிட இயக்கத் தலைவர்கள் சசிகலா தேர்வை இதனால்தான் ஆதரிக்கின்றனர் என்ற ரீதியிலும் ஒரு கருத்து அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், பா.ஜ.க., ஆதரவு ஆலோசகர்களை சற்று தள்ளியே வைத்திருந்ததற்கு சசிகலாவே காரணமாக இருந்தார் என்றும், இப்போதும் திராவிட இயக்க கொள்கைகளிலிருந்து அவர் சற்றும் நழுவ  வாய்ப்பில்லை என்றும், அதனால் ‘பச்சை தமிழச்சி’ என்ற ஒரே காரணத்திற்காக சசிகலாவை ஆதரிப்பது என்று சில தமிழ் ஆதரவு அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் சமூக ஊடகங் களிலும், பொதுமக்கள் மத்தியிலும் சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கு, பலத்த எதிர்ப்பு இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதற்கிடையில் தன்னை கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்ததாகவும், தனது அமைச்சரவை சகாக்களே தன்னை அவமானப்படுத்தி வருவதாகவும் கூறி முதல்வர் பன்னீர் செல்வம் தமிழக அரசியலில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி விட்டார். இதனால் சசிகலா முதலமைச்சர் ஆவாரா என்பது மில்லியன்டாலர் கேள்வியாக உள்ளது. 


Who's Online

We have 55 guests and no members online