ஆதிக்க சக்திகளின் அட்டூழியம் மீண்டும் அரங்கேறி இருக்கிறது. இந்த முறை நந்தினி.

அரியலூரில் இருந்து செந்துரை வட்டம். அதில் இருந்து 6 கி-.மீ. தூரத்தில் சிறுகடம்பூர் கிராமம். இங்கு வசித்து வந்த 16 வயது சிறுமி தான் நந்தினி. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இந்த ஏழைச் சிறுமியை கட்டிடக் கான்ட்ராக்டரான மணிகண்டன் (25) சந்தித்தார். கண்கள் கலந்தன. கருத்தொருமித்தனர். இதனால் அவள் கருவுற்றாள்.

‘மணந்து கொள்’ என மணிகண்டனிடம் மன்றாடினாள். பக்கத்து ஊரைச் சேர்ந்த மணிகண்டனோ... நந்தினியைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டான். தனி இடத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கு தயாராகப் பதுங்கி இருந்த மணிகண்டனின் நண்பர்களான மணிவண்ணன், வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகியோர் காமுகக் களியாட்டம் நடத்தினர்.

கதறுவதைக் கட்டுப்படுத்த அவளின் தொண்டைக்குள் துணியை அடைத்துத் திணித்தனர். அது அவளின் கீழ் உள்ளாடை. அவளின் தாவணியை எடுத்து முகத்தையும் வாயுடன் சேர்த்துக் கட்டினர். பின்பு கதறக்கூட முடியாமல் அந்தச் சிறுமி கொலை செய்யப்பட்டாள்.

வயிற்றில் இளம் சிசு இருப்பதால் அவன் மாட்டிக் கொள்வான் என்று நண்பர்கள் கூறினர். உடனே பிளேடு மூலமாகச் சில சங்கடமான இடங்களைக் கீறினர். குறும் சிசுவைக் கிளறி வெளியே எடுத்துவிட முயன்றனர். மருத்துவ அறிவு இல்லாததால் அது முடியாமற் போயிற்று.

பின் தயாராகக் கொண்டு வந்திருந்த கயிற்றால் கட்டி அவளை... அவளின் பிரேதத்தை இழுத்துச் சென்று பாழும் கிணற்றில் தள்ளி விட்டனர். பின்பு ஏதும் அறியாதார் போல் சென்று விட்டனர்.நந்தினியைக் காணாத பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். மணிகண்டனின் காதல் லீலைகளைத் தெரிந்து வைத்திருந்த நந்தினியின் தோழி ‘டிப்ஸ்’ கொடுத்தாள். இதனால் மணிகண்டன் மீது சந்தேகம் கொண்டு புகார் சமர்ப்பித்தனர்.

"யார் மீதும் புகார் கூறாதீர். மகளைக் காணவில்லை என்று மட்டும் தருக" என்று சப்-இன்ஸ்பெக்டர் கூறி மனுவைப் பெற்றுக் கொண்டார். 14 நாட்கள் கழித்துத் தான் நடவடிக்கையே எடுக்கப்பட்டது. மணிகண்டனைப் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். உள்ளூர் நண்பர் ஜாமீன் கொடுத்து மணிகண்டனை மீட்டு வந்தார். மணிகண்டன் தான் காமக்கொடூரன் என்று தெரிந்ததும் அந்த ஜாமீன் தந்த மனிதர் பாவம் விஷமருந்தி விட்டார்.

புலனாய்வு செய்த போலீசார் பாழுங்கிணற்றில் இருந்து கர்ப்பிணிச் சிறுமியின் உடலை மீட்டெடுத்தனர். மணிகண்டனைக் கைது செய்த போலீசார் அவனைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். உடனிருந்த காமுகக் கயவர்களும் பிடிபட்டு விட்டனர்.

‘கர்ப்பிணிப் பெண் கற்பழிக்கப்பபட்டு கொலை’ என்ற சாதாரண செய்தியாக இதைப் பார்க்க முடியாது. ஏனெனில் இதன் பின்ணியில் தகிக்கும் செய்திகள் தாண்டவமாடுகின்றன. ஊடகங்களில் இச்செய்தி ஏன் பரபரப்பாக அடிபடவில்லை? சமூக வலைத் தளங்களின் அக்கினிப் பார்வை ஏன் தகதகக்க வில்லை?

ஒரே காரணம்... அந்தப் பெண் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவள். மறுபுறம் மணிகண்டன் யார்? அவன் தலித் அல்லாத ஒரு இனத்தவன். அவனுக்கு உதவிய கொலைவெறிக் கொடூரர்களும் அதே இனம். இவர்களுக்கு உதவிய மற்றொருவர் தலைமறைவாகி விட்டார். ராஜசேகர் என்ற பெயருடைய இவர் யார் தெரியுமா? இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளர். மணிகண்டனோ அதே அமைப்பின் ஒன்றியச் செயலாளர். இவர்கள் இந்து முன்னணியாளர்கள்... ‘இராமகோபாலனின் சீடர்கள்!!

அரியலூரில் கிறித்தவ மிஷன் மற்றும் திராவிடர் கழகக் கூட்டங்கள் நடந்தால் அதில் புகுந்து வன்முறையை ஏவிவிடும் பழக்கம் கொண்டவன் தான் மணிகண்டன். ஏற்கெனவே பல வழக்குகள் அவன் மேல் இருந்ததால் தான் அவனைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க முடிந்தது.

சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியைக் கொடூரமான முறையில் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டான் ஒரு மரண மணாளன். ஊடகங்கள் அடர்த்தெழுந்தன. அகில இந்தியாவே அலறும் வகையில் செய்திகளையும், அலசல் கட்டுரைகளையும் எழுதித் தள்ளின. ஒய்.ஜி.மகேந்திரனும் தன் பங்குக்கு விஷம விதைகளைத் தூவி எழுதினார். இவை எல்லாம் ஏன்? சுவாதி உயர்குலப் பெண் என்பது தான்.

வடநாட்டின் உயர்குலப் பெண்ணான சரிகாவுக்கு கொடூரமான முடிவு ஏற்பட்ட போது அரசியல் தலைவர்கள் அறிக்கையாய் விட்டு அபாய அறிவிப்புகள் எல்லாம் கொடுத்தனர். பல தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து சரிகா விவகாரத்திற்குப் பூதாகரமான வடிவம் கொடுத்தனர்.

டில்லியில் நிர்பயாவுக்குப் படுபாதகமான பாலியல் பலாத்காரத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. அந்தச் செய்தியால் பல அரசியல் நிலைப்பாடுகள் சில நாட்களுக்கு ஸ்தம்பித்துக் கிடந்தன. பெண்ணின் உண்மையான பெயர் வெளியில் தெரிந்தால் அவளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கற்பனையாக அப்பெண்ணுக்கு நிர்பயா என்று பெயர் சூட்டப்பட்டது. நிர்பயா பெயரில் தனி நிதியமே உருவாக்கப்படும் அளவுக்கு அரசு முனைப்புக் காட்டியது. நிர்பயா விவகாரத்தை முன்னிலைப்படுத்தித் தனிச் சட்டமே இயற்றப்பட்டது.

இந்த அளவுக்கு நிர்பயாவுக்கு ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் ஏன் முக்கியத்துவம் தந்தனர்? எண்ணிப் பார்த்தால் மனது கனக்கிறது. அப்பெண்ணும் கஷ்யப் என்ற உயர் குலத்தைச் சேர்ந்தவள் தான்.சுவாதிக்கும், சரிகாவுக்கும், நிர்பயாவுக்கும் வழங்கும் நீதியை ஊடகங்கள் ஏன் நந்தினிக்கு வழங்கவில்லை? இதுகுறித்து ஊடகங்கள் நிச்சயமாக சுயப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

நந்தினியின் குடும்பத்துக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்தியக் குடியரசுத் கட்சியின் தலைவரான முனைவர் செ.கு.தமிழரசன் என தலித் தலைவர்கள் தான் மெனக்கெடுகின்றனர். சமூக வலைதளங்களும், ஊடகங்களும் இதில் தங்கள் நியாயமான பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும்.நந்தினியின் குடும்பத்தாருக்கு வேலை வாய்ப்பு, நிதி உதவி, நில நிவாரணம் கேட்டு முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தைச் சந்தித்து மனுவை அளித்திருக்கிறார்கள் ஊர்ப் பிரமுகர்கள்.

குலத்துக்கு ஏற்ற களம் என்ற தகுதியில்லாத தத்துவத்தை விட்டுவிட வேண்டும். நியாயம் எங்கு இருந்தாலும் குரல் கொடுத்தே தீரவேண்டும் என்ற எண்ணமே எழுத்துக்கு ஏற்றத்தைத் தரும். நந்தினியின் மீதான கொடுமைமிகு தாக்குதலுக்கு எதிராக எழுத்து வழங்கிப் பாருங்கள். எழுத்தே எழுந்து நின்று உதவித் துடிக்கும்.


Who's Online

We have 48 guests and one member online

  • ymegywu