உசேன் முஹம்மது மற்றும் ஜவஹர் அலி ஆகிய இரு சகோதரர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து பட்டா கொடுக்க மறுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலும் வட்டாட்சியருக்கு 6 மாத சிறைத் தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அதிரடி தீர்ப்பை சென்ற வாரம் வழங்கியது. 

இது குறித்து நேரில் கண்டறிய  மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் சொக்கலிங்கபுரத்திற்குச் சென்று உசேன் அலி (வயது 73) மற்றும் ஜவஹர் அலி (70) சகோதரர்களை சந்தித்தோம். அவர்கள் நம்மிடம்: 

1961ல் எங்கள் தந்தை அய்யாத்துரை ராவுத்தர் சொக்கலிங்கபுரத்தில் ஆறு சென்ட் வீட்டு மனை வாங்கி எங்களுக்கு தந்தார். எங்கள் இருவருக்கும் ஓட்டு வீடு ஒன்றை ஒன்னரை சென்டில் கட்டிக்கொடுத்து விட்டு மரணம் அடைந்தது விட்டார்.

தந்தை கொடுத்த இடத்தில் இருந்து  ஆவணங்களை நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சரிபார்த்து நாங்கள் சொத்தை அளந்த  போது எங்கள் இடத்தில் நான்கு சென்ட் இடத்தை தற்போதைய ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பது தெரியவந்தது.

 இது குறித்து மேலூர் வட்டாட்சியரிடம் நாங்கள் புகார் அளித்தோம். ஆனால் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து எங்கள் இடத்தை அளந்து உட்பிரிவு செய்து பட்டா வழங்கும் படி  மேலூர்  உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். இந்த வழக்கு ஆக்கிரமிப்பாளரான ஆளுங்கட்சி பிரமுகரின் செல்வாக்கினால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் மேல் முறையீடு செய்தோம். 

உயர்நீதிமன்ற விசாரணையில்  மேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.  ஆறு மாத கால அவகாசத்துக்குள் தனி பட்டா வழங்கிட மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இரண்டு ஆண்டுகளாகியும் எங்களுக்கு பட்டா வழங்கப்பட வில்லை. இதனால் மீண்டும் நீதிமன்றம் சென்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தோம்.

மனுவை விசாரித்த நீதிபதி  என்.சுரேஷ். குறிப்பிட்ட கால அவகாசத்தையும் தாண்டி இரண்டு ஆண்டுகள் மனுதாரர்கள்  கோரிக்கை நிறைவேற்றப்படாததால் மேலூர் வட்டாட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் வாகனங்களை பறிமுதல் செய்து  அவர்களை ஆறு வாரம் சிறையில் வைக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். 

நீதிபதியின் அதிரடி உத்தரவைக் கண்டு பதறிய மாவட்ட நிர்வாகம்  கடந்த 3ம் தேதி எங்கள் ஊருக்கு வந்த நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை அதிகாரிகள் நிலத்தை அளந்து பட்டா வழங்கப்படும் என்று கூறினார்கள்’’ என்றனர். வயது முதிர்ந்த காலத்திலும் தளராமல் தமது உரிமையை நிலைநாட்ட நீதிமன்ற கதவைத் தட்டி நீதியைப் பெற்ற உசேன் முகம்மது. ஜவஹர் அலி சகோதரர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

 - அப்துல் ரஹ்மான் தாவத்தி


Who's Online

We have 101 guests and one member online

  • ZeettReuck