தமிழ் இதழியல் பணியில் அறுபது ஆண்டு அனுபவம் மிக்கவர். சற்றேறக்குறைய அறுபது நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியவர். ஆனந்த விகடன் வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.

சிங்கப்பூரில் வெளிவரும் தமிழ்முரசு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர். பல மொழிகள் அறிந்தவர். சிறுகதை, நாவல், வரலாறு, கட்டுரை என எல்லா தளங்களிலும் எழுதி வருபவர் மூத்த படைப்பாளி ஜே.எம்.சாலி அவர்கள். 

தற்போது 78 வயதிலும் சுறுசுறுப்பாக எழுதி வருபவர். மக்கள் உரிமைக்காக அரும்பாவூர் தமிழவன் அவரை சந்தித்து நடத்திய உரையாடல்.

கேள்வி : சிங்கப்பூர்  குடியுரிமை பெற்றுள்ள உங்களின் பார்வையில் இந்திய இதழியலுக்கும், சிங்கப்பூர் இதழியலுக்கும் இடையே உள்ள வேறுபாடு?

இந்தியா பலமொழி நாடாக உள்ளது. இதனால் ஒவ்வொரு மொழிக்கும் அந்தந்த மொழிக்கு தகுந்தார் போல் பத்திரிகைகள் வருகின்றன. சிங்கப்பூரில் அப்படி இல்லை. ஆங்கிலம், சீனம், தமிழ், மலாய் ஆகிய நான்கும் அங்கு ஆட்சிமொழி. இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியாக இல்லை. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சிமொழி. சிறிய நாடாக இருந்தாலும், சிங்கப்பூர் பிரஸ்ஹோல்டிங் எனும் அமைப்பின் கட்டுப்பாட்டில் நான்கு மொழி பத்திரிகைகளும் வெளிவருகின்றன. மற்றபடி படைப்புகளில் பெரிய வேறுபாட்டை காணமுடியவில்லை.

சிங்கப்பூரின் தமிழ் இதழ்கள் குறித்து?

சிங்கைத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் இரண்டு நபர்களை தந்தையர் என போற்றலாம். ஒருவர் அதிபராக இருந்த லியூகுவான்யூ. மற்றவர் தமிழ்முரசு ஆசிரியர் கோ.சாரங்கபாணி. முதன் முதலில் சிங்கப்பூரில் தமிழ் இதழ் தொடங்கியவர்கள் முஸ்லிம்கள்தான். 1878ல் ஜனாப் மகுதூம் சாஹிப் அவர்களால் ‘தங்கை நேசன்’ என்ற பத்திரிகை தொடங்கப்பட்டது. பின்பு 1880ல் ‘ஞானசூரியன்’ ‘சிங்கைநேசன்’ போன்ற இதழ்கள் வெளிவந்தன. திருக்குறளை முதன் முதலில் இதழின் முகப்பில் பொறித்தவர் மகுதூம் சாஹிப் அவர்கள்தான். சந்தாதாரர் என்பதற்கு ‘கையொப்பா;’ என்றும் நாவல் என்பதற்கு ‘நூதன கட்டுக்கதை’ என்றும் பெயரிட்டு அழைத்தவர். அவருடைய இதழ்கள் தீனோதய வேந்தன் அச்சகசாலையில் பதிப்பிக்கப்பட்டது.

 1907ல் ‘சிங்கை ஞானோதயம்’ எனும் மாதமிருமுறை இதழ் வெளிவந்தது. திருவாரூரிலிருந்து சிங்கப்பூருக்கு வருகைதந்த கோ.சாரங்கபாணி என்பவரால் 1935ல் ‘தமிழ்முரசு’ இதழ் தொடங்கப்பட்டது. அதில் தான் நான் பணியில் சேர்ந்தேன். அவர் 1974ல் இறந்துவிட்டார். அதன்பின் ‘தமிழ்மலர்’ எனும் பத்திரிகை சிலகாலம் வந்து நின்றுவிட்டது. மூ.கரிம் கனி அவர்களும் அவரே ஆசிரியராக இருந்து ‘மலேயா நண்பன்’ எனும் பத்திரிகையை நடத்தி வந்தார். 

 சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் என்ற ஒன்று இயங்கி வருகிறது. அதன் சார்பில் ‘நாடி’ என்ற காலாண்டிதழ் வருகிறது. மூன்று மொழிகளில் ஒரே சாராம்சத்தில் இவ்விதழ் வெளிவருகிறது. தமிழ் இதழை நான் எனது மேற்பார்வையில் செய்கிறேன். 

சிங்கப்பூரில் 24வருடம் வேலை பார்த்திருக்கின்றேன். சீனியர் ப்ராட்காஸ்ட் ஜர்னலிஸ்ட் என்ற லாங் சர்வீஸ் அவார்ட் எனக்கு இரண்டு முறை வழங்கப்பட்டது. தமிழ் முரசில் பணியாற்றிய போது அங்கு வரும் புதிய இதழாளர்களுக்கு நான்தான் வகுப்பெடுப்பேன். தமிழகத்தில் அச்சிடப்படும் இதழ்கள் அனைத்தும் மறுநாளே அங்கும் வருகிறது. இதன் தாக்கத்தால் சிங்கப்பூர் தமிழ் இதழ்களின் பதிப்பு அருகி வருகிறது.

கேள்வி: ஆனந்த விகடனில் இணை ஆசிரியராக உங்களின் அனுபவம் குறித்து: விகடனில் 1958ல் எழுதத் தொடங்கி 60-களில் முத்திரைக் கதைகள் என்று கொடுத்துக் கொண்டிருந்தேன். 63-64ல் ஒரு சிறுகதைக்கு 101 ரூபாய் கொடுப்பார்கள். அப்போது அது  பெரிய தொகை. நான்கு முத்திரைக் கதைகள் என்னுடையது. அந்த காலக்கட்டத்தில்தான் ஜெயகாந்தன் எழுத ஆரம்பித்தார். ஆனந்த விகடனில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாநில மலர் மாவட்ட மலர் என்று போடுவார்கள்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா என எல்லா மாநிலத்திற்கும் நான்தான் போவேன். செய்திகள் சேகரிப்பேன். உடன்  போட்டோகிராபார் சுபாஷ் சந்திரன் என்னுடன் வருவார். பல மொழிகள் அறிந்திருந்தது எனக்கு பேருதவியாக இருந்தது. விகடனின் ஐம்பதாவது பொன்விழா கொண்டாடிய போது நான்தான் முன்னின்று நடத்தினேன். விழாவில் கலைஞர் மு.கருணாநிதிக்கு கவியரங்கத்தில் வாய்ப்பு தந்து கவிதை வாசிக்க வைத்தது நான்தான்.

 

கேள்வி: தற்போதைய நிலையில் 60 புத்தங்கள் எழுதிய முஸ்லிம் என்ற வகையில் உங்கள் படைப்பனுபவம் குறித்து?

1960-ல் பி.ஏ. முடித்தேன். 1962-ல் எம்.ஏ முடித்தேன். தமிழ் இலக்கியத்தில் எனக்கிருந்த ஆர்வம் காரணமாகவே எழுத ஆரம்பித்தேன். தமிழ்முரசில் பணிபரியும் போது அதன் ஆசிரியர் சாரங்கபாணி அவர்கள் என்னிடம் சொன்னார். “நமது இதழின் வாசகர்களில் நாற்பது சதவீதம் பேர் முஸ்லிம்கள். அவர்களுக்குத் தேவையானதை நமது இதழ் வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதன்படி ஞாயிறு மலரில் இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றிய தொடரை எழுத ஆரம்பித்தேன். அது அனைத்து சமயத்தவராலும் கவனிக்கப்பெற்றது. நாமே செய்யாவிட்டால் இப்பணியை யார் செய்வார்கள் என்ற எண்ணத்தால் சமநிலை சமுதாயம் இதழிலும் “இஸ்லாமிய இதழியல் முன்னோடிகள்” என்ற தொடர் எழுதினேன். இத்தொடர் நூல் வடிவம் பெற்று நல்ல வரவேற்ப்பை பெற்றது. இஸ்லாமிய சிறுகதை, நாவல் மட்டுமல்லாமல் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதினேன். “அல்லாஹ்வின் திருநாமங்கள்” “மாநபியின் இயற்கை மருத்துவம்” “இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்” போன்ற நூல்களும், யாசர் அரபாத், இடிஅமீன், குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி, புரூஸ்லீ, பீலே போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதி உள்ளேன். பத்துவருடத்தில் ஆனந்த விகடனிலும் தமிழ் முரசிலும் தொடராக வெளிவந்த நாவல்கள் இருபத்தைந்து கட்டுக்கட்டாக அச்சிடப்படாமல் அப்படியே இருக்கிறது. தற்போதும் தமிழ் தி இந்து பத்திரிகையில் ‘ஆனந்த ஜோதி’ பகுதியில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறேன். 

 

கேள்வி: மூத்த படைப்பாளியாக தற்போது ஊடகங்களில் இஸ்லாமியர்கள் நிலை குறித்து?

தமிழ் இஸ்லாமிய இலக்கிய வரலாறு 500ஆண்டு கால வரலாறு. தமிழகத்தில் வடநாட்டவார் படையெடுப்பு, நாயக்கர் படையெடுப்பின் போது தமிழ் நசுக்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் தமிழை வளர்த்தவர்கள் முஸ்லிம்களே.  புதுவகை இலக்கிய வடிவங்களையும் தமிழுக்கு அறிமுகம் செய்தவார்கள் அவர்களே.  நான் பல நாடுகளை சுற்றி வந்திருக்கிறேன். தமிழ் முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு தமிழை வளர்த்து வருகின்றனர்.  தமிழகத்தில் தினமலர், தினகரன், இந்து பத்திரிக்கைகளில் துணை  ஆசிரியர் என்கிற அளவிலும் 

தொலைக்காட்சிகளிலும் சிலர் பணி செய்கின்றனர். சிங்கப்பூர் தமிழ்முரசிலும் முஸ்லிம் பெண் களும், ஆண்களும் பணி செய் கின்றனர். தொலைக்காட்சி அறிவிப்பாளார்கள், நிகழ்ச்சி தொகுப்பாளார்கள், செய்தி வாசிப்பாளார்கள் என்று முஸ்லிம் கள் அங்கு உள்ளனர். சிங்கப்பூர் வானொலிக்கு ஒரு சிறப்பு என்னவெனில் 24 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். அங்கு ஊடகத்தில் பணிபுரியும் இஸ்லாமியர் சதவீதத்தோடு தமிழக முஸ்லிம்களின் ஊடக பங்களிப்பு குறைவு என்றே எனக்குப்படுகிறது.

 

கேள்வி: இஸ்லாமிய இலக்கியத்தை உலகறியச் செய்ததில் தங்கள் பங்களிப்பை மறக்கமுடியாது. தற்போது ஒரு பெரிய வெற்றிடம் உள்ளதாக கருதுகிறீர்களா?

ஆமாம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் அவ்வப்போது நடத்தப்படுகிறது. வெளிவராத இலக்கியங்கள் மறுமதிப்பு செய்யப்பட்டு மாநாடுகளில் வெளியிடப்படுகின்றன. 

சிங்கையில் ஜனாப் மகுதூம் சாஹிப் 45 இஸ்லாமிய இலக்கிய நூல்களை பதிப்பித்து வெளியிட்டார். அவற்றில் சிலவற்றை நான் இப்போதும் வைத்திருக்கிறேன். இது கணினி யுகம். இப்போது புத்தகங்கள் கணினி வழியே தரவிறக்கம் செய்து வாசிக்கப்படுகிறது. அச்சு நூல்களின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் எனக்கொள்ளலாம். வெற்றிடத்தை நிரப்ப வேண்டுமெனில் அமைப்பு ரீதியில் சங்கங்கள் இயக்கங்கள் உள்ளது. அவைகள்தான் நூல் வெளியிடுவது, இதழ் நடத்துவது, பதிப்பகங்களை உருவாக்குதல் போன்றவற்றில் ஈடுபடவேண்டும். வாசிப்பை இயக்கமாக மாற்ற வேண்டும். பதிப்பகங்கள் ஒரு புறமிருந்தாலும் அமைப்புகள் இப்பணியை எடுத்துச் செய்ய வேண்டும்.


Who's Online

We have 85 guests and one member online

  • ZeettReuck