ஒவ்வொரு திராவிடக் கட்சி தலைவரின் மரணத்திற்குப் பிறகும்  ஆரிய- சனாதன சக்திகள் அதன் வேர்களை அசைத்துப் பார்க்கின்றன.

நீதிக் கட்சியின் பிராமண எதிர்ப்பால் தொடங்கப்பட்ட திராவிடர் இயக்கம், பெரியார் வழியில் சுயமரியாதை, சமூக நீதிக் கொள்கையில் எதிர்நீச்சல் போடத் துவங்கியது. அறிஞர் அண்ணா அவர்களால் அதன் சமூக சீர்திருத்தக் கொள்கைகளுக்கு உயிரூட்டம் அளிக்கப்பட்டது. கடந்த ஓர் நூற்றாண்டு காலமாகத் தொடரும் இந்த சமூக, இன, மதம் சார்ந்த சாதி துவேசப் போர்களின் முடிவில் தொடர்ந்து இதுவரை திராவிடக் கட்சிகள் தான் வெற்றிபெற்று வந்திருக்கின்றன.

 திராவிட இயக்க எதிரிகளின் தொடர் சதி

 முதல் முறையாக 1949ல் பெரியாரிடமிருந்து அறிஞர் அண்ணா அவர்கள் வெளியேறிய போதும், இரண்டாவதாக 1969ல் அண்ணா அவர்களின் இறப்புக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி முதல்வரான போதும், மூன்றாவதாக 1972ல் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.இராமச்சந்திரன் வெளியேறிய போதும், நான்காவதாக 1987ல் எம்.ஜி.இராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க பிளைவுபட்ட போதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திராவிட இயக்கத்தின் நேரெதிர் கொள்கைகளைக் கொண்ட மதவாத சக்திகள் தமிழ் இன, மொழி, கலாச்சார, பண்பாட்டு அரசியலுக்கு திராவிட இனக் குழுக்களைக் கொண்டே தங்களது காய்களை நகர்த்தி வந்தன.

 மதசார்பின்மைக்கு ஏற்பட்ட சறுக்கல்

 பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் தடை செய்யப்பட்ட மதவாத இயக்கங்களுக்கு 1984ல் பிரதமர் இந்திராவின் மறைவுக்குப் பிறகு தேசிய அரசியலில் ஊக்கம் அளிக்கப்பட்டு மதச்சார்பின்மைக்கு பெறும் சறுக்கல் ஏற்பட்டது. இதன் விளைவாக பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற ஜனநாயக அரசியலின் போக்கையே மாற்றி, முஸ்லிம்களை முதல் பலிகடாவாக்கி, தேசிய அரசியல் நீரோட்டத்தை மடைமாற்றி விட்டது. 1989 முதல் 1990வரை ஏற்பட்ட தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஒற்றைப் பார்வை கொள்கையான காங்கிரஸ் எதிர்ப்பு அணியில் பாரதிய ஜனதா கட்சியை இணைத்துக் கொண்டதன் விளைவு மதங்களால், சாதிகளால் ஏற்பட்ட தகுந்த விளைவுகள் சமூகத்தின் அடித்தளம் வரை கூர்மையாகப் பரவவிடப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு மதம் என்றால் என்னவென்றே தெரியாத இந்தியக் குடிமக்களை இன்று மதம் என்னும் அடையாளத்தை சர்ச்சைக்குள்ளாக்கி (தலித், சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின்) சமூக வளர்ச்சியை மேலோங்க விடாமல் செய்த ஆர்.எஸ்.எஸ்.சின் சனாதன அரசியல் இன்று வெற்றிகரமாக செங்கோட்டையில் கொடியேற்றி விட்டது.

 உண்ட வீட்டிற்கே துரோகம்

 தேசிய அரசியலில் பெரிய அளவில் மதத்தை அடையாளமாகக் காட்டி ஒரு சமூகத் திரட்டலை செய்த பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழகத்தின் அடிமட்ட அளவில் காலூன்ற முடியாத நிலை இன்றைக்கு நடந்துவிடுவோ என்ற சந்தேகம் எழுகிறது. சமூக நீதி, சுய மரியாதை, மதச்சார்ப்பின்மை, சமூக நல்லிணக்கம் போன்ற இந்திய இறையாண்மையின் அடிப்படைக் கூறுகள் (திராவிடக் கட்சிகளின் அரவணைத்துச் செல்லும் சமூக அரசியல் போக்கினால்) வெகு தூரமாக தமிழகத்தில் வேரூன்றியிருக்கின்றன. இந்த அடிப்படையில் தமிழ்நாட்டில், மாநிலக் கட்சிகள் மிக உறுதியாக களத்திலிருக்கும் நேரத்தில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரே காரணத்தினால், திராவிடக் கட்சிகளின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளால் பொதுப் பயனடைந்த சமூகங்களைப் பிளவுபடுத்தி உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைத்திடத் தூண்டுகிறது பாஜக. தமிழனின் கைகளை வைத்து தமிழனின் கண்களையே குத்திக் குருடாக்கும் நிலை உருவாகுமோ என்ற அச்ச உணர்வும் வெளிப்படுகிறது.

எளிய இலக்கான அதிமுக

 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடெங்கிலும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசியபோதும் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக அக்கட்சி நிராகரிக்கப்பட்டது. இது ஒரு வியப்பான அரசியல் நிகழ்வு என்றாலும் திமுக மற்றும் அதிமுகவுக்குள் நிலவும் ஜனநாயகப் போரில், எம்.ஜி.ஆர் காலம் முதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை, அஇஅதிமுகவை சனாதன இந்துத்துவ அரசியல் சக்திகள் ஒரு எளிய இலக்காகவே பயன்படுத்தி வந்திருக்கின்றன. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் வரை இது எதிரொலித்திருக்கிறது. சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிகள் மற்றும் அவர்களது அரசியல், சமூக பாதுகாப்பு குறித்து அக்கறைக் கொள்ளும் முற்போக்கு சக்திகள் வலுவாக இருப்பதால், பா.ஜ.க என்னும் தலித் விரோத மற்றும் சிறுபான்மை எதிர்ப்பு அரசியல் கட்சி தமிழகத்தில் மக்களால் வரவேற்கப்படவில்லை. 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் மிகக்கடுமையான தோல்வி மற்றும் நிராகரிப்பை அது சந்தித்தது. 

 1996க்குப் பிறகு காங்கிரஸ், அஇஅதிமுக கட்சிகளில் தனிநபர், தலைவர்களுக்கு இடையிலான உறவில் ஏற்பட்ட சிக்கல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அரசியலுக்கு பகிரங்கமாக கொண்டுவரப்பட்ட பாஜகவிற்கு தமிழகத்தில் ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிக் கொடுத்தது. இவ்வளவு காலம் மத்திய அமைச்சரவையில் திமுகவின் ஆதிக்கத்தாலும் அ.இ.அ.தி.மு.வின் அணுகுமுறையாலும் தமிழகத்தில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க சற்று ஒதுங்கியே இருக்கின்றன.

 போயஸில் புகுந்த அறிவுஜீவிகள்

 கடந்த டிசம்பர் மாதம் 5ம் நாள் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியல் போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு, சோனியா தலைமையிலான காங்கிரஸிடம் இருந்த ஒவ்வாமை, பாரதீய ஜனதாவுடன் பெரும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 

அந்த சந்தர்ப்பத்தை பாரதீய ஜனதாவும் தனக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பாகப் பயன்படுத்தி ஜெயலலிதா மூலமாக தமிழகத்தில் காலூன்ற முயற்சித்து வருகிறது. இதற்கு மூலகாரணமாகப் பயன்பட்டது 2012ல் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு இடையிலான நட்பில் ஏற்பட்ட குழப்பமாகும். இந்தக் குழப்பத்தின் மூலமாக சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை அஇஅதிமுக கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து துடைத்தெடுக்க பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்களான மறைந்த மற்றும் உயிருடன் வாழ்ந்து வரும் சில தமிழகப் பத்திரிக்கை அறிவுஜீவிகள் போயஸ் தோட்டத்தில் தஞ்சம் புகுந்தனர்.

 இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு நரேந்திர மோடியுடனும் பா.ஜ.க.வுடனும் ஒரு இயல்பான, இணக்கமான, உயிரோட்டமானா உறவு நீடித்து வந்தது. 2014 மற்றும் 2016 தேர்தல்களில் எதிரெதிராகப் போட்டியிட்டு வந்தபோதிலும் பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.கவை ஒரு தேசியக் கட்சியாகப் பார்த்தது. ஏனெனில் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளில் பா.ஜ.க முதல் எதிரியாகக் கருதுவது தி.மு.க.வைத் தான்.  தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அசாதாரண அரசியல் சூழல் மிகவும் கவனத்திற்குரியது. ‘ஆரிய மாயை’ மீண்டும் தமிழ் சமூகத்தைத் தன் பிடிக்குள் கொண்டுவர எத்தனிக்கிறது. காரணம் நாடு முழுவதும் ஜனநாயக மன்றங்களில் சித்தாந்தங்களின் முழக்கங்கள் மழுங்கடிக்கப்பட்டு வாக்கு வங்கி அரசியலின் ஆழத்திற்குச் சென்று சமூகங்களுக்கு மத்தியில் அதிகாரப் போட்டியை ஏற்படுத்தி, பிளவுகளை முன்னிறுத்தி ஒரு போலியான ‘அதிகாரப் பாதுகாப்பைத்’ தந்து பல்வேறு கட்சிகள், தலைவர்கள், அதிருப்தியான வாக்கு வங்கிகளை வளைத்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி. இதற்கு தற்சமயம் தமிழ்நாட்டில் அது எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடே ஒரு வாழும் சாட்சி.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

 அதேசமயம் பாரதீய ஜனதா கட்சி அ.இ.அ.தி.மு.கவை உடைத்து இரண்டு பக்கமும் ஆதாயத்தைத் தேட முயற்சிக்கின்றது. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என ஒருபுறம் சசிகலாவுக்கு எதிரான ‘காபந்து முதல்வர்’ ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாட்டை ஆதரித்தும், அதற்கான அனைத்து உதவிகளையும் உரிய முறையில் வழங்கி வருகிறது. 

காரணம் தமிழக பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்களின் விருப்பம், சசிகலாவின் ஆதிக்கத்தை இந்த பலவீனமான நேரத்தில் ஒழித்துக் கட்டிவிட்டு வரும் காலங்களில் அதாவது ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க ஆட்சியை அமைக்குமானால் அவர்களோடு 2019ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை வைத்து பா.ஜ.க.வின் எல்லையை விரிவுபடுத்துவது மற்றும் அனைத்து சமூகங்களிலும் பிரதிநிதித்துவம் தந்து காங்கிரசுக்கு மாற்றான ஒரு தேசியக் கட்சி என்ற எண்ணத்தை விதைப்பது. 

இல்லையெனில், அதிர்ஷ்டவ ச மாக சசிகலாவே அஇஅதிமுகவுக்கு தலைமையேற்று, அவரது கட்டுப்பாட்டில் அரசு இயங்கும் நிலையில் சசிகலாவை மிரட்டிப் பணியவைத்து கூட்டணிக்கு இறங்க வைத்து சரிபாதி இடங்களில் போட்டியிடுவது, வெற்றிபெறுவது குறித்து பிறகு சிந்திப்பது சனாதன இந்துத்துவ விதைகளைத் தூவி அஇஅதிமுகவை அழிப்பது சரியான வியூகமாகப் பார்க்கிறது.

 காங்கிரஸ் பாதையில் பாஜக

 அதேசமயம் அ.தி.மு.க.வும் அதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தோமேயானால், 1972ல் திமுகவில் பிளவை ஏற்படுத்தி எம்.ஜி.ஆரையே வெளியேற்றி தனிக்கட்சி தொடங்க வைத்து தமிழகத்தின் (றிக்ஷீஷீஜ்ஹ் றிஷீறீவீtவீநீs) நிழல் அரசியலை நடத்திய காங்கிரஸ் கட்சியின் வியூகத்தையே பயன்படுத்துவது போலத்தான் தெரிகிறது பா.ஜ.க.வின் வியூகமும். 

 ஆக, அ.இ.அ.தி.மு.க தொடங் கப்பட்ட காலத்திலிருந்தே தமிழக அரசியலில் ஒரு ‘எளிய இலக்காக’ பயணித்திருக்கிறது. 

இதற்கு மூலக்காரணம் தனிநபர் துதிபாடல் அரசியலை, தலைமையை மிகப்பெரிய சக்தியாகப் போற்றிப் புகழ்ந்து, ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக சித்தாந்த எதிரிகளுடன் கைகோர்த்து இன்றைக்கு சுயமரியாதை துணையுடன் கிஞ்சிற்றும் நினைத்துப் பார்க்காமல் செய்த அதிகாரம், அரசியல், தலைமையின் அவசியம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் தன்மானம், சுயமரியாதை, சர்வதேச அளவில் கேலிச்சித்திரமாகப் பார்க்கப்படுகிறது.

 -பேரா. இ.அருட்செல்வன்


Who's Online

We have 95 guests and one member online

  • ZeettReuck