இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான விதிமுறைகளை அரசியல் சாசனத்தின் ஷரத்து 55 தெளிவாக எடுத்துரைக்கிறது. 

ஒரு மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை, சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து ஒவ்வொரு  மாநிலத்திற்கும்  குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான சட்டமன்ற உறுப்பினர் வாக்கு எத்தனை என்பது மதிப்பிடப்படுகிறது.

குழப்பம்

 தற்போது தமிழகத்தில் நடந்துவரும் அரசியல் குழப்பமான சூழ்நிலை, அதற்கு வித்திட்ட ஆளுநரின் சந்தேகத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலைக் கணக்கில் கொண்டு பாஜக வகுத்துள்ள வியூகம், அதற்கேற்ப ஆளுநரை வைத்து காய்கள் நகர்த்தப்படுகின்றனவா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. சசிகலாவின் கணவர் ம.நடராசன், நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் "காவி அரசியலை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம்" என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நடந்துவந்த நிகழ்வுகளில் அதிமுகவுக்குள் குழப்பம் உருவாகத் தொடங்கியதை கவனிக்க வேண்டும்.  தமிழக சட்டமன்றத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் சேர்த்து 98 உறுப்பினர்கள். அதிமுகவுக்கு 135. திமுக ஓட்டு காங்கிரசுக்குப் போகும். சசிகலா தலைமையிலான அதிமுக ஓட்டும் பாஜகவுக்கு எதிராக காங்கிரசுக்கே போகுமானால் பாஜகவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். அதனால் தனக்கு சாதகமான ஒரு தலைமையின் கையில் தமிழக ஆட்சி போகவேண்டும். இல்லை யென்றால் ஒட்டுமொத்தமாக தமிழக அரசே இடைநிறுத்தி முடக்கி வைக்கப்பட வேண்டும். இல்லை யென்றால் சசிகலா தலைமையில் அமையும் அதிமுக அரசின் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குகளும் காங்கிரசுக்கே போய்விடும் என்ற அபாயத்தை பாஜக உணர்ந்திருக்கிறது.

சதித் திட்டம்

தமிழக சட்டமன்றத்தில் யாரும் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத சூழலை உருவாக்கி ஆட்சிக் கவிழ்ப்பை செய்வதுதான் பாஜகவுக்கு உகந்ததாக இருக்கும். அதற்காகவே சசிகலாவிடம் இருக்கும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் குறைந்தது 20 பேர் வெளியேறி விட்டால் பெரும்பான்மை என்கிற 117 என்ற இலக்கத்தை சசிகலாவால் பெறமுடியாமல் போகும். பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தாலும் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போகும். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, சட்டமன்றத்தை முடக்கி, வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு எதிராகப் போகும் அதிமுக வாக்குகளை மட்டுமின்றி, காங்கிரசுக்குப் போகவேண்டிய திமுக வாக்குகளையும் சேர்த்தே முடக்கி விடலாம் என்பதுதான் பாஜக போடும் தந்திரக் கணக்கு.

முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி முதலிய சட்ட அறிஞர்களாகிய அவர்கள் தமிழகத்தில் ஆட்சி அமைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் அறிவுறுத்தினர். ஆயினும் ஆளுநர், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்பட்டு கசிய விடப்பட்டு பிறகு மறுக்கப்பட்ட அறிக்கையில், கட்டாயப்படுத்தி ராஜினாமா வாங்கியதாக முதலமைச்சர் சொன்ன புகாரையும், தனக்குப் பெரும்பான்மை இருப்பதாக சசிகலா சொன்னதையும் சொத்துக் குவிப்பு வழக்கில் வரவிருக்கும் தீர்ப்பையும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால் தன்னிடம் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் கூறிய பின்பு உடனடியாக அதை நிரூபிக்க அழைப்பு விடுக்காமல், உங்கள் மீது உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை பொறுத்திருந்து முடிவெடுப்பேன் என்று கூறுவதற்கு ஆளுநருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.

 ஆளுநரின் பொறுமை பாஜக தந்திரமே

 உச்சநீதிமன்றத் தீர்ப்பை அனுமானம் செய்வதற்கோ அல்லது அதுவரை சசிகலாவின் கோரிக்கையை கிடப்பில் போடுவதற்கோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தான் குன்ஹாவின் தீர்ப்பை ஏற்று பன்னீர் செல்வத்தை முதல்வராகக் கொண்டு வந்தார். அதேபோல் சசிகலாவுக்கு பாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்குமானால் மாற்று முதல்வரைக் கொண்டுவரும் பொறுப்பு சசிகலாவுக்கு உண்டு. முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் தார்மீகக் கடமையும் அவருக்கு உண்டு. அரசியல் சாசன ஷரத்து 164(4) கூறுவதை கவனிக்க வேண்டும். ஒரு அமைச்சர், தொடர்ச்சியாக ஆறு மாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால்தான் ஆறாவது மாதத்தின் முடிவில் அவர் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும். ஆறு மாத காலத்திற்குள் மொத்த ஐந்தாண்டு கால ஆட்சியே முடிவுக்கு வரும் என்றால் தான் சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்க முடியுமே தவிர வேறெந்த காரணத்தின் அடிப்படையிலும் சசிகலாவின் கோரிக்கை தாமதப்படுத்தவோ நிராகரிக்கவோ முடியாது. எனவே ஆளுநரின் நடவடிக்கை, ஜூலை மாத குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜகவின் தந்திர வியூகமே தவிர வேறொன்றுமில்லை.

- அப்ரார் அஹமது ( வழக்கறிஞர் )


Who's Online

We have 98 guests and one member online

  • ZeettReuck