அ.தி.மு.க., பொதுச் செயலாளர் சசிகலாவை முதல் அமைச்சர் பதவிக்கு கட்சி எம்.எல்.ஏ.,க்கள்  தேர்வு செய்திருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், கடந்த 16-ம் தேதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதனையடுத்து, ''15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்'' என்று எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.  

கடந்த 18ம் தேதி சட்டமன்றத்தில்

புதிய அமைச்சரவை நம்பிக்கை கோரும் தீர்மனாம் குறித்து சிறப்பு சட்டமன்றக் கூட்டம் பிப்ரவரி 18 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்ததுடன் அவரது. வாகனத்தையும் தடுத்து நிறுத்தியது பெரும் சர்ச்சையை எழுப்பியது. 

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். இதனால், சபையில் அமளி துமளி ஏற்பட்டது. சபை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின்,  தன் சட்டை கிழிக்கப்பட்டதாக சபாநாயகர் தனபாலும், தன்னை துன்புறுத்தி சட்டையை கிழித்து வெளியேற்றியதாக  குற்றஞ்சாட்டினார். 

தி.மு.க, காங்கிரஸ். முஸ்லிம் லீக் ஆகிய எதிர்கட்சிகள் வெளியேறிய பின் நடந்த வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக தன் பெரும்பான்மையை நிரூபித்தார் எடப்பாடி பழனிசாமி.  பெரும் அமளி துமளிகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளி துமளிகள் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியில் மட்டும்   காட்டப்பட்டது. அதனால் அது குறித்த நம்பகத்தன்மை  நெருடலாக இருப்பதை  மறுக்க முடியாது . 

இருப்பினும்  சபாநாயகர் இருக்கையில் திமுக  உறுப்பினர்கள் அமர்ந்ததும், அவர்கள் நடந்துக் கொண்ட விதமும் மிகவும் வரம்பு மீறிய செயல்களாகும். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற திமுகவின் அடிப்படை கோட்பாட்டிற்கு முரணாகவே அவர்களது செயல்பாடுகள் அமைந்திருந்து. 

 தடுப்பதற்கான வழி என்ன?

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நிகழ்வகளும் நேரடியாக தொலைக்காட்சிகளில் முழுமையாக ஒளிபரப்பபடுகின்றன. ஆனால் தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பபடுவதில்லை. சட்டமன்றத்தின் நிகழ்வுகள் ஆளும் கட்சிக்கு சாதகமான வகையில் தொகுக்கப்பட்டு  4 முதல் 6 மணி நேரம் வரையில் நடைபெறும் நடவடிக்கைகள் வெறும் 20 நிமிடங்களாக சுருக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. 

இது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். சட்டசபையில் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எப்படி செயல்படுகின்றார்கள் என்பதை மக்கள் வெளிப்படையாக அறிவதற்கான வழிவகைச் செய்யப்பட வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் இது குறித்து ஒரு வழக்கு தொடரப்பட்ட போது அதிமுக அரசு நேரடி ஒளிபரப்பிற்கு பெரும் தொகை செலவாகும் என்று கூறி அதற்கு மறுப்பு தெரிவித்தது.  

எதிர்காலத்தில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டுமெனில் சட்டமன்ற நிகழ்வுகள் கேள்வி நேரம் தொடங்கி அன்றைய தினம் அலுவலகம் முடிந்து அவை ஒத்திவைக்கப்படும் வரையில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படுவதே தீர்வாக அமையும். மக்கள் தம்மை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற நிலை ஏற்படும் போது சட்டமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளும் கண்ணியமாக இருப்பதற்கான வழி பிறக்கும்.


Who's Online

We have 103 guests and one member online

  • ZeettReuck