ஒருவழியாக தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துவிட்டது. 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்று எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுவிட்டார்.

அவரின் மந்திரிசபை தப்பிப் பிழைத்து விட்டது. எனினும் இது நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பதை மறுத்துவிட முடியாது.

 இந்த நிகழ்வை நோக்கி நகர்ந்த பல்வேறு நிலைப்பாடுகள் பற்றி பொதுமக்களுக்குப் பரவலாக ஐயப்பாடுகள் உள்ளன. எழுத்தில் அழுந்தக்கூடிய சில திரைமறைவுத் திருவிளையாடல்களை இங்கு அலசுவோம்.

 சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தபோது திமுகவினரின் சில பேச்சுகளால் மக்களுக்கு சில புதிர்கள் புலப்பட்டன. "ஓ.பன்னீர் செல்வத்தை திமுக ஆதரிக்கிறதோ...?" என்பது ஒரு சந்தேகம். ஓ.பன்னீர் செல்வத்தை திமுக ஒருபோதும் ஆதரிக்காது, ஆதரித்ததும் இல்லை. இதற்குக் காரணங்கள் உண்டு. 

 மோடியின் கைப்பாவை

ஓ.பி.எஸ். எப்போதோ மோடியின் கைப்பாவை ஆகிவிட்டார். பன்னீரைப் பயன்படுத்தி அரசியல் செல்வாக்கைத் தேடிக்கொள்ள மோடி திட்டமிட்டிருந்தார். பாஜக தலைவர்கள் எல்லோருமே பன்னீருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்தவாறு பேசி வந்தனர். இத்தகைய நிலைப்பாடு கொண்ட ஒருவரை திமுக எப்படி ஆதரிக்கும்?

 கடந்த 1988ம் ஆண்டு எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் அவரின் மனைவி வி.என்.ஜானகி முதல் அமைச்சர் ஆனார். ஆனால் அவருக்குச் சட்டசபையில் மெஜாரிட்டி பலம் இல்லை. ஆகவே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கேட்டு அதிமுகவின் ஜானகி அணி கடிதம் எழுதியது. வி.என்.ஜானகி எழுதிய கடிதத்தை க.ராசாராம் தான் எடுத்துச்சென்று கலைஞரிடம் தந்தார். கலைஞரோ... வி.என்.ஜானகியின் அணிக்கு ஆதரவு தரவில்லை. சட்டசபையிலும் திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வி.என்.ஜானகிக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தே நடந்து கொண்டனர்.

 அதிமுகவை எதிர்த்துத் தான் திமுக அரசியலை இயக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவுக்கே திமுக ஆதரவு அளித்து விட்டால் பிறகு எந்தக் கட்சியை எதிர்த்து திமுக களம் வகுக்கும்? காங்கிரஸ் கட்சியை எதிர்த்தா? அப்படியானால் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் என்ற நிலைமாறி தேசியக் கட்சியின் ஆதிக்கத்தின் கீழ் தமிழகம் வந்துவிடுமே... இதை கலைஞர் தொலைநோக்குப் பார்வையுடன் அணுகினார். எனவே தான் அவர் ஜெ.அணி, ஜானகி அணி என இரு கட்சிகளையும் ஒரே கண்ணோட்டத்துடன் தான் பார்த்தார்.

  "வரலாற்று நிகழ்வுகள் திரும்பத் திரும்ப வரும்" என்பது வரலாற்றியல் கோட்பாடு. 1988ம் ஆண்டு நடந்த அதே வரலாற்றுச் சம்பவம் மீண்டும் 2017ல் வந்திருக்கிறது. திமுகவின் நிலைப்பாடும் கடந்த காலத்தைப் போன்றே நிகழ்ந்துள்ளது.

 திமுகவின் அதிரடி

 திமுகவின் இந்த அதிரடி அணுகுமுறையின் காரணமாக, தமிழகத்தில் பாஜகவின் சதி முறியடிக்கப்பட்டு இருக்கிறது. பன்னீர் செல்வத்தை வாடிவாசலாகக் கொண்டு முட்டி மோதி நுழைய முயன்ற மோடியின் முயற்சி தற்போதைக்கு முடக்கப்பட்டு விட்டது.

 நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நிலவரம்... கலவரமாகிக் போனது. சபாநாயகரின் சட்டை கிழிக்கப்பட்டு விட்டது. சபையின் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினின் சட்டையும் சேதப்படுத்தப்பட்டு விட்டது. ஜனநாயகம் என்பது குணநாயகமாக இருக்க வேண்டும், பிணப்பேயகமாக மாறிவிடக் கூடாது.  பன்னீர் செல்வத்தை முதல் அமைச்சராக்கிட பாஜக பல்வேறு தகிடுதத்தங்களை முடுக்கி விட்டது. ஆனால் அவை அனைத்தும் தடம் மாறி... தடுமாறி... தவிடுபொடியாயின. சசிகலாவின் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை இழுக்க 10 நாட்களுக்கும் அதிகமான கால அவகாசத்தை கவர்னர் மூலமாக பாஜக உருவாக்கித் தந்தது. ஆனால் பன்னீரால் சாதிக்க முடியவில்லை. பன்னீரை நம்பி தமிழக அரசியல் ஆற்றில் கால் வைத்த பாஜகவைப் பார்த்தால்... மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியவரின் கதை தான் நினைவுக்கு வருகிறது.

பன்னீர் பக்கம் எம்பிக்கள் சாய்ந்தது எப்படி?

 பன்னீர் அணிக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. ஆனால் பெருமுயற்சிகள் இன்றி எம்.பி.க்கள் 12 பேர் எப்படி பன்னீர் பக்கம் சாய்ந்தனர்? இதன் பின்னணியிலும் பாஜகவின் குள்ளநரித்தனம் குடிகொண்டிருக்கிறது. கட்சித் தாவல் தடைச் சட்டம் வராத அளவுக்கான எம்.பி.க்களை பன்னீர் பக்கம் கொண்டு வரவேண்டும். பன்னீர் அணியினரைத் தான் உண்மையான அதிமுக அணியினர் எனச் சொல்ல வைக்க வேண்டும், அந்த அணியினரை பாஜகவின் கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும். பின்பு இந்த எம்.பி.க்களில் சிலருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும். இந்த அணியை முதன்மைப்படுத்தி பாஜகவினர் செல்வாக்கைத் தமிழகத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எப்படி இருக்கிறது பாஜகவின் வியூகம். இதை மதியூகம் எனலாகாது,  மிதியூகம் எனலாம். கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் கதைதான் நினைவுக்கு வருகிறது.

 தமிழக அரசியல் களத்தில் மோதுவது சசிகலாவும் பன்னீரும் அல்ல. பிரணாப் முகர்ஜியும் மோடியும் தான் என முடிந்த வாரம் பேசிக்கொண்டு இருந்தோம் அல்லவா? இன்னும் நான்கு மாதங்களில் ஓய்வுபெறப் போகும் பிரணாப் முகர்ஜி தற்போது மோடியை வென்று நெஞ்சு நிமிர்த்துக் கொண்டு இருக்கிறார்.

 கடந்த காலங்களில் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்த போது தமிழக அரசியலில் நேரடியாகத் தலையிட்டு வந்தார். அவருக்குப் பிறகு பிரணாப் அந்த பாணியில் நுழைந்தார், தற்காலிகமாக வென்றார்.

-கும்கி பாகன்


Who's Online

We have 100 guests and one member online

  • ZeettReuck