நெடுவாசல் இன்னொரு மெரீனாவாக மாறி வருகிறது. இந்த முறை தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என ஒரே திட்டத்தை அதிகார வர்க்கம் வெவ்வேறு பெயர்களில் கொண்டு வருகிறது. அதை அனைத்தையும் முறியடிக்க மக்கள் தெருவில் இறங்கியிருக்கிறார்கள்.

நெடுவாசல் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை அமைத்து விட்டார்கள். கொஞ்சம் கண் அசந்தால் எரிவாயுவை எடுக்கத் தொடங்கி விடுவார்கள். இதற்கு பல நுட்பங்களை கார்ப்பரேட்களும் அதன் பின்னணியில் இருக்கும் அரசும் பயன்படுத்துவார்கள். அதில் முக்கியமானது ஹைட்ரோ ஃப்ராக்ச்சரிங் (பிஹ்பீக்ஷீஷீ திக்ஷீணீநீtuக்ஷீவீஸீரீ) எனப்படும் தமிழில் நீரழுத்த முறிவு முறை.

அது என்ன ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங்?

பெருமளவில் நீருடன், மணல் மற்றும் ரசாயனங்களை  கலந்து பூமிக்கு அடியில் செலுத்துவார்கள். அது நிலத்தடியில் இருக்கும் பாறைகளை வெடிக்கச் செய்யும். இதனால் உருவாகும் வழியில் அங்கிருக்கும் வாயு எளிதில் மேலே வரும். இந்த முறைக்கு தான் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் என்று பெயர். 

 இதற்கு தேவையான அதிக அளவிலான நீரை அங்கிருந்து தான் எடுப்பார்கள். அந்த பணி முடிந்ததும் வெளியாகும் நீர் ரசாயனம் கலந்தது. விஷத்தன்மை வாய்ந்தது. அதை வெளியேற்றுவதில் பல ஆபத்துகள் இருக்கின்றன. மேலு‌ம் பூமியை இப்படி செயற்கையாக வெடிக்க செய்வதும் ஆபத்தில் முடியலாம் என உலக விஞ்ஞானிகள் இந்த முறைக்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றார்கள்.

ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் 

முறையினால் என்ன நிகழும் ?

1. நிலத்தடி நீர் பாதிக்கப்படும்...

2. வெளியேறும் வாயுக்களால் பருவநிலை மாறும்...

3. விஷத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் அந்தப் பகுதி மக்களுக்கு நிறைய நோய்களை உண்டாக்கும்...

4. ஏராளமான நீர் வீணாக்கப்படும்...

5. கழிவுகளை வெளியேற்றுவதில் சிரமங்கள் வரும்...

6. பூமிக்கடியில் நிகழ்த்தப்படும் இந்த முறையால் நில நடுக்கங்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்...

7. இதுதவிர விபத்துகள் நடந்தால் நாம் நினைப்பதை விட மோசமான பாதிப்புக்கள் ஏற்படலாம்...

அந்தப் பகுதி முழுவதுமே பல நூறு ஆண்டுகளுக்கு வாழ முடியாத பகுதியாக மாறும் ஆபத்துகளும் உண்டு. பொதுவாக ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறை மக்கள் அதிகம் வாழாத பகுதியில் இருக்கும் எண்ணெய் கிணற்றில் செய்யப்படும். ஆனால் நெடுவாசலும் மற்ற பகுதிகளும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வரும் இடம் என்பது தான்  கவனிக்க வேண்டிய விஷயம். நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பனைத் தோண்டியெடுக்க அனுமதியைப் பெற்றிருக்கும் ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனமானது கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மல்லிகார்ஜூனப்பாவுடையது. 

மத்திய கர்நாடகாவில் இவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். தொடக்கத்திலிருந்தே இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்.பிறகு பாஜகவின் சார்பில் மக்களவை உறுப்பினர் ஆனார். மல்லிகார்ஜுனப்பாவின் மகன் ஜி.எம்.சித்தேஸ்வரா 2016 ஆம் ஆண்டு வரைக்கும் மோடியின் மத்திய அமைச்சரவையில் கனரக தொழில்துறை இணையமைச்சராக இருந்தார்.  இவரது சகோதரர்கள்தான் ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போது புரிகிறதா இல,கணேசன் கூறிய "நாடு வாழ மாநிலம் அழிந்தால் தவறில்லை"எனும் கூற்றின் உண்மையான அர்த்தம். நெடுவாசலில் போராடும் மக்களையும் தேச துரோகிகள் என ஹெச். ராஜா உளறுவதின் பின்னணியும் இப்போது புரியும்.

கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் அணுக் கழிவுகள், பொட்டிபுரத்தில் நியூட்ரினோ என்று வளமான தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கின் தொடர்ச்சியாக இப்போது ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சி. ஆனால் இப்போதைய தமிழகம் சொரணையற்றது அல்ல.

 இதை உணர்ந்து தான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு பிறகு யாரும் எதற்காகவும் எழுந்துவிடக் கூடாது என்பதிலே மத்திய, மாநில அரசுகள் மிகவும் குறியாக இருக்கின்றன. அதட்டி, மிரட்டி மக்களை அடக்கியே வைத்திருக்க வேண்டும் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கலாம். எனவே போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் தமிழ் சமூகம் இவற்றையெல்லாம் கண்டு பின்வாங்காமல் மக்களின் முன் அதிகார நாயகர்கள் பயந்து போய் அடங்க வேண்டும். அது தான் ஜனநாயகமாக இருக்க முடியும் என்பதை மறந்து விடாமல் ஜல்லிக்கட்டுக்கு எப்படி தன்னெழுச்சியாக போராடினோமோ அவ்வாறு நெடுவாசல் மட்டும் அல்லாது தமிழக வாழ்வாதார பிரச்சனைகளான விவசாயம்,மணற்கொள்ளை, அணு  தீமையற்ற தமிழகம், கனிமவள பாதுகாப்பு, நீர்நிலைகள் தூர்வாருதல், கல்வியில் காவிமயம் ஆவதில் இருந்து தடுத்தல் போன்ற பிரச்சனைகளிலும் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடினால் தான் வருங்கால சந்ததியினருக்கு வளமான தமிழகத்தை விட்டுச் செல்ல முடியும்.


Who's Online

We have 90 guests and one member online

  • ZeettReuck