கடந்த 8ம் தேதி அன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.

தேர்வு தொடங்க இரண்டு தினங்களே இருந்த நிலையில், 6ம் தேதி அன்று, வேலூர் மாவட்டத்தில், ஆம்பூர், பேர்ணாம்பட்டு, வாணியம்பாடி, திருப்பத்தூர், நரியம்பட்டு, உமரபாத், வளத்தூர், குடியாத்தம் ஆகிய ஊர்களில் உள்ள 10 க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகளுக்கு, உருது பாடத்திற்குப் பதிலாக தமிழில் தான் தேர்வு எழுத வேண்டும் என்று, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

உருது பாடத்தை மட்டுமே படித்திருந்த மாணவர்களுக்கு இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்தச் செய்தியை  தங்களுடைய பெற்றோர்களிடமும் தெரிவித்துவிட்டு, அடுத்த நாள் 7ம் தேதி காலை, ஆம்பூர் மஜ்ஹருள் உலூம் மேல்நிலைப்பள்ளி அருகில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மாணவர்கள் அழைப்பின் பேரில் போராட்டக் களத்திற்கு, மமக மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான அஸ்லம் பாஷா தலைமையில், தமுமுக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத், நகர செயலாளர் தப்ரேஸ், மாணவர் இந்தியா செயலாளர் அப்ஷான் மற்றும் நகர நிர்வாகிகள் சென்றனர்.தமுமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டதும் மாண வர்கள் உற்சாகம் அடைந்தனர். மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கும் சூழல் உள்ளதால், இது சம்மந்தமாக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அழுத்தம் கொடுத்து வந்தார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. துணை ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரிகள், தாசில்தார், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். அவர்களிடம் அஸ்லம் பாஷா தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியது. தொடர்ந்து பல மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் முடிந்ததைத் தொடர்ந்து, உருது வினாத்தாள்களை வந்து பெற்றுச் செல்லுமாறு,  பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வித் துறை தகவல் அனுப்பியது. தமிழில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் மனம் மாறக் காரணம், மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டமும் தமுமுகவினரது அழுத்தமுமே ஆகும்.


Who's Online

We have 104 guests and one member online

  • ZeettReuck