கோவை உக்கடம் பகுதியில் திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி உமர் பாரூக் கொடியவர்கள் சிலரால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பாக இரு முஸ்லிம்கள் சரணடைந்துள்ளனர்.

இந்தப் படுகொலையை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உட்பட அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கடுமையாகக் கண்டித்துள்ளன. கோவையில் உள்ள அனைத்து ஜமாஅத்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பு இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்காக எவ்வித சட்ட உதவியும் வழங்கப் போவதில்லை என்று செய்தியாளர் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இந்தக் கொலையில் சரணடைந்த இருவரும் பாரூக்கிற்கு நன்கு தெரிந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. இந்த கொலைக்கான உண்மையான நோக்கம் என்னவென்பது இது வரை அதிகாரபூர்வமாக காவல்துறையினரால் தெரிவிக்கப்படவில்லை. "இறை மறுப்பாளராக பாரூக் இருந்ததால் தான் மதவெறி பிடித்த முஸ்லிம்கள் சிலர் அவரைக் கொன்றுள்ளனர். இவ்வாறு கொல்வதற்கு இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்கிறது. எனவே இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்போம்" என்ற ரீதியிலான கருத்துகள் பொது வெளிகளிலும், சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன.


ஆயினும், ‘‘மனுதர்மத்தை கொளுத்திய போதும், இனி குர்ஆனைக் கொளுத்துவோம்’’ என்கிற ரீதியான பதிவுகளையும், அதற்கு வக்கிரமான பதிலடிகளையும் இணைய ஊடகங்களில் காண முடிகிறது. கோவை சம்பவத்தை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஸ்லிப்பர் செல்கள், பல்வேறு பெயர்களில் நடத்துகிற சில்மிஷங்கள் இவை என்பதை உணராமல் பலரும் இதில் உணர்ச்சி வசப்பட்டு பலிகடாவாகி சமூக நல்லிணக்கத்தையும், தோழமையையும் சேர்த்து பலி கொடுத்து விடுகின்றனர்.


இயற்கை மார்க்கமான இஸ்லாத்தில் வெறித்தனங்களுக்கு அறவே இடமில்லை. இஸ்லாத்தின் பெயரால் ஒரு வன்முறைச் சம்பவம் அரங்கேறுகிறது என்றால், அதனை இயக்குபவர்கள் இஸ்லாத்தின் விரோதிகள் என்பதை அடித்துச் சொல்லி விடலாம்.


இந்தியாவில் நடந்த சம்ஜவ்தா ரயில் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இறந்ததும் முஸ்லிம்கள், பழி சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டதும் முஸ்லிம்களே.. ஹேமந்த்கர்கரேயின் நேர்மையான விசாரனை முறை இச்சம்பவங் களுக்குப் பின்னால் இருந்த அபிநவ்பாரத் என்ற பாசிச கும்பலை வெளிப்படுத் தியது. இதனால் ஹேமந்த்கர்கரே தன் இன்னுயிரையே இழக்க நேர்ந்தது.


தென்காசி இந்து முன்னணி அலுவலகத்தில் தொழுகைத் தொப்பிகளும் ஒட்டுத்தாடிகளும் கண்டுபிடிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். கோவைப் பாரூக் கொலையில் முஸ்லிம் இருவர் சரணடைந்துள்ளபோது, இதைத் தீர விசாரிக்க வேண்டும். இவர்களைத் தூண்டிவிட்ட சக்திகள் யார்? என்பதும் கண்டு பிடிக்கப்படவேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமுமுக உட்பட அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.


கோவையில் சசிகுமார் கொலைக்குப் பிறகு இந்து முன்னணி உள்ளிட்ட பாசிச அமைப்புகள் வெறி கொண்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்தன. அந்தச் சூழலில் இந்த பாசிசவாதிகளின் கனவுகளை தகர்க்கும் வகையில் பெரியாரிய, பொதுஉடமை மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் ஒன்று சேர்ந்து சிறுபான்மை முஸ்லிம்களை அரவணைக்கும் வகையில் பாடுபட்டன, போராட்டமும் நடத்தின. இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பாசிச அமைப்புகள் இதனால் தனிமைப்படுத்தப்பட்டன.


இத்தகைய சிறந்த சமூக நல்லிணக்க சூழலை தகர்த்து முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் சகோதரர் பாரூக்கின் படுகொலை அமைந்து விட்டது. இந்த மாபாதகச் செயலை செய்தவர்கள் சங்பரிவார் பாசிச கும்பலினால் ஏவி விடப்பட்டவர்களாகவோ அல்லது அவர்கள் விரித்த வலையில் விழுந்தவர்களாகவோ தான் இருக்க முடியும்.


இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்கு என்ற பேரில் இத்தகைய ஈனத் தனங்களில் யாரேனும் இறங்கியிருந்தால் அல்லது அந்த அடிப்படையில் அமைப்பு கட்டத் துணிந்தாலோ, அத்தகையோர். ஆர்.எஸ்.எஸ்.ஐ.விடவும் கொடியவர்கள், சமுதாயத்தின் புற்று நோய்கள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தே இல்லை. இதுவரை, அத்தகைய நபர்கள் அல்லது அமைப்புகள் தமிழகத்தில் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. எதிர்காலத்திலும் இருந்திடக் கூடாது என்பதே நமது அக்கறையும் கவலையுமாகும்.


Who's Online

We have 94 guests and one member online

  • ZeettReuck