எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனப் பெயரைக் கேட்டால் என்ன தோன்றுகிறது. "எம்ஜிஆரின் அம்மாவான தீபாவின் பெயரை வை" என்றல்லவா பொருள்படுகிறது. ஒரு கட்சிக்குப் பெயரை வைக்கும் போது செலுத்த வேண்டிய குறைந்தபட்ச கவனமும் காணப்படவில்லையே!

"நானே பொருளாளர், தலைவர், பொதுச் செயலாளர். அறிவிப்பு பின்னர்" என்றார் தீபா. பல தலைவர்களுக்கு நப்பாசை... தமக்கு அந்தத் தலைமைப் பதவி கிடைக்காதா... என்ற ஏக்கத்துடன் தீபாவைச் சுற்றிச் சுற்றி வந்தனர். ஒரு பிரமுகர் புத்தம் புதுக் காரை வாங்கிப் பரிசளித்து விட்டதாகவே கேள்வி. பதவிக்கு லஞ்சமா?


அரசியலின் ஆதிக்கத்தில் ஊறித் திளைத்து அனுபவித்து அடங்கி இருப்போர் அலைமோதினர். ஆனால் தீபாவோ... தன் கார் டிரைவருக்கும் அவரின் மனைவிக்கும் பதவிகள் தருகிறார். இதனால் இலவு காத்த கிளிகளாய்ப் போன ‘அந்த’ தலைவர்கள் அவசரமாக முகாம் மாறிவிட்டனர். தொண்டர்களோ... கொதித்துக் கிளம்பினர். தீபா என்ன செய்தார்? அவர்களை நீக்கி விட்டு, "நானே பொதுச் செயலாளர்" என்கிறார். கட்சி நடத்துவதும் பதவிகளை நிரப்புவதும் பல்லாங்குழி ஆட்டம் போல் நடத்தும் அளவுக்குத் தமிழக அரசியல் தரம் தாழ்ந்து போய் விட்டதே...!


சசி குடும்பத்தின் வாரிசுகளுக்குத் தான் பதவியா? குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து.. கிளர்ந்தெழுந்தார் பன்னீர் செல்வம். ஆனால் அவரே தீபாவை வரவேற்கிறார். சிவப்புக் கம்பள விரிப்பு மதிப்பு தரப்படுகிறது. இவர் குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்டவராகப் பன்னீருக்குத் தெரிகிறார். செலக்டிவ் அம்னீஷியா என்ற நரசிம்மராவ் காலத்து அரசியல் வார்த்தை இப்போதும் பொருந்துகிறது. "வரலாறு திரும்பத்திரும்ப வரும்" என்ற கோட்பாடு இதுதானோ...?


அதிமுகவின் பிளவுக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கும் போதே அமிலப் பரீட்சை. இதுதான் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல். ஜெயலலிதா நின்று வென்ற சென்னைத் தொகுதி. இரட்டை இலை சின்னப் பிரச்னை என்பது சின்னப் பிரச்னை அல்ல. அது பெரிய விவகாரம். இதுதொடர்பான முடிவை உடனடியாக எடுக்க வேண்டிய அரசியல் நிர்பந்தம் தேர்தல் கமிஷனுக்கு வந்துவிட்டதே என்பது தலைமைத் தேர்தல் ஆணையருக்கான திடீர்த் தலைவலி.டில்லி தேர்தல் கமிஷனைக் களமாக்கிக் கொண்டு அதிமுகவின் இருவேறு பிரிவுகள் மோதிக் கொள்வது வேடிக்கை. திடீர் என்று ஓ.பி.எஸ். டில்லிக்குப் பறக்கிறார்.
"அவரைச் சந்தித்து, அவரின் வாதத்துக்குச் செவி கொடுங்கள்" என்று மத்திய அமைச்சர் நாயுடுவே வேண்டுகோள் விடுக்க... தடபுடல் சந்திப்பு நடந்தேறியது. "விட்டேனா பார்!" என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பித்துரையும் தன் அணி எம்.பி.க்களுடன் படை எடுத்து தேர்தல் கமிஷனில் முகாமிட்டார். இனி இருதரப்பும் ஆஜராக... வாக்குவாதம்... வாதபேதம் என ஒரு நீதிமன்றக் காட்சியைப் போர்க்களமாகக் காணவேண்டிய சூழல் தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையே தீபாவுக்கும் அவரின் கணவர் மாதவனுக்கும் இடையே பனிப்போர். நிர்வாகிகளை நியமிப்பதில் இருவரும் முட்டி மோதிக் கொண்டனர். விளைவு...? மாதவனின் புதுக்கார் பெசன்ட் நகர் நோக்கிப் பயணித்தது. திரைமறைவுத் திருவிளையாடல்கள் அரசியல் களத்தில் அரங்கேறின. மாதவனோ... தனிக் கட்சி என்று கூறி ஜெயலலிதாவின் சமாதியில் தியானச் சடங்கில் ஈடுபட்டார்.
"நான் மட்டும் இளைத்தவனா?" என்று எம்ஜிஆரின் அண்ணனான எம்.ஜி.சக்ரபாணி குடும்பத்தில் இருந்து ஒருவர் கிளம்பி இருக்கிறார். இவர்கள் அனைவருமே ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்றுவார்களாம். இரட்டை இலையை மீட்பார்களாம். காதுகளைத் தொட்டுப் பார்க்கிறோம். பூப்...பூவாய்த் தென்படுகிறது.தினகரன் தான் ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதும் தொங்கு முகத்தோனாக மாறி விட்டார் எடப்பாடி பழநிச்சாமி. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களை நியமித்த போது ஈ.பி.எஸ். பெயர் மிஸ்ஸிங். அப்போதே சமிக்ஞைகள் சஞ்சலப்படுத்தத் தொடங்கி விட்டன.


வேட்பாளர் தினகரன் என்று சொல்வதை விட பணகரன் என்று சொல்லும் அளவுக்கு ஆர்.கே.நகரில் பணநதி பாயப்போகிறது. தாகத் தவிப்புள்ள தொகுதி வாசிகளுக்கோ பாலைவனத்தில் கிடைத்த பழரசம் போல. ஒரு குடும்பத்தில் 5 வாக்காளர்கள் என்றால் அக்குடும்பம் புதிய பணக்கார குடும்பமாகி விடும். போனசாக இதர கட்சிகளின் கொசுறுப் பணமும் கிடைக்கும்.


தினகரனை எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளர் ‘தினகரன்’ நாளிதழின் நிருபராகப் பணியாற்றியவர். ஒருவகையில் பார்த்தால் ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் அறிவிப்பு என்பது ஜெயலலிதாவின் பாணி. அவர்தான் அடிமட்டத் தொண்டனைத் தேடிப்பிடித்துத் தேர்தலில் நிறுத்துவார். அமைச்சராக்கியும் அழகு பார்ப்பார். இந்த முன்னுதாரணத்தால் தமிழகம் எங்கும் உள்ள திமுக தொண்டர்கள் களிபேருவகையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்கள். புதிய பாணியைத் திமுக அறிமுகம் செய்துவிட்டது. இனி அடுத்துவரும் உள்ளாட்சித் தேர்தலின் போதும் இதே நிலைப்பாடு தான் செயல்பாட்டுக்கு வரும். அனுதினமும் ஓடியாடிக் களப்பணி செய்யும் அடிமட்டத் தொண்டனுக்கும் இனி தேர்தல் டிக்கெட் கிடைக்குமே என்ற நம்பிக்கைக் கீற்று தமிழகம் எங்கும் திமுகவின் தொண்டர்களிடையே பரவி விட்டது.
மக்கள் நலக் கூட்டணி வேறு உடைந்து விட்டது. மார்க்சிஸ்ட் கட்சி தனித்துக் களமிறங்கி விட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அமைதிக் காப்பதாக அறிவித்து விட்டன. புதிய அணிக்குள் இப்போதே துண்டு போட்டு வைக்கும் அரசியல் சதுரங்க ஆட்டம் இது.


விடியட்டும் என்பது திமுக குரல். யாருக்கு?


Who's Online

We have 86 guests and one member online

  • ZeettReuck