இலங்கையில் நடைபெற்று முடிந்த போரில் தப்பிப்பிழைத்த தமிழர்களுக்கு அங்கு என்ன நடக்கின்றது என்பதை அங்கிருந்தே சொல்கின்ற முதலாவது திரைப் படைப்பு ''முற்றுப்புள்ளியா".

உண்மைக் கதையினை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இயக்குனர் ஒருவரால் இயக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கௌரவம் மற்றும் மண்ணுக்காக பாடுபடும் வரலாற்றியலாளர், சூழல் பாதுகாவலரான இளம் இந்திய ஊடகவியலாளர் ஆகியோரின் அன்றாட வாழ்வுக்கான சிரமங்களும், போராட்டமும் இத்திரைப்படத்தில் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.


திரைக்கதையில் வருகின்ற சம்பவங்கள் நடைபெற்ற இடங்கள் தத்ருபமாக மீள் உருவாக்கப்பட்டு படமாக்கப் பட்டுள்ளதோடு, போரின் போது, நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் இணைத்து படத் தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் சமீபத்தில் பிரசாத் லேபரட்டரீஸ் அரங்கில் நிகழ்ந்த இப்படத்தின் திரையீட்டிற்குப் பிறகு, படம் குறித்து பிரமுகர்களின் பார்வைகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தனது கருத்தைப் பதிவு செய்த தமுமுக மாநிலச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜாகனி.


‘‘ஒரு கலை ஊடகம் செய்ய வேண்டிய கடமையை மிகச்சரியாக இப்படம் செய்துள்ளது. தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி, மறதி பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடாமல், நினைவில் பதித்து, உலகின் மனசாட்சியை உலுக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்கிய சகோதரி செறீன் சேவியருக்கும் படக்குழுவினருக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டும் நன்றியும். அதேநேரம், இலங்கையில் தமிழ் முஸ்லிம்களுக்கும் இழைக்கப்பட்டக் கொடுமைகள் எதுவும் இப்படத்தில் இடம் பெறவில்லை. இதுவும் இடம் பெற்றிருந்தால் இப்படம் முழுமை பெற்றிருக்கும்’’ என்றார்.


இலங்கையில் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியையும், இனஅழிப்புக்குப் பிறகுள்ள அவலநிலையையும் விளக்குகிற படத்தில், முஸ்லிம்கள் குறித்த பதிவு ஏன் இல்லை. மேலும், படக்குழுவில் முஸ்லிம்கள் பலர் இடம் பெற்றும் ஏன் இப்படி நிகழ்ந்தது? என படத்தின் இயக்குநர் செறீன் சேவியரிடம் கேட்டோம். அவர்,உண்மைதான்.
நான்கு கதாபாத்திரங்களை வைத்து இக்கதையைச் சொன்னோம், அவர்கள் முஸ்லிம் குடும்பத்தினராக இல்லை. கிறிஸ்தவப் பாதிரியார் அவமதிக்கப்படும் காட்சி படத்தில் உள்ளது.
அது போன்ற ஒற்றை நிகழ்வாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டக் கொடுமையைப் பதிவு செய்ய விரும்பவில்லை. இலங்கையில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை மிகப்பெரிய அளவிலானது. அந்தத் துயரங்கள் நிச்சயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அதை ஆழமான கலைப்படைப்பாகச் செய்ய விரும்புகிறேன், எதிர்காலத்தில் செய்வேன். இப்படத்தின் கதாநாயகனாக (முக்கியப்பாத்திரம்) வருபவரும், வேறு சில பாத்திரங்களும் முஸ்லிம்களே என்றார்.


மிகுந்த நெடுக்கடிகளுக்கும் மிரட்டல்களுக்கும் மத்தியில் சொந்தப் பணத்தை செலவழித்து இப்படத்தை செறீன் சேவியர் உருவாக்கியுள்ளதை, மனித உரிமைப் போராளியும்,மக்கள் சிவில் உரிமைக்கழக நிர்வாகியுமான டி.எஸ்.எஸ்.மணி நம்மிடம் தெரிவித்தார். தமிழினத்திற்கு இழைக்கப் பட்டக் கொடுமையைப் படமாகப் பதிவு செய்த செறீன் சேவியருக்கு நமது பாராட்டுக்கள்.
அவர் கூறியது போல முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்,படமாக எடுக்கப்பட வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு.

 


Who's Online

We have 83 guests and one member online

  • ZeettReuck