ஊடகம் வெறும் செய்தி பரிமாற்றச் சாதனம் என்பதைக் கடந்து, கருத்துருவாக்க ஆயுதம் என்ற வீச்சினை அடைந்துள்ள நிலையில் முஸ்லிம் சமுதாயத்தின் ஊடகப் பங்கேற்பும், விழிப்புணர்வும் மிகவும் கவலைக்கிடமான சூழலில் உள்ளது. இந் நிலையில் ஊடக விழிப்புணர்வையும், பங்கேற்புத் தகுதியையும் உருவாக்குவதற்காக, காயிதே மில்லத், ஊடகக் கல்விக்கான பன்னாட்டுக் கல்விக் கூடத்தை (QUAIDEMILLATH INTERNATIONAL ACADEMY OF MEDIA STUDIES)சென்னையில் ஏற்படுத்தியுள்ளார் கண்ணியமிகு காயிதே மில்லத்தின் பேரனும், காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் தாளாளருமான எம்.ஜி.தாவூத் மியாகான்,


இந்தக் கல்வி நிறுவனம் குறித்து மக்கள் உரிமைக்கு அவர் வழங்கிய பிரத்யேக நேர்காணல்....


மக்கள் உரிமை: ஊடகக் கல்விக்காக ஒரு கல்வி நிறுவனத்தை ஏற்படுத்த என்ன காரணம்? இதற்கு உந்துசக்தி எது?


தாவூத்மியாகான்: இந்திய முஸ்லிம்கள் அடைந்துள்ள மிகப்பெரிய பாதிப்புகளுக்குப் பின்னணியில் இருப்பவை பாசிசத்தையும், பொய்மையையும் பரப்புகின்ற ஊடகங்கள் தான்.இந்தத் துறையில் போதிய விழிப்புணர்வு இல்லாமலும், சரியான பங்களிப்பைச் செய்யாமலும் ஒரு சமுதாயம் இருப்பது தொடரக் கூடாது. மிகவும் சக்தி வாய்ந்த இத்துறையில் முஸ்லிம்கள் முழுவீச்சில் இறங்குவதோடு, அதற்குரிய அனைத்து நவீனத் தொழில் நுட்பத் தகுதிகளையும் பெற வேண்டும் என்ற வேட்கையின் வெளிப்பாடாகவே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், இதழியல், காட்சித் தகவலியல் ஆகியவை ஒரு துறையாக செயல்பட்டு வருகின்றன. முழுக்க, முழுக்க ஊடகக் கல்விக்காக மட்டுமே, முஸ்லிம் சமுதாயப் பின்னணியில் இந்தியாவில் தொடங்கப்படும் முதல் கல்விக்கூடம் இதுதான். சென்னையின் புகழ்பெற்ற லயோலாக் கல்லூரிக்கு எதிரில் இந்தக் கல்விக்கூடம் அமைந்துள்ளது. டெல்லி ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழகத்தின் ஊடகத்துறை எங்களுக்கு உந்து சக்கியாக இருந்தது. பாலிவுட்டின் புகழ்பெற்ற நட்சத்திரங்களான நடிகர் ஷாருக்கான், இயக்குநர் கபீர்கான், இதழியல் துறையின் பர்க்காதத் ஆகியோர் இதன் தயாரிப்புகள்.

மக்கள் உரிமை: ஊடகத்தால் முஸ்லிம் சமுதாயம் சர்வதேச அளவிலும், உள்நாட்டளவிலும் பெரும் பாதிப்படைந்ததாகக் கூறினீர்கள்? எத்தகைய பாதிப்புகள் அவை?
தாவூத் மியாகான்: உலகத்தின் மிகப் பெரும் பான்மையான, முக்கியமான ஊடகங்கள், உலகின் மிகச்சிறிய சமுதாயமாகவும், உலகையே தாங்கள்தான் ஆளவேண்டும் என்ற பேராசை உடையவர்களாகவும் உள்ள யூதர்களின் பிடியில் உள்ளது.


முஸ்லிம்களின் பெரும் பங்குகள் உள்ள நிறுவனத்தில் கூட அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடிவதில்லை எடுத்துக்காட்டாக, உலகமுஸ்லிம்களின் உள்ளங்களையெல்லாம் ரணமாக்கிய சல்மான் ருஷ்டியின் "சாத்தானின் கவிதைகள்’’ நுலை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டது. அந்தப் பதிப்பகத்தின் பெரும்பங்குகள் குவைத் முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அதுபோல, குவைத் மீது ஈராக் போர்த் தொடுத்தபோது, ஈராக் படையினர், குவைத்தில் பெரும் கொடுமைகளை இழைத்ததாகவும், இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தைகளைக் கூட, வீதியில் வீசியதாகவும் அமெரிக்க ஆதரவு தொலைக்காட்சிகள் செய்தியைப் பரப்பின. உண்மையில் அதுபோல எந்த சம்பவமும் நடைபெறவில்லை எனப் பிறகு தெரியவந்தது.


இரண்டாவது, வளைகுடாப் போரில் இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக, அமெரிக்கா தொடர்ந்து வதந்தி பரப்பி, இராக் மீது படையெடுத்து, அந்நாட்டை சிதைத்தது. லட்சக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொலை செய்து, எண்ணை வளத்தைக் கொள்ளையடித்தது. இராக்கில் எந்தப் பேரழிவு ஆயுதமும் இல்லை என்ற உண்மையை, ஊடகப் பரப்புரையால் அமெரிக்கா மறைத்தது.


உள்நாட்டளவில் பார்ப்போமேயானால், இன்றைக்குப் பிரதமராக பொய்மைகளையும், போலியான வாக்குறுதிகளையும் பரப்பி மக்களைக் குழப்பி, பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் அடைந்துள்ளார். மோடியின் பொய்மைகளையும், நாடகங்களையும், மக்களிடம் கொண்டு போய் உண்மை போலக் காட்டியவை, அறத்துக்குப் புறம்பான ஊடகங்கள்தான். எனவே, நீதியுணர்யுள்ளவர்களும், இந்நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்க விரும்புவர்களும் ஊடகத் துறைக்குள் வர வேண்டும்.


மக்கள் உரிமை: நீங்கள் தொடங்கும் கல்விக் கூடத்தில் என்னவெல்லாம் கற்பிக்கப்பட உள்ளன. தொழில் நுட்பங்கள் மட்டுமா? இல்லை அதைத் தாண்டிய ஊடக அறங்களுமா?


தாவூத் மியாகான்: ஊடகத்துறைக்குத் தேவையான அனைத்துக் கல்வியும் இந்நிறுவனத்தில் வழங்கப்படும். ஓராண்டு, ஆறுமாதம், மூன்றுமாதம், எனப் பல்வேறு கால அளவுள்ள சர்வதேசப் பட்டயப் படிப்புகள் இங்குள்ளன. உலகப் புகழ்பெற்ற ஊடக நிபுணர்கள் இதில் தமது பங்களிப்புகளைத் தர உள்ளனர். வெளிநாடுகளிலிருந்தும் வீடியோ கான்ஃப்ரசிங் மூலமும் வகுப்புகள் நடத்த நிபுணர்கள் இசைந்துள்ளனர். இன்றைக்குத் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களும் கற்பிக்கப்படும். திறன்களைப் போதிப்பதோடு, ஊடக அறங்களையும் சேர்த்தே போதிக்க உள்ளோம். அது மிகத் தேவையானதும் கூட...


மக்கள் உரிமை: பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் உள்ள இதழியல் மற்றும் காட்சித் தகவலியல் துறைக்கும், உங்கள் நிறுவனம் வழங்கும் கல்விக்கும் இடையே என்ன வேறுபாடு?


தாவூத்மியாகான்: பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் உள்ள ஊடகவியல் சார்ந்த துறைகளின் பாடத்திட்டம் இன்றைய ஊடகங்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் உள்ளதா? என்பது வினாக்குறியே... காயிதே மில்லத் பன்னாட்டு ஊடகக் கல்வியுகத்தில் உள்ள படிப்புகள் யாவும், இன்றைய ஊடக உலகின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், அந்தத் துறையில் உள்ள முன்னணி வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டவை.


மக்கள் உரிமை: பெண்களுக்கு ஊடகத் துறையில் வாய்ப்புகள் எப்படி உள்ளது?


தாவூத் மியாகான்: மிக ஒளிமயமான வாய்ப்பு பெண்களுக்கு ஊடகத்துறையில் உள்ளது. இதில் இணைய மாணவிகளே அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர். ஆக்ராவில், முஸ்லிம்கள், தாய்மதம் திரும்பிவிட்டதாக சங்பரிவார கும்பல் நாடகமாடிய போது, அதை அம்பலப்படுத்தியவர் ஒரு முஸ்லிம் பெண் செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
காயிதே மில்லத் பெண்களின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறையுள்ளவர்கள். அவரது பேத்திகளான எனது அக்காவும், தங்கையும் பாட்டனார் கொடுத்த ஊக்கத்தால்தான் மருத்துவர்களானார்கள். அவர்கள் மருத்துவர்களாகி விட்டதால்தான் நான்வேறு துறையைத் தேர்ந்தெடுத்தேன். எனவே பெண்கள், குறிப்பாக முஸ்லிம் பெண்கள், ஊடகத்துறையில் சிறப்பாகப் பணியாற்ற முடியும். அவர்கள் பாதுகாப்பாகத் தங்கிப் பயில்வதற்கு, அஞ்சுமன் பள்ளி வளாகத்தில் நாம் விடுதி ஏற்பாடும் செய்துள்ளோம்.


மக்கள் உரிமை: வகுப்புகள் எப்போது தொடங்க உள்ளன?


தாவூத் மியாகான்: பூர்வாங்கப் பணிகள் முடிந்துவிட்டன. இன்ஷா அல்லாஹ் 2017 ஏப்ரல் மாதம் 23ந் தேதியிலிருந்து, இந்நிறுவனம் இயங்கத் தொடங்கும்.


Who's Online

We have 84 guests and one member online

  • ZeettReuck