நெடுவாசல்... இயந்திரங்கள் நடும் வாசல் ஆகிப்போனது, கொடும் வாசலாய் ஆகிப்போனது. ஓட்டைப் போடாமல் ஏமாற்றிய தமிழக மக்கள் கேட்டை சந்திக்க மத்திய அரசு நிர்பந்திருக்கிறது. நெடுவாசல் மக்கள் மட்டுமல்ல, தமிழக மக்களே தனல் மேடைப் புழுவாய் தவிக்கின்றனர்.


நெடுவாசலில் எடுக்கப்போவது ஹைட்ரோ கார்பன் என்கிறார்கள். அப்படியென்றால் என்ன? நெடுவாசலில் இந்த வேதியல் பொருள் இருக்கிறதா? ஆம் எனில் எந்த அளவு? இதனை உறிஞ்சி எடுத்தால் நிலம் நாசமாகுமா? நீர் கெட்டுப் போகுமா? மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா? இத்தகைய கேள்விகளுக்கான பதிலைக் கூற பொறுப்பாளர்கள் யாருக்குமே தெளிவில்லை.
ஆய்வு என்ற பெயரில் நெடுவாசல் வந்த நிபுணர்களும் ஓய்வு எடுத்துக்கொண்டு திரும்பினர். தமிழக மக்களைச் சோழிகளாக்கி பாஜக அரசு பரமபதம் விளையாடுகிறது. போராட்டத்தில் குதித்த மக்களை சமாதானப்படுத்தி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் பாஜக பொறுப்பாளர்களுக்கு அளவுகடந்த ஆர்வம். பொன்.ராதாகிருஷ்ணனோ ஆத்திர அவசரத்தின் உச்சத்தில் தாண்டவமாடுகிறார். இதற்கு என்ன காரணம்? இந்தத் துறையில் எவ்வித அனுபவமே இல்லாத கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெம் லெபாரட்டரீஸ் என்ற புத்தம்புது நிறுவனத்திற்கு நெடுவாசல் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. புதிய வரவேற்புக்கு என்ன காரணம்? இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. அவருக்கும் பொன்.ராதாவுக்கும் இடையே அப்படியென்ன ரகசிய ஒப்பந்தமோ, தெரியவில்லை.


சிவப்புக் கம்பள வரவேற்பு


போராட்டக் குழுவினரின் ஒரு பகுதியினரை டெல்லிக்கு வரவழைக்க பொன்.ராதா திட்டமிட்டார். இந்தக் குழுவினர் மதுரையிலிருந்து விமானம் மூலமாக புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு போக, வர செலவு ஒவ்வொருவருக்கும் 32,000 ரூபாய். டெல்லியிலோ அவர்களுக்கு நட்சத்திர விடுதியில் வாசம், சொகுசு காரில் பவனி, பெட்ரோலியத் துறை அமைச்சகத்தில் சிவப்புக் கம்பள விரிப்பு மரியாதை, அழைத்துச் சென்றவர் பொன்.ராதா.


நெடுவாசல் விவகாரம் பற்றி எரிகிறது, கிராமத்துக்கு தூதுக்குழு அமைச்சரை சந்திக்கிறது, டெல்லி செய்தியாளர்கள் விடுவார்களா? அமைச்சர் தர்மேந்திர பிரதான் அலுவலகத்தில் குவிந்து விட்டனர். இரண்டு மணி நேரக் காத்திருப்பு. திடீரென்று தகவல் வருகிறது. பேச்சுவார்த்தை முடிந்தபிறகு கிராமத்து தூதுக்குழுவினரை மாற்று வழியில் அழைத்துக் கொண்டு பொன்.ராதா போய்விட்டார் என்ற தகவல் நிருபர்களை நெருங்குகிறது. அவர்களோ தகிப்பில் கொதித்தார்கள்.


அடுத்த சில நிமிடங்களில் அவர்களுக்கு பொன்.ராதா அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. நெடுவாசல் தூதுக்குழுவினர் பொன்.ராதா அலுவலகத்தில் குழுமியிருக்கின்றனர்... "அங்கு வந்து பேட்டி எடுத்துக் கொள்ளுங்கள்...'' என்று அறி விப்பு கொடுக்கப்படுகிறது. செய்தியாளர்களோ மறுத்து விட்டார்கள். வேறு வழியின்றி அறிக்கை வழியில் செய்தியைப் பரப்பினார் பொன்.ராதா. நெடுவாசல் கிராமத்து மக்களின் உணர்வுகளை மதித்து நடப்போம்... நெடுவாசலுக்கு தீங்கு நேராதவாறு பார்த்துக் கொள்வோம்... என்று பொன்.ராதா வாக்குறுதி கொடுத்திருந்தார். அதே காலக்கட்டத்தில் சென்னையில், சட்டமன்றத்தில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஒரு முழக்கத்தை வழங்கினார்... "நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கவே மாட்டோம்..." என்பதே அவரின் வாசக வீச்சு. ஆனால் என்ன நடந்தது? நாடெங்கும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் நெடுவாசலும் சேர்க்கப்பட்டு விட்டது. அப்படியானால் பேச்சுவார்த்தையின் போது மக்களின் சொல்லை மந்திரி கேட்டாரா... மந்திரியின் நிர்பந்தத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா... மர்மச் சம்பவம் மனதை நெருடுகிறது.


நாராயணசாமி  இடத்தில் பொன். ராதா


புதுடெல்லியில் அமைச்சர்களை சந்திக்க விவசாயிகள் சென்றார்கள். பொன்.ராதா கூடப் போனார். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு கேட்டுச் சென்றவர்களுடன் கூட பொன்.ராதா ஐக்கியமாகி இருந்தார். நெடுவாசலையும் அவர் விடவில்லை. கூடவே சென்று குளிர்காய்ந்து கொள்கிறார். ஆவன செய்வோம்... என்று அறைகூவல் விடுக்கிறார். நடப்பவை என்னவோ எதிர்மறையான நிலைப்பாடுகள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாராயணசாமி இதுபோன்று நகைச்சுவையாளராக செயல்பட்டு வந்தார். அந்த இடத்தை நிரப்ப இப்போது பொன்.ராதா வந்திருக்கிறார்.


நெடுவாசல் போன்ற திட்டங்களுக்கு ஒரு குத்தகைத் தொகை நிர்ணயிக்கப்படும். ஆனால் நெடுவாசலில் இத்தகைய குத்தகைத் தொகை நிர்ணயிக்கப்படவே இல்லை. ஏன் தெரியுமா? ஹைட்ரோ கார்பன் கிடைக்குமா என்றே தெரியவில்லை. கிடைக்குமெனில் எந்த அளவு என்றும் புரியவில்லை. ஆகவே தான் குத்தகைத் தொகை நிர்ணயிப்பதற்கு பதிலாக ‘லாபத்தில் பங்கு’ என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முச்சந்தியில் நின்று முழக்கமிடுகின்ற வாசகமோ ‘நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்பதுதான். ஆனால் இத்திட்டப்பணிகளுக்காக மத்தியப் பெட்ரோலியத் துறை 12 லட்ச ரூபாய்க்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. கலெக்டரும் அதைக் கலெக்ட் செய்துகொண்டு களப்பணி தொடங்க காத்திருக்கிறார். வாய்ச்சொல்லில் வீரர் என்ற பாரதியின் பாடலை தமிழக ஆட்சியாளர்கள் நிரூபிக்கிறார்கள்.
ஒப்பந்தப் பட்டியலில் மேற்குவங்கமும் இருந்தது, ஆனால் அந்தப் பெயரை மட்டும் கடைசி நேரத்தில் கழட்டி விட்டுவிட்டார்கள். என்ன காரணம்? மம்தா பானர்ஜிக்கு எதிராக மல்லுக்கட்ட அவர்கள் தயாராக இல்லை.


தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த திடீர் திணிப்பு? மம்தாவைப் போன்று முரட்டுப் புரட்சியாளர் தமிழகத்தில் இல்லை என்பதை டெல்லி ஆட்சியாளர்கள் கணித்திருக்கிறார்கள். அந்த எண்ணத்தில் மண்ணைப் போட தமிழகத் தலைவர்கள் பொங்கியெழுந்து புரட்சி முழக்கங்களை புறப்பட வைக்க வேண்டும்.


Who's Online

We have 51 guests and one member online

  • ymegywu