அனைத்து  இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில்  சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சீவிசிகி மைதானத்தில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைப்பெற்றது. இம்மாநாட்டில் பாஜகவை தவிர்த்து தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் கலந்துக்கொண்டது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய, முஸ்லிம்கள் மகளிர் அணியை சேர்ந்த சகோ. ஃபாத்திமா முஸஃபர் அவர்கள், “இந்திய நாட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக் கொண்டவர்களின் புள்ளிவிவர பட்டியலை மேற்கோள் காட்டி அதில் முஸ்லிம்கள் தான் ஆக குறைவு என்று குறிப்பிட்டார். 

மேலும் அகில இந்திய தனியார் சட்டவாரியத்தால், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டுபெறப்பட்ட புள்ளிவிவரத்தை மேற்கோள் காட்டி, முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதிகளில் எடுக்கப்பட்ட சர்வேயில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மணமுறிவுகளில் 72% இந்து சமுதாயத்திலும், 21% கிறிஸ்தவ சமுதாயத்திலும், வெறும் 5.7% மணமுறிவே இஸ்லாமிய சமுதாயத்திலும் நடந்திருக்கிறது என்றார்.

இஸ்லாமிய பெண்களுக்கு நீதி பெற்றுத்தரப்போவதாக நீலிக் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, குஜராத் படுகொலையில் கணவன்களை இழந்த இஸ்லாமிய பெண்களுக்கும், கொலை செய்யப்பட்ட குஜராத் எம்.பி இர்ஃபான் ஜாஃப்ரியின் மனைவி ஜக்கியாவிற்கும், காஷ்மீரில் கொன்று அழிக்கப்பட்ட ஏராளமான கஷ்மீரிகளின் மனைவி மார்களுக்கும், தனது வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று காரணம் காட்டி சாலையில் இழுத்து வெட்டப்பட்ட முகமது அஃலாக்கின் மனைவிக்கும், போபாலில் கொல்லபட்ட 8 இளைஞர்களின் மனைவிகளுக்கும் நீதி பெற்றுத் தராதது ஏன் என்று வினவினார். நேரம் வந்தால் இஸ்லாமிய பெண்களான நாங்கள் சுமையாவாக மாறவும், இந்த சமுதாயத்திற்கு ஷஹீதாகவும் தயங்கமாட்டோம் எனவும் சூளுரைத்தார்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் சகோ. இனிக்கோ இருதயராஜ் அவர்கள், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் இங்கே நல்லிணக்கத்தோடு அமைதியாக வாழ்த்து வருகிறார்கள். - இந்த நல்லிணக்கத்தில், அமைதியில் மோடி கல்லெறிகிறார் என குற்றம் சாட்டினார். பொது சிவில் சட்டம் கொண்டுவர துடிக்கும் பாஜக அரசால், இந்து மதத்திற்குள் கூட ஒரு பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வர முடியாது என்றார். 

முஸ்லிம் பெண்களுக்கு நீதி வாங்கித் தருவதாக பொய் கண்ணீர் வடிக்கும் மோடி, முதலில் அவரது மனைவிக்கு நீதியை வழங்கட்டும என்றார். பொது சிவில் சட்டத்தை கொண்டிவர துடிக்கும் மோடியால் தான், ஷரீயத் சட்டத்தை பற்றி தான் ஆழமாக படிக்க நேர்ந்ததாகவும், அதன் சிறப்பு குறித்து அறிந்து கொள்ள முடிந்ததாகவும் அதனால் மோடிக்கு நன்றிகளை கூறிக்கொள்வதாக கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் பேசும் போது, “இந்திய நாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டும் அல்ல, மிகப்பெரிய மதச்சார்ப்பற்ற நாடும் கூட. இங்கு வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் சிறப்பு. அந்த சிறப்பை பேணிக்காப்பது அரசாங்கத்தின் கடமை” என்றார். மேலும் அவர், ஷரியத் சட்டம் மனிதர்களால் இயற்றப்பட்டதல்ல, இறைவனால் அருளப்பட்டு இறைதூதரால் போதிக்கப்பட்ட சட்டம் என்று குறிப்பிட்டபோது, அரங்கத்தில் தக்பீர் முழக்கம். அடுத்து வரும் மாதங்களில் சில மாநில தேர்தல்கள் நடக்க இருப்பதால், பொது சிவில் சட்டத்தின் மூலம் இந்து-முஸ்லிம்களுக்கிடையில் மோதல் போக்கை உண்டாக்கி, அதில் மலிவான அரசியல் செய்ய முயல்கிறது ஆளும் பாஜக அரசு என வாசன் குற்றம்சாட்டினார். மேலும், மீனவர் பிரச்சனை, நதிநீர் பிரச்சனை, பணப்பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகளை தீர்க்க அருகதையற்றவர் மோடி என கடுமையாக சாடினார். திமுக சார்பாக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அதன் துணை பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி அவர்கள், “சாதாரண நிஷிஜி சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் இரண்டரை ஆண்டுகள் கடத்திய பாஜக அரசு, பொது சிவில் சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் வைத்துத்தான் பார்க்காட்டுமே” என்று எச்சரித்தார். பொது சிவில் சட்டத்தை எதிர்க்க திமுக எந்த மாதிரியான தியாகங்களை செய்யவும் எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறது என்றார்.

தாய்கழகமாம் தமுமுக சார்பில் பேசிய பேரா. ஹாஜா கனி அவர்கள், மாநாட்டு மேடையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்திருப்பதை மேற்கோள்காட்டி, “எங்கள் எதிரி எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே...” என்ற பாவேந்தரின் வரிகளை குறிப்பிட்டார். 

அறியாத சனங்களை கொண்டு அரியணை ஏறியது பாஜக என்று சாடிய பேரா. ஹாஜா கனி, “இந்தியாவில் 400 தனியார் சட்டங்கள் இருப்பதாகவும், அதில் வெறும் 4 மட்டுமே முஸ்லிம்களுக்கானது” என்றார். பொது சிவில் சட்டம் பற்றி பேசும் பாஜக, “இந்துக்களுக்கு பொது சுடுகாடு, அங்கே செல்ல பொது பாதை” கொண்டு வர முயலட்டும் என்றார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அதன் இளைஞர் அணித் தலைவர் இரா. அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி அவர்கள், “பாமக ஒருபோதும் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்காது தொடர்ந்து எதிர்க்கும்” என்றவர், “ ஒரு உறுப்பினராக நாடாளுமன்றத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்வேன்” என வாக்குறுதியளித்தார்.மமக தலைவர் பேராசிரியரை மிகவும் நல்ல மணிதர், நல்ல மனிதர்களால் சிலநேரம் தேர்தல்களில் வெல்ல முடிவதில்லை என குறிப்பிட்டவாறு பேச தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவக்கரசர், “மனிதன் இயற்றிய சட்டங்களை மாற்றுவதே அவ்வளவு எளிதல்ல, ஷரீயத் இறைவனின் சட்டம்.- அதில் கைவைக்க மோடியால் முடியவே முடியாது” என்றார்.

அதிமுக சார்பில் பேசிய அன்வர் ராஜா எம்.பி அவர்கள், “பொது சிவில் சட்டத்தை அதிமுக முன்பிருந்தே எதிர்த்துவருகிறது, தொடர்ந்து எதிர்க்கும் என்றார். 

பாசிச மோடி அரசின் சிறுபான்மை விரோத போக்கை கடுமையாக சாடி பேசிய விடுதலை சிறுத்தைகளில் தலைவர் தொல்.திருமாவளவன், “சமுக நீதியை நிலைநாட்ட, சாதிய கட்டமைப்பை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட வேண்டும்” என கேட்டுக்கொண்டார். பொது சிவில் சட்டம் என்பது சங்பரிவார கூட்டத்தின் திட்டங்களில் ஒன்று தான் என்றும், இந்தியா முழுக்க ஒரேசட்டம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்பது தான் அவர்களின் திட்டம். அதை எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  “சட்டமன்றத்தில் இஸ்லாமியர் எத்தனை பேர்?நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர் எத்தனை பேர்?, ஐஏஎஸ் அதிகாரிகளில் இஸ்லாமியர் எத்தனை பேர்?. ஐபிஎஸ் அதிகாரிகளில் இஸ்லாமியர் எத்தனை பேர்?, நீதித்துறைகளில் இஸ்லாமியர் எத்தனை பேர்? என்ற கேள்வியை கேட்க இஸ்லாமியர்கள் நடத்த வேண்டிய போராட்டம் சமூக நீதிக்கானது என்றார். இஸ்லாமியர் அல்லாதவர்களின் திருமணங்கள் ஊரறிய, ஊடகங்களறிய நடப்பதாகவும், இஸ்லாமிய விவாகரத்து வழக்குகள் ஜமாத்தில் பெரியவர்கள் முன்னிலையில் கட்டுக்கோப்போடு நடப்பதாகவும் சிலாகித்து குறிப்பிட்டார். ஷரியத் சட்டஙகளின் சிறப்பை பட்டியலிட்டு, திருத்தப்பட வேண்டியது இஸ்லாமிய சிவில் சட்டமல்ல, இந்து திருமண சட்டம் தான் என்றார்.முன்னதாக பேசிய தமுமுக&மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, “உலகில் வீழ்த்த முடியாத வீரனாக கருதப்பட்ட நெப்போலியன் வாட்டர்லு என்ற இடத்தில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தான், அதுபோல இந்தியாவே திரும்பிப்பார்க்கும் இந்த மாநாடு மோடியின் வீழ்ச்சிக்கு வித்தாக அமையும்” என்று கூறியதுடன், “முஸ்லிம்கள் இஸ்லாமிய குடும்பவியல் காட்டித்தந்துள்ளபடி நாம் வாழ்ந்துகாட்ட வேண்டும்” என்ற அறிவுரையுடன் தனது பேச்சை முடித்துக்கொண்டார்.

இம்மாநாடு தமுமுகவின் ஊடகப் பிரிவின் சார்பாக சமூக வலைதளங்களில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டதால், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் வாழும் இஸ்லாமியர் நேரடியாக கண்டார்கள்.

சென்னையில் பிரமாண்டம் எதிர் எதிர் கட்சிகள் ஓரே மேடையில்

மத்திய பாஜக அரசு, இந்திய மக்கள் அனைவருக்குமான பொதுசிவில் சட்டத்தை கொண்டு வருவதாக கூறி தற்போது பின்வாங்கி உள்ளது. தனது அரசியல் தோல்வியை மறைக்கவே பொது சிவில் சட்டம் போன்ற பரபரப்பான செய்திகளை பாஜக வெளியிட்டு வருகிறது. இதனால் மத்திய பாஜக அரசைக் கண்டித்து முஸ்லிம்கள் நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள்,மாநாடுகள்,கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்கள். பாஜக தவிர எந்தவொரு அரசியல் கட்சியும் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கவில்லை.அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டித்துள்ளார்கள். அரசியல் கட்சிகளிடத்தில் ஒரு மித்த கருத்து இல்லையென்பதை காரணம் காட்டியே பொது சிவில் சட்டத்தை ஒத்தி வைப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

இருப்பினும், பொது சிவில் சட்டத்துக்கு எதிரான கண்டனங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவ்வாறான ஒரு கண்டனம் சென்னையில் டிசம்பர் 25ஆம் நாள் மாநாடாக நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் முஸ்லிம் அமைப்புகள்,கட்சிகள் சார்பில் இந்த பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதில் தமுமுக,மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தௌஹீத் ஜமாத்,பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இண்டியா,சோசியல் டெமாக்ராடிக் பார்ட்டி,வெல்ஃபர் பார்ட்டி, தொண்டு இயக்கம், ஜமாத்&உல்&உலமா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள்,கட்சிகள் பங்கெடுத்தன. இந்த மாநாட்டிற்கு ஜமாத்&உல்&உலமா சபை தலைவர் ஏ.இ.அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். மாநாட்டில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் துரைசாமி, அதிமுக மக்களவை உறுப்பினரும் சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளருமான ஏ.அன்வர் ராஜா, காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சயின் தலைவர் ஜி.கே.வாசன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இளைஞர் அணித் தலைவர் இரா.அன்புமணி எம்.பி. கிறிஸ்தவ நல்லிணக்க தலைவர் இனிகோ இருதயராஜ்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,  எஸ்டிபிஐ கட்சித் தலைவர் மவ்லவி தெஹ்லான் பார்கவி , ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ஷபீர் அகமது, வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என். சிக்கந்தர், இ.த.ஜ. தலைவர் எஸ்.எம்.பார்கர், மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் தலைவர் அ.ச.உமர்பாரூக் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்தியதேசிய லீக் பொதுச் செயலாளரும் நாகை மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நிஜாமுதீன், முஸ்லிம் லீக்கின் முன்னாள் தலைவர் அப்துல் சமது அவர்களின் புதல்வி ஃபாத்திமா முஸப்பர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். மாநாட்டில் தலைவர்கள் உரையாற்றும் போது மக்கள் மிகுந்த வரவேற்புடனும் உற்சாகத்துடனும் கவனித்தனர். மாநாட்டில் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவல்துறையினருக்கு எந்த வேலையும் வைக்காத வகையில் மிக கண்ணியமுடன் நடந்து கொண்டனர். இந்த மாநாடு எதிரும் புதிருமான அரசியல் கட்சி தலைவர்களை ஒரே மேடைக்கு கொண்டு வந்துள்ளது. முஸ்லிம்களின் நலனில் நாங்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் இருக்போம் என்ற உத்திரவாதத்தை அரசியல் கட்சிகள் அளிப்பதாக இந்த மாநாடு அமைந்தது. அதிமுக வின் அன்வர் ராஜாவும், திமுகவின் துரைசாமியும், ஒரே மேடையில் அமையப் பெற்றது சரித்திரத்தில் இதுதான் முதல்முறையாக இருக்கும். 

மாநிலத்தின் முதன்மையான கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிறுபான்மை முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் சிறுபான்மை கிறிஸ்தவ அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்ட இந்த மாநாட்டை பற்றிய செய்திகள் வெளியில் தெரியாத வண்ணம் பத்திரிக்கைகள் இருட்டடிப்பு செய்துள்ளன. தினகரன் மற்றும் தமிழ் இந்து நாளிதழ்கள் மட்டும் தான் இந்த செய்தியை மூன்றாம் பக்கத்தில் சிறிய அளவாக வெளியிட்டிருந்தது. 

முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பான செய்திகளை வேண்டுமென்றே பத்திரிக்கைகள் மறைத்திருப்பதில் இருந்து அவர்கள் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவான மனநிலையில் இருப்பதை காட்டியுள்ளார்கள். இது ஒருவகையில் ஜனநாயக விரோதப் போக்காகும். மேலும் அரசியல் அமைப்புச்சட்டம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளை மறுக்கும் பாஜக&வின் போக்கை வெளிப்படையாக ஆதரிப்பது போல்தான் இருக்கிறது. கூட்டமைப்பின் தலைவரும் ஜமாத்துல் உலமா சபையின் தலைவருமான மவ்லவி ஏ.ஈ. அப்துர்ரகுமான் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ அனீபா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தலைமையில் மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. மமக அமைப்புச் செயலாளர் எம்.யாகூப் தலைமையில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் மாநாட்டின் வெற்றிக்காக சிறப்பாக உழைத்தனர்.

-ஆயக்குடி நசிருத்தீன்


Who's Online

We have 48 guests and one member online

  • ymegywu