இஸ்லாமிய நெறிகளை மிகவும் கட்டுக் கோப்பாக பின்பற்றி வரும் நாடு சவுதி அரேபியா. இப்போது அந்நாட்டுப் பெண்களும் உயர்வான கல்வியை பெற்று வருகின்றனர். இதன் பயனாக அரசு துறைகள் பலவற்றிலும் இடம்பெற்று வருகின்றனர். 

கடந்த வருடம் உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இப்போது அதன் முன்னேற்றமாக நாட்டின் பங்குச் சந்தையின் தலைவர் பொறுப்பிலும், செய்தி தாள் துறையின் உயர் பொறுப்பிலும் இரண்டு பெண்களுக்கு பதவி அளித்து கவுரவப் படுத்தியிருக்கிறது சவூதி அரசாங்கம்.

 பங்குச் சந்தையின் தலைவராக சாரா

 நாட்டின்  அதிகார மையத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியாக அரசாங்கம் இந்த நியமனங்களை செய்திருக்கிறது.

சவூதி அரேபியா பங்குச் சந்தையின் தலைவராக சாரா அல் சுஹைமி என்பவர் நியமனம் செய்யப்பட இருக்கிறார்.  3ஆண்டுகளுக்கு முன்னர் இவர் என்.சி.பி. எனப்படும் தேசிய வர்த்தக வங்கியின் முதல் தலைமை நிர்வாக அலுவலராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். சவூதி அரசின் பங்குச் சந்தையில் தற்போது தலைவராக இருப்பவர் காலித் அல் ராபியா. இவரைத் தொடர்ந்து சாரா தலைவராகப் போகிறார். சவூதி அரேபியாவின் நிதித்துறையில் பணிபுரியும் ஒரு சில பெண்களில் சாராவும் ஒருவர்.

 சவூதி அரேபியா சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கி  இருக்கிறது. விஷன் 2030 என்ற திட்டத்தை 2030க்குள் நிறைவேற்ற காத்திருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை முக்கியப்படுத்துவதில் இந்த திட்டம் கவனம் செலுத்தும். இன்னும் சில ஆண்டுகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை 22 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக உயர்த்தவும் முடிவு செய்திருக்கிறது.

 சவூதியில் தற்போது பிரபலமாகி இருக்கும் சாரா அல் சுஹைமி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். இவரது தந்தையான ஜமாஜ் 2004 முதல் 2008 வரையில் சவூதி நாட்டு நிதிச் சந்தை ஆணையத்தில் தலைவராக இருந்தவர்.

சவூதி கெஜட் ஆசிரியராக சுமைய்யா

 சவூதி அரேபியாவிலிருந்து  சவூதி கெஜெட் என்ற ஆங்கில நாளிதழ் வெளியாகிறது. இந்த நாளிதழின் ஆசிரியராக சுமைய்யா ஜபர்த்தி என்பவரை நியமிக்கப் போவதாக நாளிதழின் இணையதளம்  செய்தி வெளியிட்டிருக்கிறது.சவூதி நாட்டின் நாளிதழ் ஒன்றின் ஆசிரியர்  பதவிக்கு வரும் முதல் பெண்ணும் இவர்தான்.  

நாளிதழின் தற்போதைய தலைவராக இருக்கும் காலித் அல்மாயீனா, சோமைய்யா ஜபர்த்தியை உறுதியும்,அர்ப்ப ணிப்பும் கொண்டவர் இந்தப் பதவிக்கு அதிகம் தகுதி, கொண்டவர் என்று பாராட்டி இருக்கிறார்

சவூதி அரேபியா அரசின் கொள்கையினால் பெண்களுக்கு பர்தா அணிவித்து அவர்களை அடிமைப்படுத்தி வருகின்றது என்று திட்டமிட்டு பொய்யுரை பரப்புபவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகின்றார்கள்?

-  ஜி. அத்தேஷ்


Who's Online

We have 37 guests and no members online