பிரிட்டனில் கோலாகலமாக ‘எமது  பள்ளிவாசல் தினம்’  நடத்தப்பட்டது. அது  என்ன ‘பள்ளிவாசல் தினம்?’  அது என்ன   ‘எமது’  ?..

  இதன்  பின்னணி குறித்து நாம் அறியப் புகுந்தால்  பல்வேறு  சுவாரஸ்ய   அம்சங்கள்  ஆக்கபூர்வ  செயல்பாடுகள் தெரியவரும். 

மேற்கு உலகில் இஸ்லாத்திற்கு எதிரான தவறான பரப்புரைகள்  பரப்பப் படுவதைக்  கண்டு  நடுநிலை  மக்களும்,  முஸ்லிம்களும் கவலையில்  ஆழ்ந்தனர்.

ஜனநாயகத்தின்   தொட்டிலாக கருதப்படும் பிரிட்டனில்   கூட இந்த நிலையா ?  பிரிட்டனில் வாழும்  முஸ்லிம்கள்  தமது சிந்தனைக் கதவைத் தட்டத் தொடங்கினர்.இஸ்லாத்திற்கு எதிரான தவறான கற்பிதங்களைக் களைய  தீவிர ஆலோசனைகளில்  ஈடுபட்டனர். 

அந்த  ஆலோசனைகளின்   விளைவாக   உதித்தது  தான்   ‘எம்  மஸ்ஜித்  தினம்’  அல்லது ‘எம் பள்ளிவாசல்  நாள்’. இதற்காக  கடந்த ஆண்டுகளில்   பிரிட்டன்  மக்களை  இந்த மஸ்ஜித்   தினத்தில்  எவ்வாறு   பங்கேற்க  வைப்பது  என  திட்டமிட்டு  பல   மைல்கள்  பயணம் செய்து   ஒவ்வொரு  பகுதியிலும்   உள்ள  மஸ்ஜிதுகளை  அதன் நிர்வாகத்தினரை   கண்டு  பேசியுள்ளனர்.  ஏராளமான   மஸ்ஜிதுகள்   தமது அண்டை வீட்டார்களான   பிற சமூக மக்களை   வரவேற்று   அரவணைத்து   மஸ்ஜிதுகள்  குறித்து  அவரவர்களின்   கருத்துக்களை , அனுபவங்களை  பகிர்ந்து  கொள்ள உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.  எம் பள்ளிவாசல்  தினத்தின்   நோக்கம்,  மையப்புள்ளி   இதுவேயாகும். 

ஐயங்கள் தீர்க்கப்பட்டன

இந்த ஆண்டு மூன்றாவது   மஸ்ஜித்  தினமாகும். தொடர்ந்து   மஸ்ஜித் தினத்திற்கு பல்லின சமூக  மக்களின்  ஆதரவு  பெருகிய வண்ணம்  உள்ளது.   எமது   மஸ்ஜித் தினத்திற்கு வாருங்கள் என்ற நிகழ்வு பிரிட்டன் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்றாக  மாறப்போகிறது என்கிறார்  பிரிட்டிஷ்  முஸ்லிம் கவுன்சிலின் பொது செயலாளர் ஹாரூன்  கான் . 

எமது மஸ்ஜித் நாள் பிரிட்டனின் ஆயிரக்கணக்கான  மக்களை மஸ்ஜித்  தினத்திற்கு    பள்ளிவாசல்களை  நோக்கி ஈர்த்திருக்கிறது. இம்மாதம்(  பிப்ரவரி  ) 5ல் மஸ்ஜித்  தினம் 150  மஸ்ஜித்களில்  நிகழ்த்தப்பட்டது. 

இங்கு வந்த  முஸ்லிம் அல்லாத பிரிட்டன் மக்களுக்கு  இஸ்லாமிய   மார்க்கம் முஸ்லிம்  சமுதாயம்   குறித்த  அவரவர் ஐயங்களை  கேட்டாலும்   தெளிவாக்கும்  வண்ணம்  இஸ்லாமிய நெறி குறித்தும் முஸ்லிம்  சமுதாயம் குறித்தும் என்ன விதமான கேள்விகளை கேட்டாலும் அவர்களது   அனைத்து  வித சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தும்  மேலும் கேள்விகள்  கேட்க கலந்து   கொண்டவர்களுக்கு  ஊக்க மளிக்கப்பட்டது.  

பிரிட்டனில் உள்ள முஸ்லிம்  கவுன்சில் மஸ்ஜித் தினத்தன்று வாருங்கள் என்பதை பிரபலப்படுத்த அது குறித்த பரப்புரை ஆவணப்படம் ஒன்றை   தயாரித்து அழைப்பு விடுத்தனர் . 

முஸ்லிம் சமுதாயம் குறித்து சர்வதேச அளவில் பல வெகுஜன ஊடகங்கள்   நெருடலுக்குரிய  கற்பிதங்களை   தலைப்பு   செய்திகளாக்கி  இஸ்லாம் போபியா , போன்ற  சமூகத்தை பிளக்கும்  தலைப்புகளை   பரப்புவதை  முறியடிக்கும்  விதமாக இந்த  அரிய  பணி  முன்னெடுக்கப்பட்டது. 

அறச்சாலைகள்

மஸ்ஜிதுகள் ஆன்மீக கேந்திரங்களாக மட்டும் விளங்கவில்லை. பிரிட்டனில்  பல்வேறு பகுதிகளில் வாழும் எல்லா சமூக மக்களுக்கும் சேவைப்பணிகள் செய்யும்  அறச்சாலைகளாகவும் திகழ் கின்றன. வீடற்றவர்களுக்கு உணவளிக் கும்    திட்டம்,  மஸ்ஜித்  அமைந்துள்ள பகுதிகளின் வீதிகளை தூய்மைப்படுத்தும் திட்டம் உள்ளிட்ட  பணிகளையும்  செய்கின்றனர். 

எடுத்துக்காட்டாக மான் செஸ்டரில் உள்ள ஹிர்ஷா  மஸ்ஜித்   மாதாந்திர  உணவு சேகரிப்பு  திட்டத்தின் வாயிலாக உள்ளூர் மக்களுக்கு இன  மத பேதம் இன்றி உணவு வழங்கி வருகிறது. 

 லீ செஸ்டர் டைனில்  செயல்படும்  முஸ்லீம் கூட்டமைப்பு கேளென்  பீல்டு  மருத்துவமனைக்கு புதிய ஸ்கேனர்  கருவிகளை நன்கொடை அளித்துள்ளது இது  வெறும் மூன்று வாரங்களில் 20 ஆயிரம்  பவுண்டுகளை சேவை நிதிக்கென திரட்டி அன்பளித்துள்ளனர். கிழக்கு லண்டன் மஸ்ஜிதில் தொழுகைக்கு வரும் மக்கள்   அளித்த நிதி  உதவியால் வீடற்ற  மக்களுக்கு கிறிஸ்துமஸ்  தினத்தன்று  எளிய  மக்களுக்கு 10 டன்  அளவுக்கான உணவு அளிக்கப்பட்டது. புனித  ரமலான் மாதத்தில் 100  மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்புள்ள உதவிகளை செய்ய திட்டமிட்டு சாதித்து காட்டும்  ஆர்வத்துடன் உள்ளனர்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந், வேல்ஸ் மற்றும்  வடக்கு அயர்லாந்து   மஸ்ஜிதுகள் எமது மஸ்ஜித் தினத்தில் சிறப்புடன்  பங்கேற்று பிரிட்டனின்  பல் சமூக மக்களை வரவேற்று சிற்றுண்டியுடன் உபசரித்து சகோதரத்துவம், சமத்துவம்  பேணினர். 

இனி பிரிட்டனில் காற்று வீசும் திசையெங்கும் மஸ்ஜித்  தினத்தின்   பெருமிதங்களை பேசும்.  நாமும் வாழ்த்துவோம்  பிரார்த்திப்போம் .

-ஹபிபா பாலன்


Who's Online

We have 55 guests and no members online